‘தாய் கிழவி’ திரைப்பட விமர்சனம்!

35

 

CHENNAI:

படம்: தாய் கிழவி

நடிப்பு: ராதிகா சரத்குமார், முனிஷ்காந்த், சிங்கம் புலி, அருள்தாஸ், பால சரவணன், இளவரசு, முத்துக்குமார் ஜார்ஜ் மரியன், ரேச்சல் ரெபகா

தயாரிப்பு: சுதன் சுந்தரம், சிவகார்த்திகேயன் (பேஷன் ஸ்டுடியோஸ் அண்ட் சிவகார்த்திகேயன் ப்ரொடக்க்ஷன் )

இசை: நிவாஸ் கே பிரசன்னா

ஒளிப்பதிவு : விவேக் விஜயகுமார்

இயக்கம்: சிவகுமார் முருகேசன்

பிஆர்ஓ : சுரேஷ் சந்திரா (D’One), அப்துல் ஏ நாசர்.

அந்த கிராமத்தில் யாருக்கும் அடங்காத ஓர் ஆளுமையாக பவுனுத்தாயி என்கிற தாய் கிழவியாக இருக்கும் ராதிகா யாருக்கும் பயப்படாமல்  அந்த ஊரையே ரவுண்டு கட்டி அடிக்கும் துணிச்சல் உள்ளவராக வலம் வருகிறார். அவரைக் கண்டால் அனைவருக்கும் பயம். வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்பது அவரது போக்காக இருக்கிறது.சொந்த வீடு வாங்கி வட்டிக்கு விடும் தொழிலும் நடத்துகிறார். அடாவடி குணமும் யாருக்கும் அஞ்சாத மனமும் கொண்ட அவரது மகன்கள் பொறுப்பற்றவர்களாகச் சுற்றி திரிகிறார்கள் .அனைத்து அதிகாரங்களையும் தனக்குள் வைத்துக் கொண்டு குடும்பத்தை ஆட்டிப் படைக்கும் ராதிகா தான் சம்பாதித்ததை தான் தான் அனுபவிக்க வேண்டும் அதிகாரம் அனைத்தும் தனக்கே என்கிற குணம் கொண்டவர் .

வட்டிக்கு பணம் கொடுக்கும் அவர், அதை வசூலிப்பதில் கறாராக  இருப்பதால், ஊர் மக்கள் அவரை பார்த்தாலே அச்சப்படுவதோடு, அவர் எப்போது இறப்பார் என்ற எண்ணத்தோடும் இருக்கிறார்கள். அதேபோல், அவரது மூன்று மகன்களும், ஒரு மருகனும் சொத்துக்காக அவரது இறப்பை எதிர்நோக்கி இருக்கிறார்கள். ஒருநாள் திடீரென நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் விழுகிறார்.அவர் மரணத்தை எதிர்பார்த்து எல்லோரும் காத்திருக்கும் நேரத்தில் அவர் பெருமதிப்பிலான தங்கம் வாங்கி பதுக்கி வைத்திருக்கும் தகவல் கிடைக்கிறது.அதனால் அவரைக் காப்பாற்றி அந்தத் தங்கத்தைக் கைப்பற்ற மகன்கள் முயல்கிறார்கள்.  அந்த தங்கநகைகள் அவர்களுக்கு கிடைத்ததா? தாய் கிழவியின் உடல்நிலை என்ன ஆனது? என்பதே ’தாய் கிழவி’ படத்தின் மீதிக் கதை.

தாய்க்கிழவியாக கதையின் நாயகியாக நடித்திருக்கும் ராதிகாவுக்கு இது ஒரு வாழ்நாள் படம்.நடிப்பில் அவர் ஏற்கெனவே தன்னை நிரூபித்தவர் என்றாலும் இதுவரை ஏற்காத தண்டட்டி கிழவி வேடமேற்று அதை அச்சு அசலாக வெளிப்படுத்தி அமோக வரவேற்புப் பெறுகிறார்.

மகன்களாக நடித்திருக்கும் சிங்கம்புலி, அருள்தாஸ், பால சரவணன் ஆகியோர் வேடங்களும் அவற்றில் அவர்கள் நடிப்புகளும் ஒன்றுக்கொன்று இயைந்து நின்று இரசிக்க வைக்கின்றன.

மகளாக நடித்திருக்கும் ரேச்சல் ரெபக்கா நல்லதேர்வு.பொருத்தமான நடிப்பு.

இளவரசு, முனீஸ்காந்த்,முத்துக்குமார், ஜார்ஜ்மரியான் ஆகிய அனுபவ நடிகர்களை அழகாகக் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

விவேக் விஜயகுமாரின் ஓளிப்பதிவில், மதுரை மாவட்ட கிராமங்களுக்குச் சுற்றுப்பயணம் செய்த உணர்வு ஏற்படுகிறது.

நிவாஸ் கே.பிரசன்னா இசையில் முருகன் பாடல் நன்று.பின்னணி இசை திரைக்கதையோடு மிகவும் இசைந்திருப்பதால் கூடுதல் பலம்.

கதை  எழுதி இயக்கியிருக்கும் சிவகுமார் முருகேசன், பெண்கள் சுயமாகவும், தைரியமாகவும், தன்னம்பிக்கையுடனும் வாழ வேண்டும் என்ற கருத்தை கிராமத்து மூதாட்டி ஒருவரின் மூலம் சொல்ல முயற்சித்து, அதை அழுத்தமாக தமிழ்நாட்டு கிராமங்களின் மண்மணத்தை உலகறியச் செய்யவேண்டும் என்கிற நோக்கில் ராதிகாவை மையப்படுத்தி கலகலப்பாகவும், கிராம மக்களின் வாழ்வியலாகவும் சொல்லியிருப்பதை பாராட்டலாம்.

மொத்தத்தில், ‘தாய் கிழவி’  மண் மனம் மாறாத சூப்பர் படம்.

ரேட்டிங் 3/5