
CHENNAI:
படம்: பராசக்தி
நடிப்பு: சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீ லீலா, குலப்பள்ளி லீலா, குரு சோமசுந்தரம், சேத்தன், ராணா டகுபதி, காளி வெங்கட் மற்றும் பலர்
தயாரிப்பு: டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன்
கதை: சுதா கொங்கரா, அர்ஜுன் நடேசன்
வசனம்:சுதா கொங்கரா, அர்சுன் நடேசன், மதன் கார்க்கி, ஷான் கருப்பசாமி
இசை: ஜி வி. பிரகாஷ்
ஒளிப்பதிவு: ரவி கே சந்திரன்
இயக்கம்: சுதா கொங்கரா
ரிலீஸ்: இன்பம் உதயநிதி ரெட் ஜெயன்ட் மூவிஸ்
பிஆர்ஓ: சதீஷ் ( AIM), சிவா.
தமிழ் திரையுலகில் இதுவரையிலும் பெண் இயக்குநர்கள் இயக்கிய திரைப்படங்கள் அரசியலை தொட்டுவிடாமல் பெண்களுக்கான உரிமைகளை நிலைநாட்டுவது.. பெண்களுக்காண பிரச்சனைகளை பேசுவது என்று சில படங்கள் வெளி வந்திருந்தாலும் ஒரு விதிவிலக்காக சுதா கொங்காரா என்ற இந்த பெண் இயக்குநர் தான் இயக்கிய ‘இறுதிச் சுற்று’ திரைப்படத்திலும், ‘சூரரைப் போற்று’ திரைப்படத்திலும் எண்ணற்ற விருதுகளை பெற்று குவித்தார். தற்போது சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இந்த ‘பராசக்தி’ என்ற திரைப்படம் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவிற்கும் பெருமை சேர்க்கும் படமாக வெளிவந்துள்ளது.
மொழிப் பிரச்சனை என்பது இனி எத்தனை வருடங்கள் ஆனாலும் இந்தியாவில் ஒரு மிகப் பெரிய அரசியல் நிலைப்பாடாகத்தான் இருக்கும். அப்படி ஒரு சென்சிடிவான பிரச்சனையை கையில் எடுத்து அனைவருக்கும் பிடிப்பதுபோல இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சுதா கொங்காரா.
கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் இந்தி திணிப்புக்கு எதிராக புறநானூறு படை என்ற இளைஞர் படையின் தலைவனாக இருந்து ரயில்களை மறித்து போராட்டம் பண்ணுவது, பெட்டிகளை எரித்து எதிர்ப்பை காட்டுவது என்று தமிழ் மொழிக்கு ஆதரவாக பெரும் திரளாக போராட்டத்தை வழி நடத்துகிறார். ஒருகட்டத்தில் தனது நண்பனின் இழப்பால் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு தொடர்வண்டித் துறையில் சாதாரண ஊழியராக வேலை பார்த்து வருகிறார். அந்த நேரத்தில் பிரதமர் ஜவஹர்லால் நேரு 1965 வரை இந்தி மொழியை திணிக்க மாட்டோம், அவரவர் தாய் மொழியிலே அலுவல்கள் மேற்கொள்ளலாம் இணைப்பு மொழியாக ஆங்கிலம் இருக்கும் என்று வாய் மொழி உத்தரவு பிறப்பிக்கிறார்.
அப்போது இந்தியா முழுவதும் இந்தி மொழி கட்டாயம் பள்ளிகளில் சொல்லித் தர வேண்டும். மாணவர்கள் இந்தியை படித்தே தீர வேண்டும் என்ற உத்தரவு ஒன்றிய அரசிடமிருந்து மாநிலங்களுக்கு வருகிறது. இந்த சூழலில் மத்திய அரசில் உள்ள அமைச்சரின் மகள் ஸ்ரீலீலாவும், சிவகார்த்திகேயனின் தம்பி கல்லூரி மாணவனான அதர்வாவுடன் சேர்ந்து இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டங்களில் வெளியே தெரியாமல் கலந்துகொள்கிறார் . தெலுங்கு மொழிப் பேசும் பெண்ணாக இருந்தாலும் மொழி உரிமையின் வலியை புரிந்து கொண்டு இந்த போராட்டத்திற்கு துணை நிற்கிறார் கல்லூரி மாணவனான அதர்வா வெளியே தெரியாமல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளும்போது ஒரு கட்டத்தில் அண்ணன் சிவகார்த்திகேயன் கண்டுபிடித்து அதற்கு எதிர்ப்பும் தெரிவிக்கிறார். ஆனால் அதர்வா தன்னுடைய கொள்கையில் தீவிரமாக இருக்க தம்பியின் காலை உடைத்து வீட்டிலேயே முடங்க செய்து விடுகிறார்.
