’ஓ பட்டர்ஃப்ளை’ திரைப்பட விமர்சனம்

36

 

 

’ஓ பட்டர்ஃப்ளை’ திரைப்பட விமர்சனம்

நடிப்பு: நிவேதிதா சதீஷ், சிபி சந்திரன், அத்துல்ம் நாசர், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, கீதா கைலாசம்
இயக்கம்: விஜய் ரங்கநாதன்
இசை: வைசாக் சோமநாத்
தயாரிப்பு: ஆன்டில் சினிமா & பாலம்பூர் டாக்கீஸ் – வெங்கி, ஆனந்த் எஸ் ஷா, விஜய் ரங்கநாதன், நிஷா பாட்டியல்
இதன் காரணமாக அது நடக்கிறது, இது நடக்க நான் தான் காரணம், அவர் சொல்வது அப்படியே நடக்கும், என்று பல்வேறு தரப்பினர், பல்வேறு தருணங்களில் சொல்வதோடு, நம்புவதும் உண்டு. ஆனால், அப்படி எதுவும் இல்லை, நடப்பவை அனைத்தும் இயற்கையின் மூலம் தற்செயலாக நடப்பதே தவிர, அதற்கு மனிதர்கள் எந்த அடிப்படையிலும் காரணமாக இருக்க முடியாது, என்பதை காட்சிகளின் மூலம் விவரிப்பது தான் கதை.
 திருமணமாகி சில மாதங்களில் கணவரை இழந்த நிவேதிதா சதிஷ், மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பதோடு, தன்னை சுற்றியிருப்பவர்கள் பாதிப்புக்குள்ளாவதற்கு தான் தான் காரணம் என்று நினைக்கிறார். தான் இறந்தால் அனைத்தும் சரியாகி விடும் என்ற மனநிலைக்கு வருபவர் தற்கொலை முயற்சியிலும் ஈடுபடுகிறார். அப்போது, அவருக்கு ஆலோசனை வழங்கி உண்மையை புரிய வைக்கும் முயற்சியில் துறவறம் பூண்ட அவரது சகோதரி லட்சுமி பிரியா ஈடுபடுகிறார். தன் திருமண வாழ்க்கை மற்றும் முதல் காதல் பற்றிய விபரங்களை பகிர்ந்து கொள்ளும் நிவேதிதா சதிஷ், தன் கணவரை தான் தான் கொலை செய்ததாக கூறி அதிர்ச்சியளிக்கிறார். அவர் அப்படி சொல்வது ஏன்?, அவரது கணவர் இறப்பின் உண்மை பின்னணி என்ன ? என்பதே படத்தின் மீதிக்கதை.
கதையின் நாயகியாக நடித்திருக்கும் நிவேதிதா சதிஷ், பலம் வாய்ந்த கதாபாத்திரத்தில் மிக சாதாரணமாகவே நடித்திருக்கிறார். ஒரு பக்கம் ஏமாற்றிய முன்னாள் காதலன், மறுபக்கம் கணவர் என்று இறுதலைக் கொள்ளி எறும்பு போல் தவிக்கும் சூழலை, தனது நடிப்பின் மூலம் சரியாக கையாள தவறியிருக்கிறார். உண்மை தெரிந்த பிறகு, முன்னாள் காதலன் மற்றும் கணவர் பதற்றமான மனநிலையில் இருக்க, நிவேதிதா மட்டும் மிக சாதாரணமாக எந்தவித பதற்றத்தையோ, பயத்தையோ தன் நடிப்பில் வெளிப்படுத்தாமல், அந்த காட்சியின் பலத்தை குறைத்து பலவீனப்படுத்தி விடுகிறார்.
நிவேதிதாவின் முன்னாள் காதலராக நடித்திருக்கும் சிபி சந்திரன், கணவராக நடித்திருக்கும் அதுல் இருவரும் தங்களது வேலையை குறையின்றி செய்திருக்கிறார்கள். குறிப்பாக அதுல் அதீதமாக நடிக்க கூடிய வாய்ப்புகள் இருந்தும், அளவாக நடித்திருப்பது பார்வையாளர்களுக்கு பெரும் ஆறுதல் அளித்திருக்கிறது.
சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் தனது அனுபவம் வாய்ந்த நடிப்பின் மூலம் படத்திற்கு பெரும் அடையாளமாக நாசர் பயணப்பட்டிருக்கிறார். துறவறம் பூண்ட சகோதரியாக நடித்திருக்கும் லட்சுமி பிரியா சந்திரமெளலி குழப்பம் நிறைந்த மனங்களை தெளிவுப்படுத்தும் பணியை சிறப்பாக செய்திருக்கிறார். கீதா கைலாசம் கதாபாத்திரமும் கவனம் ஈர்க்கிறது.
வைசாக் சோமநாத் இசையில் பாடல்கள் எதுவும் மனதிலும், நினைவிலும் நிற்கவில்லை. பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் வேதராமன் சங்கரன், சிறு சிறு சம்பவங்கள் கூட திரைக்கதையில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை தன் கேமரா மூலம் புரிய வைத்திருக்கிறார்.
படத்தொகுப்பாளர் புவனேஷ் மணிவண்ணன், ஆரம்பத்தில் குழப்பத்தோடு பயணிக்கும் திரைக்கதையை இறுதியில் மிக தெளிவாக விவரித்து, பார்வையாளர்களுக்கு புரிய வைத்து விடுகிறார்.
எழுதி இயக்கியிருக்கும் விஜய் ரங்கநாதன், அனைத்து செயல்களும் தற்செயலாக நடக்கிறதே தவிர அதற்கு யாரும், எந்த வகையிலும் காரணமாக இருக்க முடியாது என்பதையும், ஒரு உயிர் போவதற்கு காரணமாக இருக்கும் சம்பவமே, மற்றொரு உயிர் பிழைப்பதற்கும் காரணமாக அமையும், என்ற தத்துவத்தை காட்சிகள் வாயிலாக விவரித்திருக்கிறார்.
திரைப்படங்களில் பல்வேறு தத்துவங்கள் பேசப்படும், ஆனால், சில தத்துவங்களையே காட்சி மொழியில் திரைப்படமாக கொடுக்க முயற்சித்திருக்கும் இயக்குநர் விஜய் ரங்கநாதன், அதை அனைத்து தரப்பினருக்கும் புரியும்படி சொல்ல தவறியிருப்பதோடு, மிக பொறுமையாகவும் சொல்லி, பார்வையாளர்களின் மனநிலையை சோதித்திருக்கிறார்.
மன உளைச்சல், முடிவெடுக்க முடியாத தடுமாற்றம் மற்றும் இருதரப்பு அழுத்தங்களுக்கு இடையில் சிக்கிக்கொண்ட ஒரு பெண்ணின் மனநிலையை விவரிப்பது மற்றும் அதை காட்சிகளாக திரையில் வெளிக்காட்டுவது ஆகியவை படத்தை ரசிக்க வைத்தாலும், அவை அனைத்தும் மிக மெதுவாக நகர்வது படத்தை தொய்வடைய செய்து விடுகிறது.
மொத்தத்தில், ‘ஓ பட்டர்ஃப்ளை’ பிடிக்க பொறுமை தேவை.

 

ரேட்டிங் 3/5