இம்மார்ட்டல்-திரை விமர்சனம்

20

 

வாடகைக்கு வீடு தேடிக்கொண்டிருக்
கும் பேச்சுலர் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு, ஒரு பெண்ணிடம் இருந்து செல்போன் அழைப்பு வருகிறது. தன் வீட்டில் இருக்கும் இரு அறையில் ஒன்றை வாடகைக்கு விட இருப்பதாகவும், விருப்பம் இருந்தால் பார்க்க வரும்படியும் சொல்கிறார். அந்த இடத்திற்கு சென்று பார்க்கும் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு சகல வசதிகளும் கொண்ட அந்த வீடு பிடித்து போகிறது. அதோடு அந்த வீட்டின் உரிமையாளரான இளம் அழகி கயாடு
லோஹரையும் பிடித்துப் போகிறது உடனே எதைப் பற்றியும் யோசிக்காமல் அந்த வீட்டில் குடியேறி விடுகிறார்.
அடுத்த சில நாட்களிலேயே கயாடு லோஹருக்கு காதல் வலை விரிக்க, அவரும் அதற்காகவே காத்திருந்த மாதிரி காதலுக்கு ஓகே சொல்கிறார்.
இதற்கிடையே திடீரென்று அந்த வீட்டில் கயாடு லோஹரின் தாத்தா என்ற பெயரில் ஒருவர் நடமாடுகிறார். அதை தொடர்ந்து அங்கு பல்வேறு மர்மங்கள் இருப்பதை உணரும் ஜி.வி.பிரகாஷ் குமார் அங்கிருந்து தப்பிக்க முயற்சிக்கிறார். ஆனால் அது முடியாமல் போவதோடு, கயாடு லோஹர் சாதாரணப் பெண் இல்லை என்ற அதிர்ச்சியான உண்மையையும் தெரிந்து கொள்கிறார்.
இதற்கு மேலும் அங்கிருந்தால் தன் கதி அதோ கதி என்பதை உணரும் அவர், அங்கிருந்து தப்பிக்க வழிவகை தேடுகிறார். ஆனால் கயாடு லோஹரின் கழுகுப் பார்வையிலிருந்து அவரால் தப்பிக்க முடிந்ததா? என்பதை சஸ்பென்ஸ் திரில்லர் பாணியில் சொல்வது தான் ‘இம்மார்ட்டல்’.

இம்மார்ட்டல் என்றால் ‘அழியாத, அழிக்க முடியாத’ என்று அர்த்தம். அப்படி ஒரு கதாபாத்திரமும், திகி லுடன் கூடிய சஸ்பென்சும் இந்த கதைக்களத்தை சிறப்புறவே அலங்கரிக்கிறது.
நாயகனாக ஜிவி பிரகாஷ். பார்த்த மாத்திரத்தில் கயாடு லோஹர் மீது காதல்… அதே காதல் விபரீதத்தின்
எல்லை என்பதை உணர்ந்து கொண்டு அச்சுமடையும் இடம் தொடங்கி அவர் நடிப்பு வேறு லெவலில். மாட்டிக்கொண்ட வீட்டிலிருந்து தப்பிக்க
முயற்சிப்பது, பயம் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் பயணிப்பது என்று நடிப்பில் வேறுபாட்டை வெளிக்காட்டக் கூடிய அத்தனை இடங்களிலும் கதையின் நாயகனாக இயல்பாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டு விடுகிறார்
அழகான பெண்களை அழகு ராட்சசி என்று செல்லமாய் வர்ணிப்பது உண்டு. அப்படியோர்
அழகு ராட்சசியாக வந்து நாயகனை பயமுறுத்தும் இடங்களில் எல்லாம் நடிப்பு ராட்சசியாகவும் மாறிவிடுகிறார் டயர் கயாடு லோஹர்.
சிறு சிறு காமெடி வேடங்களில் நடித்து வந்த டி.எம்.கார்த்திக்குக்கு இந்த படத்தில் அழுத்தமான கதாபாத்திரம். அவரும் அதை உணர்ந்து அந்த கேரக்டராகவே மாறி ஆச்சரியப்படுத்துகிறார்.

லொள்ளு சபா மாறன், ஆதித்யா கதிர், அர்ஷு மஹராஜ், பேமா சாம்சோ, சுனிதா ஷ்ரேஷ்டா பொருத்தமான பாத்திரத் தேர்வுகள்.
ஒளிப்பதிவாளர் அருண் ராதா கிருஷ்ணனின் கேமரா நாயகி கயாடு லோஹரை அழகாக காட்டுவதிலேயே முழு கவனமும் செலுத்தி இருக்கிறது.
சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் சுக ராகம். பின்னணி இசை இந்த வித்தியாசமான கதைக் கருவை படம் முழுக்க சுமந்து நிற்கி றது.
எழுதி இயக்கியிருக்கும் மாரியப்பன் சின்னா, சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரோடு ஃபேண்டஸியையும் இணைத்து புதிதாக ஒரு கதை சொல்லி இருக்கிறார்.
5 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு இப்படி ஒரு பிரம்மாண்ட வீடா? என்ற நாயகனின் ஆச்சரியம் இணைந்த கேள்விக்கு பதில் திகிலாக இருக்க, அழகே ஆபத்தாக மாறிப்போகும் அந்த தருணம் இயக்குனருக்கான சிறப்பு முத்திரை. அதே நேரம் நம்ப முடியாத கதை என்பது சிறு பலவீனம்.

பிளஸ்: அழகிய ராட்சசி கயாடு
லோஹரின் கேரக்டர்.

மைனஸ்: நம்ப முடியாத அந்த பிளாஷ்பேக்.

ரேட்டிங்: 3/5.