‘சிங் கீதம்’ திரைப்பட விமர்சனம்!

14

 

CHENNAI:

படம் :சிங் கீதம்

நடிப்பு : அய்யன்,  அயில்யா பம்ரு,  ஷாலினி கொண்டிபுடி, சிவ நாராயணா நரிபெட்டி, துளசி மற்றும் பலர்

தயாரிப்பு: நாக் அஸ்வின்

இசை: தேவி ஸ்ரீ பிரசாத்

ஒளிப்பதிவு: அங்கூர் சஞ்சீவ்

இயக்கம்:சிங்கீதம் சீனிவாச ராவ்

பிஆர்ஓ : யுவராஜ்.

இன்றைய சினிமா உலகில் பெரும்பாலான படங்கள் ஒரே மாதிரியான கதைக்களங்களிலும், பழக்கப்பட்ட திரைக்கதைகளிலும் பயணிக்கும் சூழலில், 94 வயதிலும் முற்றிலும் புதிய முயற்சியுடன் களமிறங்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ். கமலை வைத்துப் ‘பேசும் படம்’ என்ற வசனமே இல்லாத திரைப்படம் இயக்கிய இவர் இந்த வித்தியாச படத்தை இயக்கி இருக்கிறார்.

இந்தப்படத்தில் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதே பாடலாக அமைந்து ஆச்சரியப்படுத்துகிறது.

சிறையில் இருந்து விடுதலையாகும் நாயகன் அயான், அவர் குடும்பத்துக்குச் சொந்தமான சுமார் 100 ஏக்கர் நிலம் இருப்பது தெரிய வருகிறது.அந்த நிலத்தைத் தேடி குபேரபுரம் என்ற ஊருக்கு செல்கிறார்.பாலைவனம் போல் காட்சியளிக்கும் அந்தஊர் மக்கள், தோண்டப்பட்டு இருக்கும் இரண்டு தங்கச்சுரங்கங்களை நம்பி வாழ்கிறார்கள்.

அதில் நாயகனுக்கு ஒரு சிக்கல்.அதனால்,தன் நிலத்திற்கான பணம் கிடைத்தவுடன் அங்கிருந்து வெளியேற திட்டம் போடுகிறார்.ஆனால்,அவரது திட்டம் நிறைவேறாதபடியும்,அவரால் அங்கிருந்து வெளியேறாதபடியும் அங்கு ஒரு சம்பவம் நடக்கிறது. அதனால் அந்த ஊரில் உள்ள அனைவரும் சாதாரணமாக பேசும் வார்த்தைகளை கூட பாடலாகப் பாடும் விநோதமான சிக்கலில் சிக்கிக்கொள்கிறார்கள்.

மக்கள் மட்டும் அல்ல,அந்தஊரில் இருக்கும் கோழி கூட அதிகாலை கூவலை சங்கீத பாணியில் வெளிப்படுத்துகிறது.மக்களும் தங்களது சாதாரண வார்த்தைகளை கூட பாடலாக பாடுவதை,குபேர கடவுள் கொடுத்த சாபம் என்று கருத,அந்த சாபத்தில் இருந்து விடுபட்டார்களா? இல்லையா? என்பதுதான் ‘சிங் கீதம்’ படத்தின் மீதிக் கதை.

நாயகனாக நடித்திருக்கும் அயான், ஆரம்பத்தில் சுயநல எண்ணத்துடன் வாழும் இளைஞனாக தோன்றினாலும், கதை நகர நகர அவரது மனநிலையில் ஏற்படும் மாற்றத்தை இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார். கதாநாயகியாக நடித்துள்ள அகல்யா பம்ரூ, இயற்கையை நேசிக்கும் பெண்ணின் உறுதியையும், சமூக அக்கறையையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

தங்கச்சுரங்கத்தின் உரிமையாளராக நடித்திருக்கும் ஷாலினி கொண்டேபூடி, சைலஜம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிவேதா பெத்துராஜ், நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் ராகுல் ரவீந்திரன், நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் சிவ நாராயணா, பெனர்ஜி, வம்சி ஆகியோர் அளவாக நடித்து வரவேற்புப் பெறுகிறார்கள்.

திடீரென்று சிறப்புத்தோற்றத்தில் வந்து கவனம் பெறுகிறார் விஜய் தேவரகொண்டா.

இப்படத்தின் ஆரம்பத்தில் வித்தியாசமாக தோன்றும் பாடல் வடிவ உரையாடல்கள், கதையோடு ஒன்றிப் போகும் போது பார்வையாளர்களையும் அந்த உலகத்தின் ஒரு பகுதியாக மாற்றுகின்றன.  மனிதர்கள் தங்களது பேராசை மூலம் இயற்கையை அழித்துக் கொண்டிருந்தால், எதிர்காலத்தில் அதே இயற்கையால் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்கிற ஆழமான கருத்தை, நவீன முறையில் காட்சிப்படுத்தி, இந்த  முதிர்ந்த வயதிலும், புதிய முயற்சியில் இறங்கி, அதை சரியான முறையில் திரையில் கொண்டு வருவதற்குக் கடுமையான உழைப்பைச் செலுத்தியிருக்கிறார் இயக்குநர் சிங்கிதம் சீனிவாசராவ்.

மொத்தத்தில் “‘சிங் கீதம்’” ஒரு இசை கவிதை.

ரேட்டிங்: 4/5.