
லண்டனில் உள்ள நிறுவனம் ஒன்றின் உயர் அதிகாரியான ஸ்ரேயா, சக ஊழியர்களுக்கு சிம்ம சொப்பனம். சிறு தவறு செய்தாலும் கடுமையான தண்டனை நிச்சயம். இப்படி கடுகடு சிடுசிடு ஸ்ரேயாவுக்கு உதவியாளராக வேலைக்கு சேருகிறார், விமல். தங்கப்பதக்கம் வென்ற பொறியியல் பட்டதாரியாக இருந்தாலும், குற்றம் சொல்ல வகையின்றி வேலை பார்த்தாலும் அவரும் அடிக்கடி ஸ்ரேயாவின் கோபத்துக்கு ஆளாகிறார். இதனால் ஸ்ரேயாவை பழிவாங்க சரியான நேரத்துக்கு காத்திருக்கிறார்.
இதற்கிடையே, ஸ்ரேயாவின் லண்டன் விசா முடிவடைந்த நிலையில், அவர் விசாவை தொடர இந்தியா சென்று அங்கிருந்து தான் விண்ணப்பிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
அப்படியும் கூட ஆறு மாதம் கழித்தே அவர் லண்டனில் பணி செய்ய அனுமதி கிடைக்கும். இடையில் ஏதாவது குளறுபடி நடந்தால் லண்டன் வருவது கனவாகி விடும். அவருக்கு கிடைக்க வேண்டிய சி.இ.ஓ பதவி கிடைக்காமல் போகும். இதனால் என்ன செய்வது என்று யோசிக்கும் ஸ்ரேயா, ஒரு முடிவுக்கு வருகிறார்.
ஏற்கனவே நிரந்தர லண்டன் குடியுரிமை பெற்ற விமலை திருமணம் செய்து கொள்வது தான் அந்த முடிவு. அது நடந்தால் லண்டன் குடியுரிமை நிச்சயம்.
ஆனால் இதற்கு விமல் சம்மதிக்க வேண்டுமே. அவரோ ஸ்ரேயா மீதான கோபத்தில் அந்த அலுவலகத்தில் ஸ்ரேயாவுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் எதிராளியுடன் கை கோர்க்கிறார். எதிராளியின் திட்டப்படி ஸ்ரேயாவை திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால், தங்கள் ஊருக்கு வந்து பெற்றோருடன் ஒரு மாத காலமாவது தங்க வேண்டும் என்று கண்டிஷன் போடுகிறார். விமலின் நிபந்தனையை ஏற்று அவருடன் தமிழகம் செல்லும் ஸ்ரேயாவுக்கு விமலின் ஒட்டுமொத்த குடும்பமும் பிடித்துப் போக… விமலை மணந்து அதே ஊரில் செட்டில் ஆக வேண்டும் என்கிற அளவுக்கு அவரது மனநிலையில் மாற்றம் ஏற்படுகிறது.
அதற்கேற்ப விமலின் மனைவியாகவே அறியப்பட்டு அந்த வீட்டில் அடி எடுத்து வைத்திருக்கிறார்.
ஆனால் ஒரு கட்டத்தில் விமலின் பெற்றோரிடம் அவர் உண்மையை சொல்ல வேண்டிய நிர்ப் பந்தம் ஏற்படுகிறது. இதையும் தாண்டி லண்டனில் உயர் அதிகாரியா? அல்லது கிடைத்த அழகான குடும்பத்தோடு தன்னை ஐக்கிய படுத்திக் கொண்டாரா என்பது கிளைமாக்ஸ்.
நாயகனாக விமல் தனக்கான நடிப்பு எல்லையில் அவருக்கே உரிய மேனரிசங்களோடு ரசிக்க வைக்கிறார். குறிப்பாக சிலை ஸ்ரேயாவின் கோபத்துக்குள்ளாகும் விமலின் பயம் கூட ஒருவித அழகு தான்.
நாயகியாக ஸ்ரேயா. அந்த கடுகடு கேரக்டரிலும் அழகு கூடித் தெரிகிறார். கிராமத்துக்கு வந்த பிறகு தனது மனதில் ஏற்படும் மாற்றங்களை நடிப்பில் அழகாக பிரதிபலிக்கிறார்.
விமலின் தந்தையாக பிரபு, அம்மாவாக உமா பத்மநாபன், ஸ்ரேயாவின் தோழியாக புன்னகைப் பூ கீதா, அலுவலக உதவியாளராக சத்யன் பொருத்தமான பாத்திரத்தேர்வுகளில் பிரகாசிக்கிறார்கள் . விமலின் பாட்டியாக கே.ஆர்.விஜயா, ஸ்ரேயாவின் அம்மாவாக ரேகா, தேவ் கில், கிரேன் மனோகர், மகாநதி சங்கர் ஆகியோரம் பழுது இல்லாத பாத்திரப்படைப்புகள் மூலம் திரை வலம் வருகிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஆர்.பி.குருதேவ்வின் கேமரா லண்டன் நகரத்தையும், தமிழக கிராமத்தையும் அழகுற காட்சிப்படுத்தி இருக்கிறது.
அம்ரிஷ் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்க, உயிர்ப்பான காட்சிகளின் துடிப்பாகவே மாறிப் போய் இருக்கிறது, பின்னணி இசை எழுதி இயக்கியிருக்கும் ஆர்.மாதேஷ், சண்டைக் கோழியாக சிலிர்க்கும் ஒரு பெண்ணுக்குள் அன்பு ஊற்றெடுக்க தொடங்கி விட்டால் அவளின் அடுத்த கட்ட நிலை என்ன என்பதை அழகான காட்சி படிவங்கள் ஆக்கி இருக்கிறார்.
எரிமலைக்குள் பனிக்கட்டி குழம்புகள் எப்படி என்ற மேஜிக் இவரது இயக்கத்தில் இயல்பாக நடந்து முடிகிறது.
வில்ல கூட்டணி கிராமத்துக்கே விமலை தேடி வருவதெல்லாம் கொஞ்சம் அதிகப் படி. ஸ்ரேயாவின் மனதில் காதல் கட்டவிழும் அந்த கிளைமாக்ஸ் பனித் தூவலாய் மனம் முழுக்க ஜில்லாக்கி விடுகிறது.
லண்டன் மற்றும் தமிழக கிராமம் என்று இரு தளங்களில் கதை பயணித்தாலும், காதல்,காமெடி, கொஞ்சம் அடிதடி என்று கமர்சியல் முத்திரைக்குள் வந்து விடுகிறது படம்.
பிளஸ்: காதல் மற்றும் காமெடியை அளவாக கையாண்ட இயக்கம்.
பிளாஷ்: வழி நெடுக கதையை அழகுற நடத்திச் செல்லும் இசை.
ரேட்டிங்: 3/5.