
CHENNAI:
நடிகர்கள் :இசக்கி கார்வண்ணன்,அபி நட்சத்திரா,காதல் சுகுமார், மற்றும் பலர்.
இசை: தீசன்,
ஒளிப்பதிவு : சிபி சதாசிவம்,
இயக்கம்:இசக்கி கார்வண்ணன்.
ஐம்பத்தியாறு ஆண்டுகளுக்கு முன்பு 1970 களில் நடக்கும் ஒரு மலைகிராமத்தில் நடக்கும் கதை.படிப்பில்லாத தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள்,ஓர் அஞ்சல் நிலையம்,ஒரு காவல்நிலையம் என்றிருக்கும் அந்த ஊருக்கு மாற்றலாகி வருகிறார் காவல்துறை ஆய்வாளர் இசக்கி கார்வண்ணன். ஒரு வழக்குகூட வராத அந்த காவல்நிலையத்துக்கு இந்த ஆய்வாளர் வந்த நேரத்தில் ஒரு கொலை வழக்கு வருகிறது. அதாவது அந்த ஊருக்கு ஆசிரியராக வரும் பிரவீன் பழனிசாமி, மர்மமான முறையில் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். அந்த கொலை வழக்கை விசாரிக்கும் இசக்கி கார் வண்ணன், அந்த ஊர் பற்றிய பல திடுக்கிடும் தகவல்களை அறிந்துக் கொள்வதொடு, முகமூடி அணிந்த ஐந்து பேர் கொண்ட குழு ஒன்று, பலரை கொடூரமாக கொலை செய்வதையும் கண்டுபிடிக்கிறார். அவர்கள் யார் ?, எதற்காக இப்படி கொலை செய்கிறார்கள் ? என்பதை சஸ்பென்ஸ் திரில்லராக சொல்லும் படம்தான் ‘ஆட்டி’.
காவல்துறை ஆய்வாளராக நடித்திருக்கும் இசக்கி கார்வண்ணன்,அந்த வேடத்துக்குரிய கம்பீரம் காட்ட முயன்றிருக்கிறார். அவர் தனக்கான முக்கியத்துவத்தை குறைத்துக் கொண்டு திரைக்கதைக்கு முக்கியத்துவம் அளித்து படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறார்.
கிராமத்து மனுசியாக நடித்திருக்கும் அபிநட்சத்திரா வேடமும் அவருடைய நடிப்பும், சிறுவர்களுக்குப் பாடம் சொல்லித் தரும் நேரமும் ஆசிரியரிடம் சீறும் காட்சியும் சிறப்பு.
நகைச்சுவைக்காக இருக்கும் காதல் சுகுமார்,அஞ்சல்காரர் சௌந்தர்,பள்ளி ஆசிரியர் பிரவீன் பழனிசாமி,காவலராக வரும் செல்வகுமார் ஆகியோரும் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரங்களுக்குப் பொருந்தியிருக்கிறார்கள்.
சிபி சதாசிவத்தின் ஒளிப்பதிவு இயற்கையின் அழகையும், அங்கு நிறைந்திருக்கும் ஆபத்தையும் மிக நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறார்.
பாடல்கள் இல்லாத படத்திலும் தன் இருப்பைப் பதிய வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் தீசன்.
ஆட்டி என்றால் தலைவி அல்லது முதன்மையானவள் என்று பொருள்.அப்படி ஒரு தலைவியை மையமாகக் கொண்டு, 1970-களில் பெண்களுக்கு எதிராக நடந்த கொடூரங்களை வரலாற்று ரீதியாக இந்த “ஆட்டி” படம் விளக்கவும் செய்திருக்கிறது. பழங்காலத் தமிழர் சமூகத்தில் பெண்களுக்கு இருந்த இடம் மற்றும் பின்னர் ஏற்பட்ட சமூக மாற்றங்கள் குறித்து இயக்குநர் முன்வைக்கும் கருத்துகள் சிந்திக்க வைக்கின்றன. திருமுருகன் திரைக்கதையில் கிட்டு இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப்படம்,தமிழ்ச் சமுதாயத்தில் பெண்களின் உயரிய நிலை,சிறுதெய்வ வழிபாடுகள் ஆகியனவற்றைக் கலந்து தமிழினப்பெருமையைப் பேச முயன்று வெற்றி பெற்றிருக்கிறது.
மொத்தத்தில், ‘ஆட்டி’ அனைவரும் ரசிக்கும் படம்.
ரேட்டிங் 3/5.