‘அந்தரன் ‘திரைப்பட விமர்சனம்!

7

 

 

CHENNAI:

படம்: அந்தரன்

நடிப்பு: பிரஜன், இவானா வருண் அதிரன், அனுபமா குமார், செந்தி, பத்மன்

தயாரிப்பு: எம் கே சாம்பசிவம்

இசை: ஹரி எஸ் ஆர்

ஒளிப்பதிவு :கிஷோர் ராஜேந்திரன்

இயக்கம்: சந்தோஷ் ராவணன்

பி ஆர் ஓ : நிகில் முருகன்.

நாயகி இவானா வருணை யாராவது காதலித்தாலும் திருமண நிச்சயம் செய்தாலும் அவர்கள் மரணமடைந்துவிடுகிறார்கள்.  இதனால் அதிர்ச்சி அடையும்  இவானா வருணுக்கு அவரது தந்தை ஆறுதல் கூறி தேற்றுவதுடன் மகளை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்.  இந்த மரணங்கள் இயற்கையாக நடப்பதில்லை யாராலோ திட்டமிட்டு நடத்தப்படுகிறது என்கிற ஐயம் எழுவதால் காவல்துறை விசாரணை தொடங்குகிறது. போலீஸ் இன்ஸ்பெக்டர்  பிரஜன் இந்த வழக்கை விசாரிக்கிறார்.  ஒரு கட்டத்தில் இன்ஸ்பெக்டர் பிரஜன்,  இவானா வருணை    காதலிப்பதாகக் கூறித் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார். தன்னைத் திருமணம் செய்து கொள்வோருக்கு இறப்பு நேர்வதை எண்ணி  இவானா வருண்   திருமணம் செய்து கொள்ள தயங்குகிறார். ஆனால் பிரஜன் எதற்கும் பயப்படாமல் இவானா வருணணுக்கு ஆறுதல் சொல்லி எப்படியாவது  திருமணம் செய்துக் கொள்ள முயற்சி செய்கிறார். இறுதியில் அவர் இவானா வருணை மணமுடித்தாரா? இல்லையா? என்பதுதான் “அந்தரன்’ படத்தின் மீதிக் கதை.

இன்ஸ்பெக்டர் சர்வசெழியனாக பிரஜன் நடித்துள்ளார் . அவருக்கு அந்தப் போலீஸ் கதாபாத்திரம் சரியாகவே பொருந்தி உள்ளது. .நிதானமான பேச்சுள்ள அவரது விசாரணையில் அனுபவம் மிகுந்த போலீஸ் அதிகாரி என்ற உணர்வுகள் வெளிப்படுகிறது.

இவானா வருண், வெறும் கதாநாயகியாக இல்லாமல், கதையின் இதயமாக இருக்கிறார். தன்னைச் சுற்றி நடக்கும் மர்ம மரணங்களால் மனதளவில் உடைந்த பெண்ணின் வேதனையையும், எதிர்காலம் குறித்த அச்சத்தையும் மிக இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார்.

தன் மகளின் வாழ்க்கையை நினைத்து தவிக்கும் தந்தையாக எம்.கே. சம்பசிவம் மனதைத் தொடுகிறார். அனுபமா குமார், செந்தில்குமாரி  அதிரன், ரமேஷ்பாபு கீதா, பத்மன், பிரியங்கா செல்வி, ஐஸ்வர்யா கண்ணன்  மற்றும் மற்ற துணை நடிகர்களும் கதையின் ஓட்டத்தை வலுப்படுத்தும் வகையில் தங்களது பங்களிப்பைச் செய்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் கிஷோர் ராமச்சந்திரன், காதல் மற்றும் பாடல்காட்சிகளை வண்ணமயமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார். ஹரி எஸ்.ஆரின் இசை படத்தின் உணர்வுகளை மேலும் உயர்த்துகிறது.பின்னணி இசை, மர்மக் காட்சிகளில் தேவையான பதற்றத்தை உருவாக்கி த்ரில்லர் அனுபவத்தை மேலும் வலுப்படுத்துகிறது.

இயக்குநர் சந்தோஷ் ராவணன், வழக்கமான பேய் அல்லது அதிரடி திரில்லர் பாதையைத் தேர்ந்தெடுக்காமல், மர்மத்தின் மூலம் மனித உறவுகளின் சிக்கல்களையும், கடந்தகாலத்தின் தாக்கத்தையும் பேச முயன்றுள்ளார். சில இடங்களில் திரைக்கதை மெதுவாக நகர்ந்தாலும், முக்கியமான திருப்பங்கள் பார்வையாளர்களை மீண்டும் கதைக்குள் இழுத்துச் செல்கின்றன. சஸ்பென்ஸ் நிறைந்த இந்தக் கதையில் வசனங்களை குறைத்து திரைக்கதையில் மாற்றங்கள் செய்து அதிரடி ஸ்டண்ட் காட்சிகளை வைத்திருந்தால்  விறுவிறுப்பு கூடியிருக்கும் என்பதில் ஐயமில்லை.

மொத்தத்தில் “அந்தரன்” சஸ்பென்ஸ் த்ரில்லர் படம்.

ரேட்டிங் 3/5.