‘வெஞ்சென்ஸ்’ திரைப்பட விமர்சனம்!

34

 

சென்னை:

படம்:  ‘வெஞ்சன்ஸ்’

நடிப்பு: அபர்நிதி, இளவரசு, ஜான் விஜய், ஒய் ஜி மகேந்திரன், லிவிங்ஸ்டன், காளி வெங்கட், சரவணன் சுப்பையா, சுரேஷ் சக்ரவர்த்தி

தயாரிப்பு: ஏ பி அசோக்குமார்

இசை: கார்த்திக் ராஜா, அருண் ராஜ்

ஒளிப்பதிவு: எம் எஸ் பிரபு

இயக்கம்: ராகுல் அசோக்

பிஆர்ஓ : நிகில் முருகன்.

சிறிய வயதிலிருந்தே எல்லோரும் தன்னைப் பற்றி பேச வேண்டும், தன்னைப் பாராட்ட வேண்டும் என்ற ஆசையுடன் வளர்கிறார் நாயகி அபர்ணதி. இந்த மாவட்டத்திலேயே முதல் மாணவியாக வந்தால் உன்னை எல்லோரும் பாராட்டுவார்கள் என்று தந்தை சொல்ல அதை கேட்டு அபர்ணதி பத்தாம்வகுப்புப் பொதுத் தேர்வில் மாநிலத்திலேயே முதல்மாணவியாக வருகிறார்.அவர் நினைத்ததுபோல் அவரைப் பற்றி நிறையப் பேசுகிறார்கள்.பலர் பாராட்டுகிறார்கள்.ஆனால் அவையெல்லாம் சில நாட்களில் முடிந்துவிடுகிறது. தினசரி அனைவரும் தன்னைப் பற்றிப் பேச வேண்டும் என்று நினைக்கிறார் . அதற்காகச் சில அதிர்ச்சிகரமான செயல்களைச் செய்கிறார்.இப்படியே அவர் படித்து கலெக்டர் ஆகிறார்.அவர் கலெக்டர் ஆன பிறகு அனாதை குழந்தைகளைத் தத்தெடுப்பது, ஊழல் அதிகாரிகளைப் பொது இடங்களில் வைத்துத் தண்டிப்பது என எப்போதும் ஊடக வெளிச்சத்திலேயே இருக்கிறார். தனது நடவடிக்கைகள் மூலம் மற்றவர்களின் பாராட்டுகளை பெறும் அபர்ணத்திக்கு,  முதலமைச்சர் மூலம் தடை ஏற்படுகிறது, அந்த தடையை தகர்த்தெறிவதற்கான முயற்சிகளில் ஈடுபடும் அபர்ணதி, ஒரு கட்டத்தில் முதலமைச்சரே தான் சொல்வதை கேட்டு நடக்க வேண்டிய இடத்திற்கு முன்னேறுகிறார். ஆனால், அவர் முன்னேற்றத்திற்கு இணையாக எதிர்ப்புகளையும், தடைகளையும் எதிர்கொள்ள, அதனை தனது புத்திசாலித்தனத்தால் எப்படி முறியடித்து, தான் நினைத்ததை செய்து முடிக்கிறார் அதேபோல் தனக்கான நேரம் வரும்போது தன்னைச் சிறுமைப்படுத்தியவர்களை ஒரு வகையில் அவர் பழி வாங்க ஆரம்பிக்கிறார் .முடிவு என்ன என்பதுதான் ‘வெஞ்சன்ஸ் ‘ படத்தின் மீதிக்கதை.

ஜெயலலிதாவை நினைவுபடுத்தும் வேடத்தில் நடித்திருக்கிறார் நாயகி அபர்ணதி.அதனால் அவரைப் போல் நடை உடை பாவனைகளைச் செய்திருக்கிறார்.தோற்றத்தில் கம்பீரமும் நடிப்பில் ஆழமும் கொண்டு இரசிகர்களை ஈர்க்கிறார். ஒரு மாவட்ட கலெக்டராக இருந்துக் கொண்டு முதலமைச்சருக்கே சவால் விட்டு மோதலுக்கு தயாராவது பின்னர் டெல்லி வரை இவரது புகழ் பரவி முதலமைச்சருக்கு அட்வைஸ் தரும் தேர்தல் வியூக அமைப்பாளராக வந்து நடிப்பில் அசத்தி இருக்கிறார் அபர்ணதி.

முதலமைச்சராக நடித்திருக்கும் இளவரசு,ஒன்றிய அமைச்சராக நடித்திருக்கும் ஜான் விஜய், அபர்ணதியின் தந்தையாக நடித்திருக்கும் காளி வெங்கட், எதிர்க்கட்சித் தலைவராக நடித்திருக்கும் லிவிங்ஸ்டன், முன்னாள் முதலமைச்சராக நடித்திருக்கும் ஒய்.ஜி.மகேந்திரன், அமைச்சராக நடித்திருக்கும் சரவண சுப்பையா,பிரதமராக நடித்திருக்கும் மங்கல் ஆகிய அனைவரும் இந்தக் கதைக்கு பொருத்தமாக நடித்திருக்கிறார்கள்.

டி.எம்.கார்த்தி,சுரேஷ் சக்கரவர்த்தி,நோபல் கே.ஜேம்ஸ்,சச்சு,சாய் தன்யா,ரேகா நாயர்,சிறுமி சம்யுக்தா ஆகியோர் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.

கார்த்திக் ராஜாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் திரைக்கதையின் வேகத்திற்கு பலமாக பயணித்திருக்கிறது.

ஒளிப்பதிவு எம்.எஸ். பிரபு அரசு அலுவலகங்களின் அந்த பிரம்மாண்டத்தையும், கிராமத்து மணத்தையும் அழகாகப் படம் பிடித்துள்ளார்.

கதாநாயகியின் நடவடிக்கை, முன்னேற்றம் மற்றும் அவர் எதிர்கொள்ளும் போராட்டங்கள் ஆகியவற்றை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை நினைவுப்படுத்தும் வகையில் காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் ராகுல் அசோக், வெளிவராத சில விசயங்களை கூட தைரியமாக காட்சிப்படுத்தியிருக்கிறார். தலைப்பிலேயே சில விசயங்களைச் சொன்னதோடு,சமகால அரசியல் நிகழ்வுகளை நினைவுபடுத்தும் விதமாகக் காட்சிகள் அமைத்து இப்படத்தை இயக்கி வெற்றி  பெற்றிருக்கிறார் இயக்குனர்.

மொத்தத்தில், ‘வெஞ்சென்ஸ்’  அரசியல் கருத்தை சொல்லும்படம்.

ரேட்டிங் 3/5.