சர்தார் 2 -திரை விமர்சனம்

22

 

வருஷக்கணக்கில்
தலைமறைவாக இருக்கும் உளவாளி ஒருவரை ரா சிறப்பு குழு தேடுகிறது. இந்த சிறப்பு குழுவில் இடம் பெறாத ரா ஏஜென்ட் கார்த்தி, அவர்களுக்கு முன்பாக அவரை பிடித்து மேலதிகாரியிடம் ஒப்படைத்து தனது திறமையை நிரூபிக்க முயற்சிக்கிறார். ஆனால், அதற்கு முன்பாக அங்கே வந்த சர்வதேச கூலிப்படை கும்பல் ஒன்று அவரிடமுள்ள ரகசிய சாவி ஒன்றை கேட்க, அவர் மறுக்க, துப்பாக்கி
தோட்டக்களால் சல்லடையாக சல்லடையாக்கி விட்டு போகிறது அந்த கும்பல்.
இந்த நேரத்தில்
கார்த்தி அங்கே வந்து விட, இறப்பதற்கு முன்பு அந்த உளவாளி தன்னிடம் உள்ள
ரகசிய சாவியை கார்த்தியிடம் கொடுப்பதோடு, அவரது தந்தை சர்தார் உயிருடன் இருப்பதையும் சொல்லிவிட்டு கண் மூடுகிறார்.
இப்போது மேலும் புதிய பொறுப்புடன்
தந்தையை தேடி செல்லும் கார்த்திக்கு, இறந்த உளவாளி கொடுத்த ரகசிய சாவி போல் மேலும் இரண்டு சாவிகள் இன்னும் இரண்டு உளவாளிடம் இருப்பது தெரிய வருகிறது. அந்த மூன்று சாவிகளையும் கைப்பற்ற முயற்சிக்கும் சர்வதேச கூலிப்படை தலைவன் எஸ்.ஜே.சூர்யா, அதன் மூலம் நாட்டையே அழிக்கும் திட்டம் ஒன்றை செயல்படுத்த
இருப்பதும் தெரிய வர…
கூலிப்படை தலைவனுக்கு முன்பாக மற்ற இரண்டு சாவிகளையும் கைப்பற்ற
தந்தையும் மகனும் நிகழ்த்தும் அதிரடி சாகசங்களே மீதிக் கதை.

‘சர்தார்’ முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் தொடர்ந்தாலும், வேறு ஒரு பிரச்சனையோடு மக்களை எச்சரித்திருக்கும் கதை அமைப்பு, காலத்துக்கேற்ற எச்சரிக்கை மணியாகவும் அமைந்து விடுகிறது.

அப்பா – மகன் என இரட்டை வேடத்தில் வரும் கார்த்தி, தோற்ற மாற்றங்களில் மட்டுமின்றி நடிப்பிலும் ஏகப்பட்ட வித்தியாசம் காண்பித்து இருக்கிறார்.
சூப்பர் உளவாளி என்பதை நிரூபிக்கும் வகையில் சாகசம் நிறைந்த காட்சிகளை மகன் கார்த்தி அசால்டாக கையாளுகிறார். குறிப்பாக, விமான சாகசங்களில் கண்களை இமைக்கவும் விடாத பிரமிப்பு வந்து போகிறது.

சர்வதேச கூலிப்படை தலைவன் பிளாக் டேக்கர் என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் பிரித்து மேய்ந்திருக்கிறார். வில்லனாக இருந்தாலும் மக்கள் செய்யும் தவறுகள், அதனால் எதிர்காலத்தில் ஏற்படும் விளைவுகளை அவர் பட்டியலிடும் இடத்தில் , ‘அட ஆச்சரியம்.’
சிறிய வேடம் என்றாலும் ஆக்‌ஷனில் அதகளப்படுத்தி இருக்கிறார் மாளவிகா மோகனன்.
ஆஷிகா ரங்கநாத்,
ரஜிஷா விஜயன், ஆஷிஷ் வித்யார்த்தி ஆகியோரும் இருக்கிறார்கள்.

யோகி பாபு மற்றும் நிழல்கள் ரவியின் புதிய காமெடி கூட்டணி சிரிக்க வைக்கிறது. அதிலும், வில்லன் எஸ்.ஜே.சூர்யா சொல்லும் கதையை கேட்டு யோகி பாபு கொடுக்கும் ரியாக்ஷனில் சிரிப் பால் திரையரங்கம் அதிர்கிறது.

காட்சிகளை பிரமாண்டமாக படமாக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ்.

ஹாலிவுட் தரத்தில் அமைந்த சாம்.சி.எஸ். சின் பின்னணி இசை படத்தின் பெரும் பலம்.
முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்தை கையாண்டிருக்கும் இயக்குநர் பி.எஸ்.மித்ரன், மீண்டும் ஒரு சமூகப் பிரச்சனையை அழுத்தமாக
பேசி இருக்கிறார். அது வெறும் வசனமாக மட்டும் கடந்து போகாமல் அதிரடி காட்சிகள் வழியே நமக்குள் அதிரடியாக இறங்கி விடுகிறது. இந்த சாகச கதைக்குள் சமூக அக்கறையும் வெளிப்படுவது இயக்குனர் முத்திரை.

பிளஸ்: அப்பா- மகன் இருவரையும் நடிப்பில் பிரித்து காட்டிய கார்த்தியின் நடிப்பு.

பிளாஷ்: மூன்று மணி நேர படம் என்றாலும், நீளம் நினைவுக்கு வராத இயக்கம்.

ரேட்டிங்: 3/5