பாரிஸ் கஃபே -திரை விமர்சனம்

13

 

வெளிநாட்டில் தங்கி வேலை தேடும் அர்ச்சனாவுக்கு ஒரு கட்டத்தில் வேலை கிடைக்கிறது. அந்த மகிழ்ச்சியை ஊரில் இருக்கும் தனது பெற்றோரிடம் பகிர்ந்து கொள்ள விரும்பி போனில் அம்மாவை தொடர்பு கொள்கிறார். அப்போதுதான் பெற்றோர் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவது தெரிய வருகிறது.

இத்தனைக்கும் அரசு மருத்துவரான குரு சோமசுந்தரமும், கட்டிடக்கலை நிபுணர் மற்றும் சமூக சேவகியுமான அனுமோலும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்கள் பிரிந்து வாழும் பின்னணியில் ஒரு ஆணவக் கொலை இருக்கிறது. மகள் முயற்சியில் இந்த தம்பதியர் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பது பிற்பகுதிக் கதை.

முதன்மை கதாபாத்திரங்களில், கணவன் – மனைவியாக குரு சோமசுந்தரம்- அனுமோல் அந்த தம்பதிகள் கேரக்டரில் வாழ்ந்து இருக்கிறார்கள். ஆணவப் படுகொலையை மறைக்கும் அதிகார மையத்தில் தனது கணவரும் இருந்தார் என்பதை அறிந்து கோபமடையும் அனுமோல், அதனால் பாதிக்கப்படும் குடும்பங்களின் குரலாகவும், அவர்களின் கோபமாகவும் தனது கதாபாத்திரத்தில் உயர்ந்து நிற்கிறார்.

 

செய்தது குற்றம் என்றாலும் குற்றத்திற்கான தண்டனையை அனுபவிக்க தயாராக இருக்கும் கேரக்டரில் குரு சோமசுந்தரம், தன் அளவான நடிப்பின் மூலம் அந்த கேரக்டரை தனது நடிப்பால் உயர்த்திப் பிடிக்கிறார்.

பிரிவுக்குப் பின் ஹோட்டல் ஒன்றில் மனைவியை சந்திக்கும் இடத்தில் இவரின் மொத்த உடம்பும் நடிக்கிறது.

 

இளம் காதல் ஜோடிகளாக விஜய் விஷ்வா- அர்ச்சனா வருகைக்கு பின் கதை இன்னமும் சூடு பிடிக்கிறது. மற்றொரு ஜோடியான சாய் விக்கி -நயனா சாய் வரும் கொஞ்ச நேரத்திலும் கண்களை குளமாக்கி விடுகிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் சதீஷ்.ஜி.யின் கேமராவும், .கே இசையில் பாடல்களும் படத்தின் இன்ன பிற ஜீவன். ஆணவப் படுகொலை பற்றி பேசும் கதையாக இருந்தாலும், அதை வித்தியாசமான பாணியில் கையாண்டிருக்கும் இயக்குநர் சரஜ் சீலனுக்கு ஒரு சபாஷ்.

 

ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான கதைக் களத்தில் ஒரு காதல் ஜோடியின் பிரிவு, அதன் மூலம் கிடைக்கும் தீர்வு என கதையைக் கொண்டு போகிறவர், அதை முடிந்தவரை விறுவிறுப்புடன்
சொல்லி இருக்கிறார்.

பிளஸ்: ஆணவப் படுகொலைக்கு எதிரான இயக்குனரின் புது ட்ரீட்மென்ட்.

பிளாஷ்: காட்சிகளுக்கு கனம் ஏற்றும் பின்னணி இசை.

ரேட்டிங்: 3/5.