
CHENNAI:
படம்: காட்டாளன்
நடிப்பு: ஆண்டனி வர்கீஸ், சுனில், ஜெகதீஷ், கபீர் துகான் சிங், தூஷாரா விஜயன், அன்சான் ரவி, ராஜ் திறந்தசு
தயாரிப்பு: செரிப் முகமது
இசை: ரவி பசுரூர் (பின்னணி இசை )
ஒளிப்பதிவு : ரெனதீவ்
இயக்கம்: பால் ஜார்ஜ்
பிஆர்ஓ : நிகில் முருகன்.
யானைகளின் தந்தங்களுக்காக நடைபெறும் சட்டவிரோத வேட்டையை மையமாக வைத்து கதை நகர்கிறது. காடுகளின் வளத்தை கொள்ளையடிக்கும் மனித பேராசையும், அதனால் பாதிக்கப்படும் பழங்குடி மக்களின் வாழ்க்கையையும் படம் பேசுகிறது. காட்டுப் பகுதியில் சுற்றித்திரியும் யானைகளை கொன்று அதன் தந்தங்களை கைப்பற்றி கடத்தி விற்று அடாவடி ராஜ்ஜியம் நடத்துகிறார் சுனில். அத்துடன் மலை காட்டு கிராமத்தில் வசிக்கும் மக்களையும் மிரட்டி தனது அடிமையாக்கி கொண்டு அவர்களை வைத்து யானைகளையும் கொல்கிறார் . இந்த சூழலில் அவரது இடத்தை பிடிக்க துடிக்கும் கபீர் துகான் சிங், சுனில் கடத்தும் தந்தங்களை காவல்துறை உதவியுடன் கைப்பற்றுவதோடு, அவரது கடத்தல் தொழிலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சிக்கிறார். தன்னிடமிருந்து பறிபோன தனது தந்தங்களை மீட்பதற்காக நாயகன் ஆண்டனி வர்கீஸை சுனில் களம் இறக்குகிறார். சுனில் செய்த சாணக்கியத்தனத்தால் இழந்த தந்தங்கள் மீட்கப்படுகின்றன.
காவல் துறையின் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு மீண்டும் தங்கள் கடத்தல் தொழிலைச் செய்கிறார்கள். இதற்கிடையே சுனிலுக்கு உதவி செய்து வந்த நாயகன் ஆண்டனி வர்கீஸ், அவருக்கு எதிராக செயல்படுகிறார். பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவியாகவும் இருக்கிறார். இதனால் கோபமடைந்த சுனில், ஆண்டனி வர்கீஸை அழிக்க முடிவு செய்கிறார். தனது எதிரியான கபீர் துகான் சிங் உடன் இணைந்து ஆண்டனி வர்கீஸை ஒழித்து விட்டு சுனில் கடத்த்ல் தொழிலை நடத்த முயற்சி செய்கிறார். இந்த சமயத்தில் பழங்குடியின மக்களை ஒன்று திரட்டி கடத்தல்காரர்களுக்கு எதிராக மாபெரும் யுத்தம் நடத்த தயாராகிறார் ஆண்டனி வர்கீஸ். இந்த யுத்தத்தில் வெற்றி பெற்றது யார் ?கடத்தல்காரர்களை ஏன் ஆண்டனி வர்கீஸ் அழிக்க நினைக்கிறார் ? என்பதற்கு பதில் சொல்லும் படம்தான் “கட்டாளன்”
ஆண்டனி வர்கீஸ் தனது வழக்கமான ஆக்ரோஷமான நடிப்பால் கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கிறார். இப்படத்தில் வசனங்களை விட அவரது உடல்மொழியும், சண்டைக் காட்சிகளுமே அதிகம் பேசுகின்றன. அவர் கடத்தல்காரராக நடித்திருக்கும் சுனிலிடம் வேலை செய்யும்போது தீவிர விசுவாசியாகவும் எதிரான பிறகு மக்களுக்கான போராளியாகவும் இருக்கிறார்.இரண்டுவித நடிப்பிலும் குறைவின்றி நிறைவாகச் செய்திருக்கிறார்.
வில்லனாக நடித்திருக்கும் சுனில், வழக்கம் போல் தனது முரட்டுத்தனமான வில்லத்தனத்தால் மிரட்டுகிறார். மற்றொரு வில்லனாக நடித்திருக்கும் கபீர் துகான் சிங், ஸ்டைலிஷ் வில்லனாக கவனம் ஈர்க்கிறார்.
இப்படத்தில் தனது தோற்றம் மிகவும் மாறுபட்ட வகையில் இருந்தாலும் தன் நடிப்புத் திறமையால் கவனம் ஈர்த்திருக்கிறார் துஷாரா விஜயன்.
பார்த் திவாரி, ஜெகதீஷ், சித்திக், ஹனன் ஷா, ஹிப்ஸ்டெர் ஆகிய நடிகர்களும் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.
ஒரேயொரு காட்சியென்றாலும் நடை உடை தோற்றம் ஆகியனவற்றில் கெத்து காட்டியிருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
ரெனாடைவ் ஒளிப்பதிவு படத்தின் தரத்தைப் பன்மடங்கு உயர்த்தியிருக்கிறது.காட்சிகள் வடிவமைப்பும் ஒளியமைப்பும் மட்டுமின்றி நடிகர்களை மேம்படுத்திக் காட்டவும் மெனக்கெட்டிக்கிறார் என்பது நன்றாக தெரிகிறது.
ரவி பஸ்ரூரின் பின்னணி இசை படம் முழுவதும் அதிரடியை தக்க வைத்திருக்கிறது. சில காட்சிகளில் அந்த இசையே படத்தை தூக்கிச் செல்லும் அளவுக்கு சக்திவாய்ந்ததாக இருக்கிறது.
இப்படத்தில் ஆக்சன், கேசிங் என்று தொடர்ச்சியாக காட்சிகள் பரபரக்கிறது. ஆனால் புதிதாக ஒன்றும் சொல்லிவிடவில்லை ஏற்கனவே யானை தந்த கடத்தல் படங்கள் பல வந்திருக்கின்றன. ஆனால் யானைகள் உலாவும் வனம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது? பழங்குடி இன மக்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள்? என்பனவற்றைச் சேர்த்து திரைக்கதையை எழுதியிருப்பதன் மூலம் இது சமுதாய அக்கறையுடன் உருவாக்கப்பட்ட படைப்பு என்பதை உணர வைக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் பவுல்ராஜ்.
மொத்தத்தில், ‘காட்டாளன்’ ஆக்சன் பிரியர்களுக்கு விருந்து.
ரேட்டிங் 3/5.