
CHENNAI:
படம்: எங்கள் தங்கம்
நடிப்பு: சமந்தா, திகந்த் மஞ்சாலே கௌதமி, ஆனந்த்
ஸ்ரீ லக்ஷ்மி குல்ஷன் தேவய்யா, மன்ஜூஷா
சைதன்ய கிருஷ்ணா,
ஸ்ரீமுகி
தயாரிப்பு: ராஜ் நிடிமொரு, சமந்தா, ஹிமான்க் ரெட்டி துவ்வூரு
இசை: சந்தோஷ் நாராயணன்
ஒளிப்பதிவு : ஓம் பிரகாஷ்
இயக்கம்: பி வி நந்தினி ரெட்டி
பி ஆர் ஓ : யுவராஜ்.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கதாநாயகியாக திரைக்கு வந்துள்ள சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. குடும்பப் பின்னணியுடன் ஆக்ஷன் அம்சங்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படம், சமந்தாவை மையமாக வைத்து நகரும் ஒரு பெண் ஹீரோ திரைப்படமாக உருவாகியுள்ளது. காதலித்து திருமணம் செய்து கொண்ட திகந்த் மஞ்சாலே மற்றும் சமந்தா, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு குடும்ப நிகழ்ச்சி ஒன்றிற்காக கிராமத்தில் உள்ள கணவரின் வீட்டிற்கு செல்கின்றனர். குடும்பத்தினரின் எதிர்ப்புடன் தொடங்கும் பயணம், சமந்தாவின் அன்பான அணுகுமுறையால் மெதுவாக மாறத் தொடங்குகிறது.
ஆச்சாரமும் கட்டுப்பாடும் நிறைந்த அந்தக் குடும்பத்திற்குள் நுழைந்து சமையல் , சம்பிரதாயம்,பக்தி என்று அவர்களுக்கு ஏற்றபடி தன் திறமையைக் காட்டிக் குடும்பத்தினரைக் கவர முயற்சி செய்கிறார். அதன் பிறகு மெல்ல மெல்ல அவர்கள் மனதில் இடம் பிடிக்கிறார். அந்த வீட்டில் உள்ள ஒவ்வொருவரின் மனதையும் வென்று, அனைவராலும் நேசிக்கப்படும் மருமகளாக மாறும் சமந்தாவின் வாழ்க்கையில் திடீரென திருப்பம் ஏற்படுகிறது. இந்த சூழலில் சிறையில் தண்டனை அனுபவிக்கும் கொலை குற்றவாளி குல்ஷன் தேவய்யா, தப்பித்து வந்து சமந்தாவை தேடி அந்த வீட்டிற்கு வருகிறார். ஏற்கெனவே தீவிரவாத கும்பலில் இருந்த சமந்தாவை தன்னுடன் அழைத்துச் செல்ல முயற்சிக்கும் அவர், அதற்கு சம்மதிக்கவில்லை என்றால், மொத்த குடும்பத்தையும் அழித்து விடுவதாக மிரட்டுகிறார். அவர்களை எதிர்கொள்ளும் சமந்தாவின் திறமையும் துணிச்சலும், அவர் சாதாரண பெண் அல்ல என்பதை வெளிப்படுத்துகிறது. தன் கணவர் குடும்பத்தை ஆபத்தில் இருந்து காக்கும் பணியில் ஈடுபடும் சமந்தா, அந்த போராட்டத்தில் வெற்றி பெற்றாரா? சமந்தாவின் உண்மையான பின்னணி என்ன ? என்பதை ஆக்ஷன் கலந்த சண்டைக் காட்சிகளுடன் உருவாகி இருக்கும் படம்தான் “எங்கள் தங்கம்”
ஸ்வர்ணா எனும் கதாபாத்திரமேற்று அமைதியாக அறிமுகமாகும் சமந்தா,புகுந்த வீட்டுக்குப் பொருத்தமான மருமகளாக மாறிக்கொள்வதில் சந்திக்கும் சிக்கல்கள் மற்றும் சமையல் ,பக்தி என்று குடும்பத்தினரின் மனதில் இடம் பிடிக்கச் செய்கிற சாதுரியங்கள் என்று கலகலப்பூட்டுகிறார். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் அவரது உடல் மொழி மற்றும் துப்பாக்கி சண்டைகள் போடும்போது உண்மையிலேயே அவரது கதாபாத்திரத்திற்கு கூடுதல் நம்பகத்தன்மையை வழங்குகிறது.
