மண்டாடி -திரை விமர்சனம்

41

 

மீன் பிடிக்க செல்லும்போது படகை வழிநடத்தும் தலைமைப் பொறுப்பில் இருப்பவரே மண்டாடி
எனப்படுவார்.

வழக்கமாக வரும் கடல் சார்ந்த படங்கள் மீனவர்கள் வாழ்க்கை சம்பந்தப்பட்டதாக இருக்கும். கடலில் அவர்கள் பிடித்துக் கொண்டு வந்த மீன்களுக்கு சரியான விலை கிடைக்காமல் அதற்காக அவர்கள் போராடுவதாக இருக்கும். இதனோடு ஒரு மெல்லிய காதலும் இருக்கும்.
மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த படகோட்டி திரைப்படம் படத்தில் இது எல்லாமே இருந்தது. அத்தனையும் ரசிக்கும்படி இருந்தது. அதிலும் கதைக்குத் தேவையான இடத்தில் படகுப் போட்டியும் இருந்து ரசிகர்களை மகிழ்வித்தது.
இந்த வரிசையில் இப்போது வந்திருப்பது சூரி நடித்த மண்டாடி திரைப்படம். இதில் பாய்மர கப்பல் போட்டிக்கு முக்கியத்துவம் தந்திருக்கிறார்கள். கூடவே காதல் நட்பு துரோகம் என்று அழகான கதைப் பின்னல் கதையோடு நம்மை ஈர்த்துக் கொள்கிறது.

கடல் எவ்வளவு பெருசோ அதில் இருக்கிற ஆபத்தும் அவ்ளோ பெருசு. படத்தின் டிரைலரில் வரும் இந்த வசனம் படத்தில் காட்சியாக வரும்போது நிஜமாகவே பிரமிக்க வைக்கிறது.
இந்தப் படத்தில் சூரிக்கு என்ன கேரக்டர் என்று கேட்கத் தோன்றும். மண்டாடியே அவர் தான்.
சரி, கதைக்குள் வருவோமா…
பெரும்பாலும் மீனவர்கள் வாழும் அந்த அழகான கிராமத்தில் கதை நடக்கிறது.
முதல் காட்சியிலேயே அந்த ஊரில் படகுப்போட்டியில் புறக்கணிக்கப்பட்ட முகவை மைந்தன்ஸ் அணியின் கேப்டனான மாரி (நடிகர் மிதுன்) எதிர்தரப்பு அணியான சுனாமி ரைடர்ஸ் கேப்டனை கொல்ல முயற்சிக்கிறார்.

இதனால் ஊரே பரபரப்பாக, கேப்டனின் அப்பாவான சாட்டைப் புலி (நடிகர் சுஹாஸ்) மாரியைக் கொல்ல ஆட்களை
அனுப்புகிறார்.
தன்னை தாக்க வந்தவர்களிடமிருந்து
தப்பிச் செல்லும் மாரி, சென்னையில் வசிக்கும்
தங்கள் ஊர்க்காரரான முத்துக்காளியிடம் (நடிகர் சூரி) அடைக்கலமாகிறார்.
இந்த மாரி, தன் முன்னாள் காதலியின் மகன் என்ற அளவில் அவனைக் காப்பாற்ற வேண்டிய கூடுதல் பொறுப்பு முத்துக் காளிக்கு.

