
CHENNAI:
ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரித்திருக்கும் ‘ஹபிபீ’ படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் மீரா கதிரவன்.
இப்படத்தில் கஸ்தூரி ராஜா – முகமது யூசுப், ஈஷா – சையத் அபுதாஹிர், மாளவிகா மோனோஜ் – நிலோபர் நிஷா, தனஸ்ரீ – கதீஜா பர்வின், அனுஸ்ரேயா ராஜன் – சாலிஹா பீவி,ஜெயஸ்ரீ பினுராஜ் – மம்மது, அருள் குமார் – ஷேக் உதுமான், ரேகா குமணன் – ராபியா, இஸ்மத் பானு – பைரோஜா, மலர் கைசென் – நிலோபர் தாய், சன் ஷாகுல் – பர்வினின் தந்தை, மாஸ்டர் தீஹான் – குழந்தை அபுதாஹிர், தீக்ஷா ஸ்ரீ – குழந்தை நிலோஃபர் ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தென் தமிழ் நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் இந்தக் கதை நிகழ்கிறது.முகமது யூசுப் என்ற பெயர் கொண்ட கஸ்தூரிராஜா கூட்டுக் குடும்பத்தில் அண்ணனாக இருக்கிறார். கைத்தறி நெசவுத் தொழில் செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். ஆனாலும் பெரிதாக சுபிட்சம் இல்லை. அவரது தம்பி மனைவிக்கு இப்படியே பொருளாதார சிக்கலுக்குள் குடித்தனம் செய்வது பிடிக்கவில்லை. எனவே தம்பியை வெளிநாடு செல்ல ஏற்பாடு செய்கிறார் கஸ்தூரிராஜா. தம்பி வெளிநாட்டில் வேலை செய்தாலும், கடைசி வரை நெசவுத் தொழிலில் கிடைக்கும் வருமானத்தில் மட்டும் தான் வாழ வேண்டும் என்பதில் கஸ்தூரிராஜா உறுதியாக இருக்கிறார். நவீன இயந்திரங்களின் வருகையால் கைத்தறி நெசவுத் தொழில் பாதிப்படைய, கஸ்தூரிராஜா பொருளாதார ரீதியாக கஷ்ட்டப்படுகிறார். அவரது கஷ்ட்டத்தை போக்க மகனை வெளிநாட்டு வேலைக்கு அனுப்ப உறவினர்கள் வற்புறுத்துகிறார்கள்.
இதற்கிடையில், அடுத்த தலைமுறையைச் சேர்ந்த கஸ்தூரிராஜாவின் மகன் ஈஷாவுக்கு பள்ளியில் தன்னுடன் படித்த மாளவிகா மனோஜ் மீது காதல் மலர்கிறது. இதனால் ஈஷா வெளிநாட்டுக்கு சென்று விட்டால் தனது காதலி மாளவிகா மனோஜை சந்திக்க முடியாமல் போய்விடும் என்பதாலும், குடும்பத்தை பிரிய மனம் இல்லாததாலும், வெளிநாட்டுக்கு செல்லாமல் சொந்த ஊரிலேயே கிடைத்த வேலையை செய்து கொண்டிருக்கிறார். இந்த சூழலில் கஸ்தூரி ராஜாவின் தம்பி வளைகுடா நாட்டில் வேலை பார்த்து அங்கிருந்து அனுப்புகின்ற பணத்தில் குடும்பத்தை நடத்தி வரும் கஸ்தூரிராஜாவுக்கு இந்த காதல் ஒரு பெரிய பிரச்சனையை கொண்டு வந்து கொடுக்கிறது. அதனால் குடும்ப அழுத்தம் காரணமாக ஈஷா வெளிநாடு சென்று பணத்தை சம்பாதித்து விட்டு வயதையும் தொலைத்து விட்டு வருகிறார். அவருக்கு வேறொரு இடத்தில்திருமணம் நிச்சயமாகிறது. அதன் பிறகு ஈஷாவின் காதல் நிறைவேறியதா? இல்லையா? என்பதுதான் ‘ஹபிபீ’ படத்தின் மீதிக் கதை.
இப்படத்தில் முகமது யூசுப் என்கிற கதாபாத்திரமாகவே மாறி நடித்திருக்கிறார் கஸ்தூரிராஜா.அவருடைய தோற்றம் அந்த வேடத்துக்கு மிகப்பொருத்தமாக அமைந்திருக்கிறது. அவர் தன் நடிப்பினாலும் கலங்க வைத்துவிடுகிறார். தன் மண்ணையும், நெசவுத் தொழிலையும் தன் உயிராகக் கருதும் ஒரு கம்பீரமான இஸ்லாமியப் பெரியவராக வாழ்ந்துள்ளார்.
இளம் கதாநாயகனாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் ஈஷா, தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை உணர்ந்து காதலில் ஈடுபடும்போது ஏற்படும் நிலைகளை சிறந்த முறையில் நடிப்பில் வெளிப்படுத்தி வரவேற்புப் பெறுகிறார்.
முகத்தை மறைத்துக் கொண்டு வலம் வரும் மாளவிகா மானோஜுக்கு படம் முழுவதும் வசனம் இல்லை என்றாலும் அவரது பேசும் கண்கள் கதாபாத்திரத்திற்கு பெரிதும் பலமாக இருக்கின்றன .
தனாஸ்ரீ, அனுஸ்ரேயா ராஜான், ஜெயஸ்ரீ பினுராஜ், அருள் குமார், ரேகா குமணன், இஸ்மத் பானு, மலர் கய்சன், சன் சாகுல், மாஸ்டர் தீகன், தீக்ஷா ஸ்ரீ ஆகியோர் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக பயணித்திருக்கிறார்கள்.
மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு எதார்த்தமான காட்சிகளை நம் கண் முன்னே நிறுத்துகிறது.
சாம் சி எஸ் அந்தக் காலகட்டத்திற்கும் பண்பாட்டு சூழலுக்கும் ஏற்ற இசையை வழங்கியுள்ளார். பின்னணி இசை அதிகம் சத்தமில்லாமல் பயணித்து காட்சிகளுக்கு உயிரூட்டியிருக்கிறது.
இந்தப் படத்தின் கதையை திறம்பட எழுதி அனைவரும் ரசிக்கும் விதத்தில் திரைக்கதை அமைத்துக் காட்சிகளை உருவாக்கி இயக்கி இருக்கிறார் மீரா கதிரவன். வெளிநாட்டு வேலை மூலம் பெரும் பொருளாதாரம் ஈட்டினாலும், அதற்கான அவர்களது இழப்பீடு என்பது திரும்ப பெற முடியாத ஒன்று, என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். இஸ்லாமியர்கள் அல்லாதவர்களுக்கு இந்த படம் ஒரு புதிய அனுபவத்தை கொடுப்பது போல், இஸ்லாமியர்களுக்கு அவர்களது வாழ்வியலை திரையில் பார்த்த பெரும் திருப்தியை கொடுக்கும்.
மொத்தத்தில், ’ஹபீபி’ தவறாமல் பார்க்க வேண்டிய படம்.
ரேட்டிங் 3/5.