சமந்தாவின் கணவராக நடித்திருக்கும் திகந்த் மஞ்சாலே,மனைவி பற்றி தெரியாமல் இருப்பதும் தெரிந்து தவிப்பதும் ரசிக்க வைக்கிறது.
வில்லன் கருணாவாக வரும் குல்ஷன் தேவய்யா ரொம்பவும் அலட்டல் இல்லாமல் ஸ்டைலாக வந்து யார் இந்த ஸ்டைல் வில்லன் என்று கேட்க வைக்கிறார்.
மாமியாராக நடித்திருக்கும் கெளதமி, மாமனராக நடித்திருக்கும் ஆனந்த், பாட்டியாக நடித்திருக்கும் ஸ்ரீ லக்ஷ்மி, தோழியாக நடித்திருக்கும் மன்ஜூஷா, கொழுந்தனாக நடித்திருக்கும் சைதன்ய கிருஷ்ணா, கணவரின் தம்பி மனைவியாக நடித்திருக்கும் ஸ்ரீமுகி, கணவரின் தங்கையாக நடித்திருக்கும் நடிகை என அனைத்து நடிகர், நடிகைகளும் தங்களது பணியை சரியாக செய்திருக்கிறார்கள்.
வில்லனாக நடித்திருக்கும் குல்ஷன் தேவய்யா, சமந்தா யார் ? என்ற உண்மையை வெளிக்கொண்டு வரும் கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்து மிரட்டி இருக்கிறார்.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.அவரது இசை படம் பார்ப்பவர்களும் உணர்ந்து கொள்ளும் அளவு தன் இருப்பை பதிவு செய்திருக்கிறார். பின்ணணி இசை ஆக்ஷன் மற்றும் உணர்ச்சிகரமான காட்சிகளில் கதையின் தீவிரத்தை உயர்த்துகிறது.
ஓம்பிரகாஷின் ஒளிப்பதிவில் அமைதியான சமந்தா அதிரடியான சமந்தா ஆகிய இருவரும் வேறுபட்டுத் தெரிவது மட்டுமின்றி மற்ற காட்சிகளின் ஒளியமைப்பும் ரசிக்க வைக்கின்றன.
“எங்கள் தங்கம்” என்பது வெறும் ஆக்ஷன் படம் அல்ல; ஒரு பெண்ணின் தைரியம், குடும்ப பாசம் மற்றும் கடந்த காலத்தை எதிர்கொள்ளும் போராட்டம் பற்றிய கதை. ராஜ் நிடிமொரு,வசந்த் மரிம்கண்டி ஆகியோர் கதை திரைக்கதை எழுதி இருந்தாலும் அதை திரைப்படத்திற்கு ஏற்றவாறு இயக்குநர் நந்தினி ரெட்டி திறமையாக கையாண்டிருப்பது பாராட்டத்தக்கது. இரண்டாம் பாதியில் ரணகளமாக்கி அதகளமாக மாற்றி, அதிலும் குடும்பத்தினரை இணைத்து ஒரு முழுமையான குடும்பக்கதையாக வழஙகியுள்ளார் .
மொத்தத்தில், ‘எங்கள் தங்கம்’ முழுமையான பொழுதுபோக்கு நிறைந்த அதிரடி படம்.
ரேட்டிங் 3/5.