‘அனோமி’ திரைப்பட விமர்சனம்!

47

 

சென்னை:

படம்: அனோமி

நடிப்பு : பாவனா, ரகுமான்,
ஷெபின் பென்சன், விஷ்ணு அகஸ்தியா, பினு பாப்பு, அர்ஜுன் லால், அபிஷேக் பதக்,

தயாரிப்பு : குமார் மங்கத் பகத், பாவனா, ஆதித் பிரசன்ன குமார்

இசை: ஹர்ஷவர்தன் ராமேஸ்வர்

ஒளிப்பதிவு: சுஜித் ஷாரங்

இயக்கம்: ரியாஸ் மரத்

பிஆர்ஓ : ஸ்ரீ வெங்கடேஷ்.

ஒரு விபத்தில் தனது தாய் மற்றும் தந்தையை இழந்துவிடுகிறார் பாவனா. தனது தம்பியான ஜியானை வளர்த்து வருகிறார் பாவனா. விபத்தில் உடன் இருந்ததால் மன ரீதியான ஒரு சில பிரச்சனைகள் ஜியானுக்கு இருப்பதால் அவரை எங்கேயும் வெளியே அனுப்பாமல் வளர்த்து வருகிறார் பாவனா. தடயியல் நிபுணராக வேலை பார்த்து வருகிறார் பாவனா. தற்கொலை செய்து கொண்ட வாலிபர் ஒருவரின் வழக்கை நேரில் சென்று தடயங்களை ஆராய்ந்து விட்டு, வீட்டிற்கு வரும் பாவனா, அங்கு தனது தம்பி ஜியான் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்து பல இடங்களில் தேடி அலைகிறார். மறுநாள், ஒரு இடத்தில் இறந்து கிடக்கிறார் ஜியான். என்ன செய்வதென்று தெரியாமல் பித்து பிடித்தவர் போல் ஆகிறார் பாவனா. வழக்கை கையில் எடுத்து விசாரிக்கிறார் இன்ஸ்பெக்டர் ரகுமான். இது தற்கொலை தான் என்று வழக்கை முடிக்க பார்க்கிறார் ரகுமான்.

ஆனால், இந்த விசயத்தில் காவல்துறை தொடர்ந்து மெத்தனம் காட்ட, மூன்றாவதாக இளம் பெண் ஒருவர் அதே பாணியில் கொலை செய்யப்படுகிறார். இதன் மூலம் தொடர் சைக்கோ கொலை என்பதை உறுதிப்படுத்தும் பாவனா, கொலையாளியை பிடிக்க களத்தில் இறங்குகிறார். இந்த முறை காவல்துறையும் தீவிரம் காட்ட, வழக்கு சூடுபிடிக்க தொடங்குகிறது. இப்படித் தற்கொலை எண்ணம் கொண்டவர்களைக் குறி வைத்து அவர்களை வேறொரு தீய சக்தி தொடர்ந்து கொலை செய்து வருவது தெரிகிறது. தொடர்ந்த தேடலில்   ஒருவனைக் கண்டுபிடிக்கிறார்கள்.அவன் இது கொலை அல்ல என்றும் இது ஒரு ஆராய்ச்சி என்றும் கூறுகிறான். ஏனென்று கேட்கிற போது அவன் கூறும் சொற்கள் அதிர்ச்சி ஊட்டுகின்றன. இப்படிப்பட்ட கதையின்  முடிவு என்ன என்பதுதான் ‘அனோமி’ படத்தின் மீதிக் கதை.

தடவியல் நிபுணராக நடித்திருக்கும் பாவனா,அதற்கேற்ற முதிர்ச்சியைக் கொண்டிருக்கிறார்.ஒவ்வொரு மில்லிமீட்டரையும் துல்லியமாக ஆராய்ந்து அவர் திரட்டும் தடயங்கள், அவற்றின் மூலம் கொலையாளியை அவர் நெருங்கும் விதம் ஆகிய எல்லா இடங்களிலும் மிகப் பொருத்தமாக நடித்து அந்த வேடத்துக்கும் படத்துக்கும் பலம் சேர்த்திருக்கிறார்.

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ரஹ்மானின் கதாபாத்திரம் ஆரம்பத்தில் சாதாரணமாக பயணித்தாலும், இரண்டாம் பாதியில் கதையை சுமந்து, பாவனாவுக்கு தோள் கொடுக்கும் கதாபாத்திரமாக கவனம் ஈர்க்கிறது. தனது அளவான நடிப்பு மூலம் படத்திற்கு ரஹ்மான பலம் சேர்த்திருக்கிறார்.

பாவனாவின் தம்பி ஷெபின் பென்சன்,காதலன் அர்ஜுன்லால் மற்றும் பினு பப்பு, விஷ்ணு அகஸ்தியா ஆகிய நடிகர்கள் பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் திரைக்கதைக்காக முக்கிய பங்காற்றியிருக்கிறார்கள்.

ஹர்ஷவர்தன் இராமேஸ்வரின் இசையில் பாடல்கள் கதையோடு இசைந்திருப்பதால் கேட்கும் ரகம்தான். பின்னணி இசையில் ரசிகர்களை அதிர வைக்கிறார்.

ஒளிப்பதிவாளர் சுஜித்சாரங்,திரைக்கதையில் சொல்லப்பட வேண்டிய செய்திகளைக் காட்சியில் சொல்ல நினைத்து வெற்றி பெற்றிருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கும் ரியாஸ்  மராத், கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் சைக்கோ திரில்லர் ஜானர் படம் என்றாலும், கொலைக்கான காரணத்தை வித்தியாசமாக கையாண்டிருப்பதோடு, அதை காட்சிப்படுத்திய விதத்தை தொழில்நுட்ப ரீதியாக பிரமாண்டமாகவும், புதிதாகவும் படமாக்கி  முற்றிலும் வித்தியாசமாக யோசித்து அதற்கேற்ப திரைக்கதையையும் அமைத்திருக்கிறார். அவருடைய தொழில்நுட்பக் குழுவினரும் சரியாக ஒத்துழைத்திருப்பதால் ஒரு விறுவிறு த்ரில் அனுபவத்தைப் ரசிகர்களுக்குக் கொடுத்திருக்கிறார்கள்.

மொத்தத்தில்,   ‘அனோமி’  கிரைம் திரில்லர் பட ரசிகர்களுக்கு விருந்து.

ரேட்டிங் 3/5.