’கொலைச்சேவல்’ திரைப்பட விமர்சனம்!

45

 

சென்னை:

படம்: கொலைச் சேவல்.

நடிப்பு : கலையரசன், தீபா பாலு, பால சரவணன்,   ஆதவ் சந்திரா, கஜராஜ், விஜய் சத்யா, அகரன் வெங்கட், விஜயலட்சுமி, ஜெயலட்சுமி, ராஜாமணி,, தனலட்சுமி மஞ்சுளா கயல், மணிமேகலை

தயாரிப்பு: ஆர்பி பாலா, கௌசல்யா பாலா

இசை: சாந்தன்

ஒளிப்பதிவு: பி ஜி முத்தையா

இயக்கம்  வி ஆர். துதிவானன்

பி ஆர் ஓ : நிகில் முருகன்.

கதாநாயகி தீபா பாலு, பெற்றோரின் எதிர்ப்பை மீறி தான் காதலித்த நாயகன் கலையரசனை திருமணம் செய்து கொள்கிறார். திருமணத்திற்கு பிறகு தீபா பாலு கர்ப்பமாகிறார். வெளியூரில் அமைதியான வாழ்க்கை வாழ்ந்தவர்கள் மீண்டும் ஊருக்கு திரும்புகிறார்கள். ஊர் வழக்கப்படி, காட்டுப்பகுதியில் இருக்கும் நிறைசூலி தெய்வத்திற்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்தால் குழந்தை நல்லபடியாக பிறக்கும் என்பதால்,  நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் தீபா பாலு, தன் கணவர் உள்ளிட்ட குடும்பத்துடன் குல தெய்வ கோவிலுக்கு செல்கிறார்கள். இதனை அடுத்து தீபா பாலுவின் மாமானான ஆதவ் ஒரு கும்பலுடன்  காட்டுக்குள் குடித்துவிட்டு ,சீட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் .அவர்கள் யாரையோ எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும் புரிகிறது. குலதெய்வத்தை வணங்க சென்றாலும், மனதுக்குள் ஒருவித பயத்துடனும், பதற்றத்துடனும் செல்லும் தீபா பாலுவுக்கு சில தடங்கல்கள் ஏற்பட்டதால் மீண்டும் வீட்டிற்கு சென்று விடலாம் என்று கலையரசனிடம் கூறுகிறார். ஆனாலும் இருவரும் கோவிலுக்கு சென்று நிறைசூலி தெய்வத்தை கும்பிட்டு விட்டு,  பூஜை முடிந்து குடும்பத்தினர் புறப்பட்டு சென்றதும் தீபா பாலுவும், கலையரசனும் புறப்பட தயாராகிறார்கள். அப்போது  சீட்டு விளையாடிக் கொண்டிருந்த கூட்டம் இருவரையும் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்ட  முயல்கிறது. இறுதியில் அந்த கொலை கும்பலிடமிருந்து இருவரும் தப்பித்தார்களா? இல்லையா? என்பதுதன் “கொலை சேவல்” படத்தின் மீதிக் கதை.

கதாநாயகனாக நடித்திருக்கும் கலையரசன், இதற்கு முன்பே இதுபோன்ற கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், இதில் தனது எதார்த்தமான நடிப்பு மூலம் அனைவரையும் கவர்கிறார். ஒரு பாசமான கணவன் காளியாகவும், இக்கட்டான சூழலில் தனது மனைவியைக் காக்கப் போராடும் ஒரு இளைஞனாகவும் சிறந்த முறையில்  நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கும் தீபா பாலு, கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் அழகாகவும் நம்பிக்கையுடனும் நடித்துள்ளார். முதல் படமாக இருந்தாலும் நடிப்பில் எந்தவித குறை வைக்காமல் மிக சிறப்பாக நடித்திருக்கிறார்.

நகைச்சுவை நடிகர் பால சரவணனுக்கு இந்தப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரம்.வேடத்தின் இயலாமையை நடிப்பில் உணர்ந்து அதற்கேற்ப நடித்திருக்கிறார்.

கதையில் மிக முக்கிய வேடமேற்றிருக்கிறார் கஜராஜ்.பேசாமலே கதாபாத்திரத்தின் கொடூர சிந்தையை வெளிப்படுத்தக் கூடிய வேடம்.சரியாகச் செய்திருக்கிறார்.

விஜய் சத்யா, ஆதவ் சந்திரன், அகரன் வெங்கட், விஜலட்சுமி, ஜெயலட்சுமி, ராஜாமணி, தனலட்சுமி, மஞ்சுளா, கயல், மணிமேகலை என படத்தில் நிறைய நடிகர் நடிகைகள்.எல்லோரும் கிராமத்து மனிதர்களாகவே நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.

பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு கிராமத்து அழகையும், மக்களின் கொடூரமான மனங்களையும் எதார்த்தமாக காட்சிப்படுத்தி,  பசுமையான வயல் காடு, என்று அழகான ஓவியமாக படம் பிடித்திருக்கிறார்.

இசையமைப்பாளர் சாந்தனின் பின்னணி இசை படத்திற்கு ஒரு அளவுக்கு பலம் சேர்க்கிறது. சில காட்சிகளில் இசையின் மூலம் பதட்டத்தை உருவாக்க முயற்சி செய்து பதற வைக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கிறார் வி.ஆர்.துதிவாணன்.இன்றைய இந்தச் சமுதாயத்தில் நிறைந்திருக்கும் சாதிய ஆணவங்களையும் அதன் கொடூரங்களையும் மனதில் வைத்து கதை எழுதி இருந்தாலும், இப்படத்தில் பல குறைகள் தென்படுகின்றன. மனிதர்களுக்குள் இருக்கும் மிருகத்தனத்தை, அதுவும் பெற்ற தந்தையே மகளை கொலை செய்யும் காட்சிகள் நம் மனதை அதிர்ச்சி அடைய வைக்கின்றன. கொலைச்சேவல்’ மூலம் ஜாதி அவலங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியதோடு, பாதிக்கப்பட்டவர்களின் வலியை  மிகக் கொடூரமாகவும் மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் விதமாகவும் காட்சிப்படுத்தியிருப்பது பார்வையாளர்களுக்கு மிகுந்த பயத்தை ஏற்படுத்துகிறது.

மொத்தத்தில், ‘கொலைச்சேவல்’  படம் பயத்தால் நடுங்க வைக்கிறது.

ரேட்டிங் 2.5/5.