
CHENNAI:
நடிகர்கள் :-
அஜய் கார்த்தி – விக்னேஷ்
அஞ்சனா நேத்ரன் – பிரியா தர்ஷினி
நட்ராஜ் சுப்பிரமணி (எ) நட்டி – பாலச்சந்தர்
கே.பாக்யராஜ் – கருணாகரன்
விடிவி கணேஷ்
இந்துமதி மணிகண்டன்
சிபி சக்ரவர்த்தி – சந்தோஷ்
தொழில்நுட்பக் குழு:-
எழுத்து – இயக்கம்: கல்யாண் கே.ஜெகன்
கதை: கணேஷ் கே பாபு
தயாரிப்பு நிறுவனம்: எம்ஜி ஸ்டுடியோஸ், 5 ஸ்டார்
தயாரிப்பாளர்கள்: ஏபிவி மாறன், கணேஷ் கே பாபு.
இந்தப் படம் ஆரம்பத்திலேயே சில நிமிடங்களிலேயே மர்மத்தின் கதவைத் திறக்கும் இயக்குநர், இறுதிக் காட்சி வரை அந்த மர்மத்தை சுவாரஸ்யம் குறையாமல் சுமந்து செல்வது இந்த படத்தின் மிகப்பெரிய பலமாக அமைகிறது. ஒரு சாதாரண பேய் வீட்டுக் கதையாக தொடங்கும் திரைக்கதை, காட்சி நகர நகர மனதை பதற வைக்கும் சம்பவங்களாக மாறி, இறுதியில் யாரும் எதிர்பார்க்காத திருப்பங்களுடன் நிறைவடைகிறது.
ஒரு வீட்டில் தற்கொலை நடந்துவிட்டால் விசயமறிந்த யாரும் அந்த வீட்டுக்குக்குள் குடிபுகமாட்டார்கள். ஆனால்,ஒரு வீட்டில் வாடகைக்குக் குடியிருக்கும் மூன்று இளைஞர்களில் ஒருவர்,மற்ற இருவரையும் கொடூரமாக கொலை செய்துவிட்டு, அவரும் தற்கொலை செய்து கொள்கிறார். இதற்குப் பிறகு அந்த வீட்டுக்கு யாராவது வருவார்களா என்ன? இந்த சூழலில் சென்னையில் வேலை தேடி வரும் இளைஞர் அஜய் கார்த்தி, மிகக் குறைந்த வாடகையில் கிடைக்கும் அந்த பெரிய வீட்டில் குடியேறுகிறார். ஆனால் அந்த வீடு சாதாரண வீடு அல்ல. பல ஆண்டுகளாக கொலை, தற்கொலை சம்பவங்களால் “பேய் வீடு” என்ற பெயரைப் பெற்றிருக்கும் அந்த வீட்டிற்குள் யாரும் காலடி வைக்க தயங்கினாலும், அஜய் கார்த்தி மிக தைரியமாக அந்த வீட்டில் தங்குகிறார்.
அந்த வீட்டின் உரிமையாளரான கே. பாக்யராஜ் கடன் சுமையால் தவிப்பதை அறிந்த அஜய், அவருக்கு உதவ வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் அங்கேயே தங்குகிற சமயத்தில், இரவு நேரங்களில் தொடங்கும் அமானுஷ்ய சம்பவங்கள், அவருடைய வாழ்க்கையை முற்றிலும் மாற்றி விடுகின்றன. அதனால் அவரும் தன்னைத் தானே தாக்கிக் கொண்டு இறக்கிறார்.வீட்டு உரிமையாளரான கே.பாக்யராஜும் இறக்கிறார். இறுதியில் அந்த வீட்டில் நடந்த கொடூர மரணங்களின் பின்னணி என்ன? அஜய் கார்த்தி எதிர்கொண்ட ரகசியங்கள் என்ன? என்பதுதான் “டார்க்” படத்தின் மீதிக் கதை.
துள்ளலான இளைஞராக அறிமுகமாகி பேய்வீட்டுக்குக் குடிபோனதும் பயத்தில் உறைந்து அதிர்ச்சியில் உறைந்து போய் மரணத்தைச் சந்திக்கிற சவாலான வேடமேற்றிருக்கிறார் அறிமுக நாயகன் அஜய்கார்த்திக்.ஜாலியாக தொடங்கி படிப்படியாக அச்சத்தில் உறையும் கதாபாத்திரத்துக்கு முழுநியாயம் செய்திருக்கிறார்.இறந்துபோன் அவர் திடுமென எழுந்து நட்டியிடம் பேசும் காட்சி பயமுறுத்துகிறது..
அஞ்சனா நேத்ரனுக்கு அதிக வேலையில்லை என்றாலும் நிறைவாக இருக்கிறார்.
காவல்துறை அதிகாரியாக முக்கிய வேடமேற்றிருக்கும் நட்டி,கதையின் மையப்புள்ளியாக தான் இருக்கிறோம் என்பதை உணர்ந்து அதற்கேற்ற பொறுப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
வீட்டின் உரிமையாளராக நடித்துள்ள கே. பாக்யராஜ், குறைந்த நேரமே திரையில் தோன்றினாலும், தனது அனுபவம் நிறைந்த நடிப்பால் கதையின் மையப்புள்ளியாக மாறுகிறார். அவரின் திரை இருப்பே படத்திற்கு தனி மதிப்பை சேர்க்கிறது.
சிபி சக்கரவர்த்தி,விடிவி கணேஷ்,அரவிந்த்,சாகுல்,நரேன் ஆகியோரும் அளவாக நடித்திருக்கிறார்கள்.
ரவி சக்தி ஒளிப்பதிவில் கதையில் இருக்கும் மனநடுக்கங்கள் காட்சிகளிலும் எதொரொலித்து பயமேற்றியிருக்கிறது.
மனு ரமேசன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்.பின்னணி இசையில் திகிலுக்கு திகிலூட்டியிருக்கிறார்.
அறிமுக இயக்குநர் கல்யாண் கே.ஜெகன் இயக்கியிருக்கிறார். ஆரம்பம் முதல் இறுதி வரை திகில், மர்மம் மற்றும் சஸ்பென்ஸை மட்டுமே மையமாகக் கொண்டு நகர்வது படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. ஒவ்வொரு காட்சியும் அடுத்த காட்சிக்கான எதிர்பார்ப்பை அதிகரிக்கிறது; ஒவ்வொரு திருப்பமும் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்துகிறது.
மொத்தத்தில் இந்த ‘டார்க்’ மர்மம் கலந்த திகில் படம்.
ரேட்டிங் 3/5.