20 ஆண்டுகளுக்கு முன் ஒரு காரணத்துக்காக ஊரை விட்டு போன முத்துக்காளி, இப்போது மாரியுடன் சொந்த ஊருக்குத் திரும்புகிறார். ஊருக்குள் வந்த பிறகே படகுப்போட்டியால் தான் இவ்வளவு பிரச்னைகளும் என்பதை தெரிந்து கொள்கிறார்.
சமரசம் பேசப்போனால் எதிரணி போடும் ஒரே கண்டிஷன், மீண்டும் ஒரு பாய்மர பந்தய போட்டி நடத்த வேண்டும். அதில் ஜெயிக்க முடியாமல் போனால் உங்கள் வழிக்கே வர மாட்டோம் என்பது.
இதைத் தொடர்ந்து முத்துக் காளி,
மாரி சார்ந்திருக்கும் முகவை மைந்தன்ஸ் அணியைப் படகுப்போட்டிக்காக தயார்
செய்கிறார். போட்டியில் வென்றது யார்?
இதற்கிடையே பாய்மர படகுப் போட்டியில் மிகச்சிறந்த வீரரான முத்துக் காளி ஊரை விட்டு போகும் அளவுக்கு என்ன நடந்தது? அதுவும் இருபது வருஷமாக ஊரை விட்டு விலகி இருக்கும் அளவுக்கு அந்தப் பிரச்சனையின் வீரியம் தான் என்ன? சூரிக்கும் சுஹாஸுக்கும் இடையே ஏன்
முட்டல், மோதல்? இந்த கேள்விகளுக்கும் குழப்பம் எதுவும் இன்றி நேர்கோட்டில் செல்லப்பட்ட திரைக்கதை பதில் தருகிறது.
மீனவ குடும்ப நபர் முத்துக்காளியாக சூரி நடிப்பில் புது அவதாரம் எடுத்திருக்கிறார்.
குறிப்பாக பாய்மர படகு போட்டிக்கான
பயிற்சி நடைபெறும் இடத்தில் நடிகர் சூரி தெரியாமல் முத்துக் காளி தான் தெரிகிறார்.
சாட்டைபுலி மகனால் தன் அணி வீரனுக்கு ஆபத்து ஏற்படும் போது பாய்ந்து பாய்ந்து ஒவ்வொரு அடியையும் இடியாக இறக்கும் அந்த ஆக்ஷன், நிஜமான ஆக்ரோஷமாக
கண்முன் விரிகிறது. தன் அணி வீரனின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் போது, அவர் எடுக்கும் ஆவேச தாண்டவத்தில்
நிஜமாகவே அனல்
தெறிக்கிறது.
சூரியின் திரைப்பயணத்தில் மற்றொரு மைல் கல் இந்த மண்டாடி.
சாட்டைப் புலியாக வரும் சுஹாஸ், பழிவாங்கல் உணர்வு களைவெளிப்படுத்
தும் நடிப்பில் தனி அழகு தெரிகிறது. தெலுங்கு திரை உலகில் இருந்து வந்தாலும் இந்த கேரக்டர் மூலம் வலுவாகவே தமிழ் திரையில் காலூன்றி விட்டார் எனலாம்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் மஹிமா நம்பியார்.
சூரிக்கும் அவருக்குமான அந்த கடந்து போன காதல் கவித்துவமானது. அழுது கொண்டே அவர் சூரியை திட்டும் இடத்தில் கூட அவரது ஐம்புலன்களும்
நடிக்கிறது.
பாதிக்கு மேல் வந்தாலும் அந்த முனி கேரக்டர் சத்யராஜ் ஸ்பெஷல்.
கடல் மேல் இருக்க வேண்டிய மரியாதையை அவர் விவரிப்பது தனி அழகு.
சூரிக்கும், சாட்டைபுலிக்கும் இருந்த உறவு பகையாக மாறிய அந்த பிளாஷ் பேக் இந்த சுவாரசிய கதைக்குள் இணைந்த சுகராகம்.
நாயகனின் நண்பனாக பாலா சரவணன், குடும்ப கவுரவத்துக்காக தந்தை வருத்திக் கொள்ளும் கேரக்டரில் ரவீந்திர விஜய் மனதை
நிறைக்கிறார்கள்.
ஜிவி பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் எடுபடவில்லை. அதற்கு வட்டியும் முதலுமாக பின்னணி இசை நின்று பேசுகிறது.
வேல்ராஜ் ஒளிப்பதிவில் கடலுக்குள் நடக்கும் அந்த படகுப் போட்டி பார்த்த கண்கள் அத்தனைக்கும் நிஜமாகவே
சுகானுபவம். குறிப்பாக போட்டியின் போது சீறிப்பாயும் படகுகளை கழுகுப் பார்வையில் அவரது கேமரா தந்து இருப்பது பிரமிப்பு.
இயக்கி இருக்கிறார் மதிமாறன் புகழேந்தி.
போட்டி, பொறாமை, பழிவாங்கல் உணர்வு இதெல்லாம் இந்த படத்திலும் இருக்கிறது. அதை கடல் பின்னணியில் சொல்லி இருப்பது தான் இந்த கதைக்கு கிடைத்த கூடுதல் சிறப்பு. படகு போட்டி நடக்கும் அந்த கடைசி 20 நிமிடம் ரசிகர்களை இருக்கையின் நுனிக்கே
கொண்டு வந்து விடுகிறது.

பிளஸ்: கடல் காட்சிகளில் ரிஸ்க்கான ஷாட் வைத்த ஒளிப்பதிவும், மிரட்டலான சண்டைக் காட்சிகளும்.

மைனஸ்: நாயகனின் முறிந்து போன காதலை இன்னமும் கூட அழுத்தமான காரணங்களோடு சொல்லி இருக்கலாம்.

ரேட்டிங்: 3/5