‘கெணத்த காணோம்’ திரைப்பட விமர்சனம்!

33

 

CHENNAI:

படம் : கெணத்த காணோம்

நடிப்பு: யோகி பாபு, ரெய்ச்சல் ரெபாகா, லவ்லின் சந்திரசேகர், ஜார்ஜ் மரியான், ரமேஷ் கிருஷ்ணன், கவிதா பாரதி, ராமகிருஷ்ணன்

தயாரிப்பு: ஆர் ரமேஷ் பாபு, ஜெகன் பாஸ்கரன்

இசை: நிவாஸ் கே பிரசன்னா

ஒளிப்பதிவு : வி தியாகராஜன்

இயக்கம்: சுரேஷ் சங்கையா

பி ஆர் ஓ : ஸ்ரீ வெங்கடேஷ்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் தான் படத்தின் கதைக்களம். பல வருடங்களாக மழை பெய்யாததால் மழைக்காக ஏங்கி தவிக்கும் மக்கள் அங்கு இருக்கின்றனர். தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்களது கிராமத்திற்கு நீர் வேண்டி மனுக்களை கொடுத்துக் கொண்டே வருகின்றனர். ஆனால் எந்த பலனும் அதில் எட்டப்படவில்லை. பல்வேறு வகையில் தங்களது ஊருக்கு குடிநீரை கொண்டு வந்துவிட வேண்டும் என்ற மக்களின் முயற்சியின் பலனாக அங்கு தண்ணீர் ஓட்டம் இருப்பது கண்டறியப்படுகிறது. அந்த இடம் யோகி பாபுவின் வீடு என்பதால் ஊர் நன்மைக்காக அவரது வீட்டை கிராம மக்கள் கேட்கிறார்கள். அதற்கு சம்மதம் சொல்லும் யோகி பாபுவின் தாத்தா, போர் போடாமல் கிணறு வெட்டினால் இடத்தை கொடுப்பதாக சொல்கிறார். அதன்படி, ஊர் மக்கள் ஒன்று கூடி அந்த இடத்தில் கிணறு தோன்றுகிறார்கள். அப்போது அந்த பள்ளத்தில் தண்ணீருக்கு பதிலாக டைனோசரின் எலும்புகள் கிடைக்கிறது. அதன் பிறகு அந்த கிராமம் என்ன ஆனது.? கிராம மக்களின் கனவு நனவானதா இல்லையா என்பதே ‘கெணத்த காணோம்’  படத்தின் மீதி கதை.

இந்தப் படத்தில் கிராமத்துக் கோயில் பூசாரியாக வருகிறார் யோகி பாபு. கதையை மிகவும் தெளிவாக தேர்ந்தெடுத்து  நடித்து இருக்கிறார். கிராம வாழ்க்கையின் இயல்பான தன்மையை அவர் நன்றாக வெளிப்படுத்துகிறார். சில உணர்ச்சிகரமான காட்சிகளில் அவரது நடிப்பு கவனிக்க வைக்கிறது.

யோகிபாபுவின் காதலியாக லவ்லின் சந்திரசேகர் நடித்திருக்கிறார். ஆங்காங்கே தலைக்காட்டி சில வசனங்கள் பேசினாலும், அவரது கதாபாத்திரத்திற்கு திரைக்கதையில் பெரிய இடம் இல்லை என்பதே உண்மை. அவருக்கு இன்னும்  கூடுதலாகப் காட்சிலளைக் கொடுத்து நன்றாக பயன்படுத்தியிருக்கலாம் என்று எண்ண வைத்திருக்கிறார்.

தொல்லியல் துறை அதிகாரியாக நடித்திருக்கும் ரைச்சல் ரபெக்கா மற்றும் அவரது உதவியாளராக நடித்திருக்கும் ராமகிருஷ்ணன் கதாபாத்திரங்களுங்களுக்கு பொறுத்தமான தேர்வாக இருக்கிறது.

மாவட்ட ஆட்சியராக நடித்திருக்கும் ஜார்ஜ் மரியன் இப்படத்திற்கு  சரியான தேர்வு என்றுதான் சொல்ல வேண்டும்.எல்லாப்படங்களிலும் சிரிக்க வைக்கிற யோகிபாபு இந்தப்படத்தில் நாயகனாகிவிட்டதால் நகைச்சுவைக்குப் பொறுப்பேற்றிருக்கிறார் ஹலோ கந்தசாமி.அந்தப் பொறுப்பைத் தட்டிக்கழிக்காமல் எல்லா இடங்களிலும் வாய்விட்டுச் சிரிக்க வைத்து படத்துக்குப் பெரும் பலமாக இருக்கிறார்.

நிவாஸ் கே பிரசன்னாவின் இசை படத்திற்கு நல்லதொரு பலத்தைக் கொடுத்திருக்கிறது. தியாகராஜனின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிதாகவே கை கொடுத்திருக்கிறது.

முழுக்க முழுக்க காமெடிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து இந்த படம் உருவாகி இருக்கிறது. காமெடியோடு சேர்த்து நல்லதொரு மெசேஜையும் இந்த படத்தின் கிளைமாக்ஸில் கொடுத்திருக்கிறார் இயக்குனர்  சுரேஷ் சங்கையா. குடிநீர் இன்றி தவிக்கும் கிராமங்களின் சோகமான கதையை, நகைச்சுவையாக சொன்னாலும், மக்கள் மனதில் ஆழமாக பதியும்படி சொல்லியிருக்கிறார்.

மொத்தத்தில், ‘கெணத்த காணோம்’  படம் அனைவரையும் சிந்திக்க வைக்கும்.

ரேட்டிங் 3/5.