‘போலீஸ் ஃபேமிலி’ திரைப்பட விமர்சனம்!

41

 

CHENNAI:

படம்: போலீஸ் ஃபேமிலி

நடிப்பு: ராஜா மலைச்சாமி, பருத்திவீரன் சரவணன், நிஷா துபே, சுரேகா ஆர், காதல் சுகுமார், ரோஜன் லியோன், ரத்தினம், தாஸ் சாந்தகுமார், எம் எஸ் செல்வா

தயாரிப்பு: மலைச்சாமி ஏ எம் ராஜா

இசை: ஜெயா கே தாஸ்

ஒளிப்பதிவு: ஜெயக்குமார் தங்கவேல்

இயக்கம்: பாலு எம்

பி ஆர் ஓ : ஏ ஜான்.

ஒருகாலத்தில் ரவுடியாக இருந்த சரவணன், தனது மகனின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு ரவுடித்தனத்தை விட்டுவிட்டு அமைதியான வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார். இந்த சூழலில் ஒரு நாள் கஞ்சா கடத்தல் வழக்கில் அவரது மகனை போலீசார் கைது செய்கிறார்கள்.  கஞ்சா வழக்கில் சிக்கிய அந்த இளைஞனை போலீசார் மிகக் கொடூரமாக அடித்துத் துன்புறுத்துகின்றனர். ஒரு கட்டத்தில் போலீசார் கடுமையாக தாக்கியதால்,  அவ்ருடைய தந்தை செல்வாக்கானவர் என்று தெரிந்ததும் அவரை ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் போட்டுவிடுகிறார்கள். அடுத்த நாள் அந்த இளைஞன் உயிரிழந்த நிலையில் பிணமாக கிடைக்கிறார்.  அந்த இளைஞன் கழுத்தை  நெறித்து கொல்லப்பட்டதாக தகவல் வருவதோடு, அவர் கொலை செய்யப்படுவதற்கு முன்பு காவல் நிலையத்தில் தாக்கப்பட்ட உண்மையும் அவரது தந்தை சரவணனுக்கு தெரிந்து விடுகிறது. தன் மகனின் மரணத்திற்கு காரணமான போலீசார்களை கண்டுபிடித்து அவர்களை பழிவாங்கும் முயற்சியில் சரவணன் ஈடுபடுகிறார். அவர்களுக்கு எதிராக ஒரு கொடூரமான வேட்டையைத் தொடங்கும்போது. தனது அதிகாரத்தையும் பலத்தையும் பயன்படுத்தி அந்தப் போலீஸ் அதிகாரிகளையும் அவர்களின் குடும்பங்களையும் சிதைக்கப் பார்க்கிறார். இந்த வேட்டையில் போலீஸ் குடும்பங்கள் தப்பித்ததா? உண்மையில் சரவணன் மகனை கொன்றது யார்? என்ற கேள்விகளுக்கு ‘போலீஸ் ஃபேமிலி’ படம் பார்த்தால் தெரியும்.

இக்கதையில் நாயகனாக நடித்திருக்கிறார் புதுமுகம் ராஜா மலைசாமி.அவர் ஏற்றுக்கொண்டிருக்கும் காவல்துறை உதவிஆய்வாளர் வேடத்துக்கேற்ற மிடுக்குடன் இருக்கிறார்.அதேநேரம் ஒரு பாசமிகு குடும்பத்தலைவனாகவும் கலங்க வைக்கிறார்.

முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் சரவணன், மகன் மீது பேரன்பு கொண்டு அதனாலேயே பெருங்கோபம் கொள்ளும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.அந்த வேடத்துக்கு அவரும் அவருடைய அனுபவமும் மிக உதவியாக அமைந்திருக்கிறது.

திரைக்கதையின் முக்கியமான திருப்பத்திற்கான கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார் காதல் சுகுமார்.தன் வழக்கமான நடிப்பைக் கைவிட்டு இந்த வேடத்துக்குத் தக்க நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் நிஷாதுபே வுக்குப் பெரிதாக வேலையில்லை.ஆனாலும், கொடுத்த வேலையைக் குறையில்லாமல் செய்து கவனம் ஈர்த்திருக்கிறார்.

சுரேகா.ஆர்,ரோஜன் லியோன்,ரத்தினம்,தாஸ் சாந்தகுமார்,எம்.எஸ்.செல்வா ஆகிய மற்ற நடிகர்களும் அளவாக நடித்து படத்தை சிறப்பு           செய்திருக்கிறார்கள்.

ஜெயகுமார் தங்கவேலின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்திருப்பதோடு, வண்ணமயமாக படமாக்கி இருக்கிறார்.

ஜெயா கே.தாஸின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஓரளவு ரசிக்க முடிகிறது.

தற்போது நமது நாட்டில் இருக்கும் சிக்கல்களில் முக்கியமானது காவல்நிலைய மரணங்கள்தான். காவல்துறையினரின் அதிகாரத் திமிரில் மட்டும் அப்படிப்பட்ட நிகழ்வுகள் நடக்கின்றன என்கிற ஒற்றைப் பார்வைக்கு மாற்றுப் பார்வையாக இப்படத்தின் கதையை எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் பாலு.எம். இந்த  ‘போலீஸ் ஃபேமிலி’  என்ற தலைப்பின் மூலம் ஒரு பக்கம் காவல்துறை குடும்பங்களையும், மறுபக்கம் ஒரு கேங்ஸ்டரின் குடும்ப பாசத்தையும் இணைத்து, விறுவிறுப்பான காட்சியமைப்புகள் மூலம் ஒரு நிறைவான பொழுது போக்கு படமாக  கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

மொத்தத்தில், ‘போலீஸ் ஃபேமிலி’  படத்தை பார்க்கலாம்.

ரேட்டிங் 3/5.