டோன்ட் ட்ரபுள் தி ட்ரபுள் -திரை விமர்சனம்

27

 

ஆம்புலன்ஸ் டிரைவர்
பஹத் பாசில், பணத்தை எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் என்ற எண்ணம் கொண்டவர். வேலை நேரம் போக தனது பணத் தேவைக்காக பணக்கார வீட்டு பிள்ளைகளை கடத்தவும்
முற்படுகிறார். அப்படி அவர்
கடத்திய சிறுமி சாரா பாலேகர்
இறந்து ஆன்மா ஆனவர்.
தொலைந்த தன் பெற்றோரை தேடும் சிறுமி சாரா பாலேகர், தான் இறந்ததோ, தற்போது கடத்தப்
பட்டதோ தெரியாமல் பஹத் பாசிலிடம் தன் பெற்றோரை கண்டுபிடிக்க உதவி கேட்கிறார்.
தான் கடத்தியிருப்பது ஒரு ஆன்மா என்பது தெரியாமல், அவருடன் பயணிக்கும் பஹத் பாசில் கண்ணுக்கு மட்டும் சாரா பாலேகரின் ஆன்மா தெரிவது எப்படி? அவரது பெற்றோர் என்ன ஆனார்கள்? அந்த சுட்டிப் பெண் ஏற்கனவே இறந்து போனவர் என்று தெரிய வரும்போது
பஹத் பாசில் நிலை என்ன?
கேள்விகளுக்கான பதில், நெஞ்சை நெகிழ வைக்கும் கிளைமாக்ஸ்.
நாயகனாக நடித்திருக்கும் பஹத் பாசில், இந்த கேரக்டருக்குள் தன்னை முழுமையாக வடிவமைத்துக் கொண்டிருக்கிறார். எப்போதும் பணம் பணம் என்று பறக்கும் அவரது கேரக்டர் பணத்துக்காக சிறுமி அதாவது ஆவியை
கடத்தத் தொடங்கியதில்
இருந்து நடிப்பில் வேகம் பிடிக்கத் தொடங்கி விடுகிறது. தனது கேரக்டரை கலகல என்று வைத்துக் கொண்டிருப்பவர், போலீஸ் கஸ்டடிக்கு வந்த பிறகு வெளிப்படுத்தும் முக பாவங்கள் வேற லெவல். கிளைமாக்சில் இன்னமும் நெகிழ வைக்கிறார்.
திவ்யா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிறுமி சாரா பாலேகர், தான் இறந்து போனதே தெரியாமல் பெற்றோரை கண்டுபிடிக்க பஹத் பாசிலிடம் கேட்டுக்கொள்ளும் இடம் தொடங்கி எதை சொன்னாலும் நம்பும் குழந்தைகள் உலகத்தை தன் இயல்பான நடிப்பின் மூலம் கண் முன் கொண்டு வருகிறார். மேஜிக் மீது அதீத ஆர்வம் கொண்ட அவர், தான் ஒரு ஆன்மா என்பதை உணராமல், வீடு முழுவதும் மேஜிக் நிறைந்திருப்பதாக எண்ணி மகிழும் காட்சியில் நமக்குத்தான் மனம் கனத்துப் போகிறது. சபாஷ் குட்டிப் பாப்பா.

அஸ்லம் பாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மகேஷ் மஞ்ச்ரேகர், பிரதாப் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் செளரப் சச்தேவா, மல்லேஷ் தங்கள் பாத்திரங்கள் மூலம் கதையின் திருப்பு முனைக்கு பெரிதும்
உதவுகிறார்கள்
பிராட் பிரான்சிஸின் கேமரா காட்சிகளோடு நம்மை ஐக்கியப் படுத்திக் கொள்கிறது. குறிப்பாக அந்த கிளைமாக்ஸ் , கேமரா கொண்டாடப்படும் ஒரு இடம்.

கால பைரவா இசையில் பாடல்கள் ஓகே ரகம். பின்னணி இசைக்கு
படத்தின் பிற்பகுதியில் நிறைய வேலை இருக்கிறது. அதை உணர்ந்து அவரும் திறமை காட்டி இருக்கிறார்.
இளைஞருடனான சிறுமியின் ஆன்மா பயணிக்கும் கதை என்றாலும், அதற்கான காட்சியமைப்புகளில் இருக்கும் சுவாரஸ்யங்கள் மற்றும் திருப்பங்களை சரியான முறையில் தொகுத்து முடிவு வரை தக்க வைத்துக் கொள்கிறது, பிரவீன் ஆண்டனியின் படத்தொகுப்பு.

ஆவிக்கும் மனிதனுக்குமான அன்பை நெஞ்சம் நெக்குருக சொல்ல முடியும் என்பதை காட்சிகள் வழியே நிரூபித்திருக்கிறார் இயக்கிய ஷஷாங்க் யேலேட்டி. அந்த எதிர்பாராத கிளைமாக்ஸ்சுக்காக இயக்குனருக்கு ஒரு பூங்கொத்து.

பிளஸ்: ஆன்மாவாக வரும் சிறுமி கேரக்டர் வடிவமைக்கப்பட்ட விதம்.

பிளாஷ்: கதையின் நம்பகத்தன்மைக்காக உருவாக்கப்பட்ட ஸ்னூப்பி நாய்க்குட்டி கேரக்டர்.

ரேட்டிங்: 3/5.