’பிளாஸ்ட்’ திரைப்பட விமர்சனம்!

16

 

CHENNAI:

படம்: பிளாஸ்ட்

நடிப்பு: அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன், விவேக் பிரசன்னா, ஜான் கொக்கேன், அர்ஜுன் சிதம்பரம், பவன், பாலா ஹாசன், வினோத் சாகர்

தயாரிப்பு : கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ கணேஷ், கல்பாத்தி எஸ் சுரேஷ், அர்ச்சனா கல்பாத்தி, ஐஸ்வர்யா கல்பாக்கம்

இசை: ரவி பசுரூர

ஒளிப்பதிவு: அருண் ராதாகிருஷ்ணன்

இயக்கம்: சுபாஷ் கே ராஜ்

பிஆர்ஓ: நிகில் முருகன்.

அர்ஜுன் ஒரு கராத்தே மாஸ்டர். தன்னைப் போலவே தனது மகளையும் தைரியமாக வளர்க்கிறார். அதற்கான பயிற்சியையும் அளிக்கிறார். எங்கு தவறு நடந்தாலும் சிறுமை கண்டு பொங்கி தவறினை தட்டிக் கேள் என்று அவருக்குப் பாடம் சொல்லி கொடுத்து வளர்த்து வருகிறார் .அப்படியே அவரது மகள் பிரீத்தி முகுந்தனும் வளர்கிறார்.  இதனால் அவருக்கு சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட, அம்மா அபிராமியின் அறிவுரையின்படி அமைதியாக இருக்க பழகுகிறார். இந்த நேரத்தில், அவரது தங்க சங்கிலியை பறிக்க ஒரு திருடன்  முயற்சிக்க, வழக்கம் போல் தனது அதிரடியால் அவரை மிரள வைத்து போலீஸில் பிடித்து கொடுக்கிறார்.

அதனால், அர்ஜுன் குடும்பத்தினர் உயிருக்கே பேராபத்து ஏற்பட இதனால் அர்ஜுனும், ப்ரீத்தி முகுந்தனும் அதிரடியில் இறங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் பணபலமும் அதிகார பலமும் கொண்டவர்களோடு மோதவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இது தனது குடும்பத்திற்கான பிரச்சனை மட்டும் இல்லை, ஆயிரக்கணக்கான குடும்பங்களின் உயிர் பிரச்சனை என்பதை புரிந்துக் கொள்ளும் அர்ஜுன் குடும்பத்தினர், அந்த குடும்பங்களை காப்பாற்ற என்ன செய்தார்கள் ? அதன் முடிவு என்ன? என்பதை பரபரப்பான திரைக்கதை மூலம் சொல்லும் படம்தான்  ‘பிளாஸ்ட்’

அர்ஜூன் என்ன செய்தாலும் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் எனும்போது அவர் கராத்தே மாஸ்டர் என்றும் சொல்லிவிட்டால் கேட்கவா வேண்டும்? சண்டைக்காட்சிகளில் வேகம் குறையாமல் அடித்திருக்கிறார். ஆக்‌ஷன் மட்டும் இன்றி, சிறு வயது முதலே தனது மகளுக்கு தைரியம், நம்பிக்கை ஆகியவற்றை சொல்லிக் கொடுத்து வளர்ப்பவர், ஒரு சிறந்த தந்தையாகவும் பார்வையாளர்கள் மனதில் பதிந்து விடுகிறார்.

அர்ஜுனின் மனைவியாக நடித்திருக்கும் அபிராமிக்குள் இப்படியும் ஒருவர் இருக்கிறாரா? என்று வியக்குமளவுக்கு சண்டைகள் செய்திருக்கிறார்.ஒரு பொறுப்பான அம்மாவாக அறிமுகமாகி திடீரென்று அதிரடியில் இறங்குவது திரையரங்கையே அதிர வைக்கிறது.

அர்ஜுன் – அபிராமி தம்பதியின் மகளாக கதையின் நாயகியாக நடித்திருக்கும் ப்ரீத்தி முகுந்தன், உண்மையான கராத்தே வீராங்கனை போன்று சண்டைக்காட்சிகளில் நடித்திருக்கிறார். தவறு செய்பவர்களை  தட்டிக்கேட்கும் அதுவும் அதிரடியாக அடி உதை என்று இறங்குகிற வேடம் அமைந்திருக்கிறது.அதை மிகவும் ரசித்து ருசித்து நடித்திருக்கிறார்.அது ரசிகர்களை ஈர்க்கும் விதமாக அமைந்திருக்கிறது.

வில்லன்களாக நடித்திருக்கும் ஜான் கொக்கேன், அர்ஜுன் சிதம்பரம், பவன், பாலா ஹாசன், வினோத் சாகர் மற்றும் அர்ஜுன் தம்பியாக நடித்திருக்கும் விவேக் பிரசன்னா ஆகியோர் கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

ரவி பஸ்ரூரின் பின்னணி இசை படத்தின் பலத்தை பலமடங்கு உயர்த்தியுள்ளது. ஒவ்வொரு ஆக்ஷன் காட்சிக்கும் அவர் கொடுத்திருக்கும் இசை அதிர்வை உருவாக்குகிறது.

ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணன் சண்டைக் காட்சிகளின் வீரியம் குறையாமல் விதவிதமான கோணங்களில் படப்பதிவு செய்து பார்வையாளர்களை ஈர்க்கிறார்.

இயக்குனர் சுபாஷ் கே ராஜ் கமர்சியல் அதிரடி ஆக்சன் டைரக்டர் என்ற பெயரை இப்படத்தின் மூலம் தட்டி சென்றாலும்,  ஒரே படத்தில் வழக்கமான கதை என்று சொல்லி விடக்கூடிய அதிலும் பெண்களின் பங்களிப்பை முதன்மைப்படுத்தியிருப்பதன் மூலம் மாறுபட்ட கதை என்று சொல்ல வைத்து ரசிகர்களை எந்தவிதத்திலும் பாதிக்காதவாறு இந்த  படத்தை கொண்டாட வைத்திருக்கிறார்.

மொத்தத்தில், ‘பிளாஸ்ட்’ படம் ஆக்ஷன் அதிரடி ரசிகர்களுக்கு விருந்து.

ரேட்டிங் 3.5/5.