
CHENNAI:
படம்: மேட் இன் கொரியா
நடிப்பு: பிரியங்கா மோகன், பார்க் ஹை ஜின், நோ ஹோ ஜின், ரிஷிகாந்த், ஜாங் ஜெயோன்
தயாரிப்பு: ஸ்ரீநிதி சாகர்
இசை: ஹிசாம் அப்துல்
ஒளிப்பதிவு : பிரசன்ன குமார்
இயக்கம்: ரா கார்த்திக்
வெளியீடு: நெட் ப்ளிக்ஸ் OTT தளம்
பி ஆர் ஓ : சுரேஷ் சந்திரா.
ஊட்டியில் பெற்றோருடன் வாழும் ஒரு சாதாரண பெண்ணாக கதாநாயகி பிரியங்கா மோகன் அறிமுகமாகிறார். ஆனால் சாதாரண வாழ்க்கையில் இருந்தாலும், அவரது மனதில் பெரிய கனவு ஒன்று இருக்கிறது. பள்ளி பருவத்தில் கொரியா நாட்டு இசை மற்றும் நடனத்தால் கவரப்படும் பிரியங்கா மோகன், அந்த நாட்டுக்கு ஒரு முறையாவது பயணிக்க வேண்டும் என்ற ஆசையை மனதில் வளர்த்துக் கொள்கிறார். இதற்கிடையில், அதே கிராமத்தைச் சேர்ந்த ரிஷிகாந்தை காதலித்து வருகிறார் பிரியங்கா. தனது ஏழ்மையை காரணம் காட்டி, பிரியங்காவின் வீட்டிற்கு சென்று பெண் கேட்காமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகிறார் ரிஷிகாந்த்.
இவர்களின் காதல் விவகாரம் பிரியங்காவின் அப்பாவிற்கு தெரிய, சண்டை போட்டுக் கொண்டு, ரிஷிகாந்துடன் சேர்ந்து சென்னை வந்துவிடுகிறார் பிரியங்கா. இதனை தொடர்ந்து, அங்கிருந்து இருவரும் கொரியா செல்ல திட்டமிடுகின்றனர். இருவரும் சேர்ந்து கொரியா செல்லலாம் என்ற நம்பிக்கையுடன் பயணத்தை தொடங்கும் நாயகி, அங்கே சென்றதும் ஒரு பெரிய ஏமாற்றத்தை எதிர்கொள்கிறார். காதலன் அவரது பணத்தை எடுத்துக்கொண்டு மறைந்து விட, மொழி தெரியாத அந்நிய நாட்டில் தனியாக சிக்கிக் கொள்ளும் நிலை உருவாகிறது. தெரியாத மொழி, அறிமுகமில்லாத மனிதர்களிடையே அவர் என்ன செய்கிறார்? என்பதைச் சொல்லியிருக்கும் படம்தான் ‘மேட் இன் கொரியா’.
கதையின் நாயகியாக ப்ரியங்கா மோகன். மொத்த படத்தையும் தன் தோள் மீது சுமந்து சென்றிருக்கிறார். யார் என்ன செய்தாலும் அன்பை மட்டுமே படம் முழுவதும் போதித்துக் கொண்டிருக்கிறார் பிரியங்கா மோகன். பல இடங்களில் தனது நடிப்பால் படம் பார்ப்பவர்கள் அனைவரையும் கட்டிப் போட்டிருக்கிறார்.குறிப்பாக கொரியாவில் அவர் சந்திக்கும் வயதான பெண்ணுடன் உருவாகும் உணர்ச்சி பிணைப்பு காட்சிகள் மனதை நெகிழ வைக்கின்றன.
பிரியங்காவின் காதலராக நடித்திருக்கும் ரிஷிகாந்த்,அதற்குப் பொருத்தமாக இருக்கவேண்டுமென மெனக்கெட்டிருக்கிறார்.
பார்க் ஹே-ஜின், நோஹூ ஜின், ஜாங் ஜேஹியான் உள்ளிட்ட கொரிய நடிகர், நடிகைகளும் மிக இயல்பாக நடித்து கதையுடன் நம்மைப் பயணிக்க வைத்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் பிரசன்னகுமாருக்கு, கொரியாவில் படப்பிடிப்பு நடத்தும் நல்வாய்ப்பு.அதைச் சரியாகப் பயன்படுத்தி சிறந்த காட்சியனுபவங்களைக் கொடுத்திருக்கிறார்.
ஷேகாம் அப்துல் வகாப் இசையமைத்திருக்கிறார்.நாயகியின் பல்வேறு மன உணர்வுகளை இசையால் மொழிபெயர்த்து திரைக்கதைக்கு வலுச் சேர்த்திருக்கிறார்.
கொரிய மொழி தெரியாத அந்நிய நாட்டில் தனியாக வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் ஒரு பெண்ணின் அனுபவங்களை, உணர்ச்சியும் நகைச்சுவையும் கலந்த முறையில் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் ரா.கார்த்திக். ஆனால் அன்பு என்பதற்கு மொழி எல்லைகளோ பிரதேச எல்லைகளோ கிடையாது என்ற மெல்லுணர்களை வெளிப்படுத்தும் பாத்திரங்களைக் கொண்டு இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார்.
மொத்தத்தில், ‘மேட் இன் கொரியா’ எல்லா ரசிகர்களும் ரசிக்கும் தரமான படம்.
ரேட்டிங் 3/5.