
சென்னை:
படம்: மார்க்
நடிப்பு: கிச்சா சுதீப், யோகி பாபு, விக்ராந்த், நவீன் சந்திரா. குரு சோமசுந்தரம் மற்றும் பலர்
தயாரிப்பு: சத்யஜோதி பிலிம்ஸ்
இசை: அஜனீஸ் லோக்நாத்
ஒளிப்பதிவு: சேகர் சந்திரா
இயக்கம்: விஜய் கார்த்திகேயா
பிஆர்ஓ: சுரேஷ் சந்திரா ( D ‘One)
ஒரு மிகப்பெரும் ரௌடி சாம்ராஜ்யத்தை நடத்தி வருகிறார் நவீன் சந்திரா. இவரின் தம்பியான விக்ராந்த் தனது காதலியுடன் ஓட்டம் பிடிக்கிறார். இதனால் கோபம் கொண்ட நவீன், தனது தம்பி விக்ராந்தை கொல்ல வேண்டும் என்று துடிக்கிறார். நவீன் சந்திராவின் பிடியிலிருந்து தப்பிக்கவும் பணத் தேவைக்காகவும் சில குழந்தைகளை கடத்தி வைத்திருக்கிறார் விக்ராந்த்.
இந்நிலையில் கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்பதற்காக களத்தில் இறங்குகிறார் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி மார்க் (கிச்சா சுதீப்). அதுமட்டுமல்லாமல் கடத்தப்பட்ட குழந்தையின் கையில் இருக்கும் செல்போனில் இன்னும் ஒரு நாளில் முதல்வராக ஆக இருக்கும் பிரபல அரசியல்வாதி ஒருவரின் கொலை செய்த வீடியோ ஆதாரம் இருக்கிறது. அதனை அழிப்பதற்காக போலீஸ் படையை அனுப்புகிறார் அந்த அரசியல்வாதி.
இறுதியில் குழந்தைகளை கிச்சா சுதீப் காப்பாற்றினாரா இல்லையா என்பதை படத்தின் மீதி கதை.
கிச்சா சுதீப் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்.பி. யாக ஆதிக்கம் செலுத்தி முழுப் படத்தையும் தன் தோள்களில் சுமந்துள்ளார். காக்கி சட்டை போடாமலேயே போலீஸ் கடமையை செய்யும் சுதீப், தனது அதிரடியான நடிப்பு மூலம் படம் முழுவதும் மாஸாக வலம் வருகிறார். போதையில் காவல் நிலையத்தில் அறிமுகமாகும் காட்சி முதல், இறுதியில் வசனம் பேசும் காட்சி வரை, தனி ஒருவராக முழு படத்தையும் தன் தோளில் சுமந்து பார்வையாளர்களின் கவனம் முழுவதையும் தன் பக்கம் ஈர்த்து விடுகிறார்.
ஹீரோவாக சில படங்களில் மிரட்டி வந்த நவீன் சந்திரா இந்தப் படத்தில் முழுக்க முழுக்க வில்லனாக ஆக்ரோஷமாக நடித்து மிரட்டி இருக்கிறார். தன் பார்வையிலேயே கொடூரத்தை வெளிப்படுத்தி பார்வையாளர்களை நடுங்க வைத்து விடுகிறார்.
குருசோமசுந்தரத்தின் பாத்திரப்படைப்பு சிறிது என்றாலும் தன் தேர்ந்த நடிப்பால் அதைப் பெரிதாக்கி தன் இருப்பைப் பெரிதாகப் பதிவு செய்திருக்கிறார்.
சிறிய வேடமென்றாலும் சிறப்பாக நடித்து தன் பங்கை நிறைவாகச் செய்ய முயன்று வரவேற்புப் பெறுகிறார் விக்ராந்த்.
யோகி பாபு வரும் இடங்களில் காமெடி பெரிதாக எடுபடவில்லை என்றாலும் படத்திற்கு அடையாளமாக பயணித்திருக்கிறார்.
ரோஷ்னி பிரகாஷ், தீபிக்ஷா, ட்ராகன் மஞ்சு, கோபால்கிருஷ்ணன் தேஷ்பாண்டே, அபிஷேக் ஜோசப் ஜார்ஜ், அர்ச்சனா கோட்டி உள்ளிட்ட மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடித்திருக்கிறார்கள்.
சேகர் சந்துரு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.அவருக்குத் தோதான கதைக்களம் அமைந்திருப்பதால் புகுந்து விளையாடியிருக்கிறார்.
பி.அஜ்னீஸ் லோக்நாத் இசையில் பாடல்கள் துள்ளல் இரகம்.பின்னணி இசையில் கதாபாத்திரங்களின் பிம்பங்கள் பன்மடங்கு உயர்ந்திருக்கின்றன.
எழுதி இயக்கியிருக்கும் விஜய் கார்த்திகேயா, சாதாரண மையக்கரு என்றாலும், அதற்கான திரைக்கதையை சுவாரஸ்யமாக வடிவமைத்திருப்பதோடு, சுதீப் போன்ற மாஸ் ஹீரோவுக்கான மாஸ் ஆக்ஷன் படமாகவும் இயக்கியிருக்கிறார். தொடக்கம் முதல் இறுதிவரை நாயகன் கிச்சா சுதீப்பை கொண்டாடும் வகையில் காட்சிகள் வசனங்கள் பில்டப்கள் எல்லாம் படம் முழுக்க நிறைந்திருக்கின்றன.
மொத்தத்தில், ‘மார்க்’ மாஸ் படம்.
ரேட்டிங் 3/5.