இதற்கிடையே, போராட்டங்களை கட்டுப்படுத்தி, போராட்டக்காரர்களை அழித்து ஒழிப்பதற்காக மத்திய அரசால் நியமிக்கப்படும் ஐபிஎஸ் அதிகாரியான ஜெயம் ரவி, தனது பணியில் வெறித்தனமாக செயல்படுகிறார். இந்தித் திணிப்புக் கொள்கையினால் தமிழர்கள் பல்வேறு வகையில் பாதிக்கப்படுகிறார்கள். சிவகார்த்திகேயனும் இந்தி மொழியால் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்படுகிறார். மறுபக்கம் அவரது தம்பி அதர்வா மற்றும் அவரது நண்பர்கள் இந்தித் திணிப்புக்கான தங்களது போராட்டங்களைத் தீவிரப்படுத்துகிறார்கள். அப்போது தமிழ் நாட்டின் முதல்வராக இருந்தவர் இந்த மொழிப் போராட்டத்தை எப்படியாவது எந்த வகையிலாவது தடுத்து நிறுத்தி விட வேண்டும் என்று துடிக்கிறார். ஆனால் அதற்கு வாய்ப்பே தராமல் கல்லூரி மாணவர்கள் போராட்டம் மக்களின் ஆதரவோடு நடைபெற்றுக் கொண்டிருக்க, ஐபிஎஸ் அதிகாரியான ஜெயம் ரவி அந்தப் போராட்டத்தை அடக்க துணை ராணுவ படையையே அழைத்து வருகிறார். அவர் அழைத்து வந்த ராணுவத்தினரும் போராட்டத்தை கலைக்க துப்பாக்கி குண்டுகளை பயன்படுத்துகிறார்கள். இந்தத் துப்பாக்கி சூட்டில் சிவ கார்த்திகேயனின் தம்பி அதர்வா பரிதாபமாக உயிரிழக்கிறார். அதன்பின் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதை உணர்வுப்பூர்வமாகச் சொல்லியிருக்கின்ற படம்தான் “பராசக்தி”
கதையின் முழு நேர நாயகனான செழியன் என்ற கதாபாத்திரத்தில்சிவகார்த்திகேயன் அந்தக் கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து புரிந்து நடித்திருக்கிறார். செழியன் என்ற கதாபாத்திரத்தில் மொழிப்பற்று மிக்க மாணவராக நடித்திருக்கும் சிவகார்த்திகேயனின் துடிப்பு மிக்க நடிப்பு அவரது கதாபாத்திரத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது. ஆக்ரோஷ இளைஞராக களமிறங்கி இடையில் சாந்தமாக குடும்பத்தை கவனிக்கும் சாதாரண இளைஞராக பயணித்து இறுதியில் தன்னுடன் அடக்கி வைத்திருந்த தமிழ் மொழி வேட்கையால் எதிரிகளை சுட்டெரித்து துவம்சம் செய்யும் கதாபாத்திரத்தில் அசத்தி இருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் ஸ்ரீலீலா அழகான வரவு.அவர் கதாநாயகனைக் காதலிப்பதோடு நில்லாமல் கதையிலும் ஒரு பாகமாய் இருக்கிறார்.நன்றாக நடித்து இப்படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.
ஐபிஎஸ் அதிகாரியாக நடித்திருக்கும் ரவிமோகன், கண்களிலேயே வில்லத்தனம் காட்டி படம் பார்க்கும் அனைவரையும் மிரட்டுகின்ற அள்வுக்கு தான் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரத்துக்குப் பொருத்தமாக நடித்து பதை பதைக்க வைத்து கோபத்தை ஏற்படுத்துகிறார்.
அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதர்வா, இந்தி திணிப்புக்கு எதிராக பேசும் வசனங்கள் அனைத்தும் கவனம் ஈர்க்கிறது.
அரசியல் தலைவர் அண்ணாவாக சேத்தன், செழியனின் உயிர் நண்பனாக கோலி சோடா முதலாளி பிருத்விபாண்டியராஜன், பொள்ளாச்சியில் உதவிகரம் நீட்டும் காளி வெங்கட், பாட்டியாக கொலப்புளி லீலா, முதலமைச்சராக பிரகாஷ், கருணாவாக குரு சோமசுந்தரம், தெலுங்கு நடிகர் ராணா, மலையாள நடிகர் பசில் ஆகியோர் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
ஜி.வி.பிரகாஷ் இசையில் வெளியாகும் நூறாவது திரைப்படம் இது என்பதால் அவருக்கும் இது ஸ்பெஷலாகிவிட்டது.. பின்னணி இசை உணர்வுப்பூர்வமாக பயணித்து கதைக்களத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன், 1964 காலகட்டங்களில் நடக்கும் கதைக்களத்திற்கேற்ற வண்ணங்கள், இரவில் நடக்கும் சம்பவங்களை தத்ரூபமாக படம் பிடித்து, ரயில் சண்டை, ரயில் எரிப்பு, இந்தி திணிப்பு போராட்டங்கள், சண்டைக் காட்சிகள் என்று அனைத்தையும் அசத்தலுடன்படமாக்கி இருப்பதை பாராட்டலாம்.
இந்தியை எதிர்க்கவில்லை; இந்தித் திணிப்பையே எதிர்க்கிறோம் என்பதை மிக தெளிவுடனும், “நீதி பரவட்டும்” என்ற முழக்கமும் இன்றைய சமூதாயத்திற்க்கு பொருந்தும் அரசியல் சிந்தனையாக இந்தி திணிப்புக்கு எதிராக களமிறங்கிய மாணவர்களின் புரட்சி, அதிகார துஷ்பிரயோகம், மொழி அரசியல், அரசியல் கொள்கை கொண்ட தலைவர்கள், அரசியல் மற்றும் மக்களை ஒன்றிணைத்த போராட்ட களங்கள் ஆகியனவற்றை ஒன்றிணைத்து ஒரு மொழியின் பாதிப்பை அனைத்து மக்களும் எளிமையான முறையில் புரிய வைத்திருக்கிறார் இயக்குனர் சுதா கொங்கரா. தேர்தல் பிரச்சார மேடைகளில் ஒரு உண்மையையே பேசாமல் பொய்களை பரப்பி வரும் சூழலில் இயக்குநர் சுதா கொங்காரவின் இந்த படைப்பு நிச்சயம் வரவேற்கத்தக்கது. அவருக்கு பாராட்டுக்கள்.
மொழி பிரச்சனையை ஆழமாக சொல்லும் படம்தான் “பராசக்தி ‘
…ரேட்டிங் 4/5