
வன தேவதை பெயரில் நடக்கும் மர்மக்கொலைகளும், அதை கண்டுபிடிக்க போராடும் காவல் துறையும்.
நடக்கப் போவதை சொல்லும் ‘தி டார்க் ஹெவன்’ என்கிற ஒரு புத்தகம், அதைத் தொடர்ந்து வரும் கிராமத்தின் மர்மக் கொலைகள்…
அந்த ஊர் மக்களால் சாகடிக்கப்பட்ட வன தேவதையின் சாபத்தால் தான் இது நிகழ்கிறது என்ற கிராம மக்களின் நம்பிக்கை . ஆனால் இந்த கொலைகளின் பின்னணியில் உண்மையில் யார் இருக்கிறார்கள்? என்பதை இறுதி வரை சஸ்பென்ஸ் குறையாமல் விறுவிறுப்பு சிதறாமல் திரைக்கு தந்து இருக்கிறார்கள்.
ஒவ்வொரு ஏழு ஆண்டுகளிலும் குறிப்பிட்ட மாதத்தில் அடுத்தடுத்து நடக்கும் கொலைகள் குறித்து விசாரிக்கும் காவலதிகாரியாக கதாநாயகன் சித்து வருகிறார். சின்னத்திரையில் புகழ்பெற்ற அவருக்கு பெரிய திரையில் இது முதல் படம். ஆனால் முதல் படம் என்று தெரியாத அளவுக்கு அந்த கேரக்டரில் தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறார்.
கொலை வழக்கு விசாரணையின் போது முகத்தில் தானாக வந்து அமர்ந்து கொள்ளும் அந்த இறுக்கம் கூட அவர் நடிப்புக்கு அழகு சேர்க்கிறது. மனைவிக்கு நேர்ந்த துயரம் அவள் கணவனை எப்படி பாதிக்கும் என்ற காட்சியில் கூட அவர் வெளிப்படுத்தும் அந்த உடல் மொழி, தேர்ந்த நடிப்பு மொழியாகி விடுகிறது.
நாயகனின் மனைவியாக நடித்திருக்கும் தர்ஷிகா , மலை கிராமத்துப் பெண்ணாக நடித்திருக்கும் ரித்விகா இருவருமே தங்கள் கேரக்டரின் தன்மை உணர்ந்து சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கிறார்கள். இவர்களில் ரித்விகா அந்த சஸ்பென்ஸ் கேரக்டருக்குள் புகுந்து விளையாடி இருக்கிறார்.
காவலராக நடித்திருக்கும் பிரதீப்புக்கு, இந்தப் படம் ஜாக்பாட். நடிக்க கிடைத்த அத்தனை வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.வேல. ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி.சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு பொருத்தமான பாத்திரத் தேர்வுகளாக நடிப்பில் தங்களை நிலை நிறுத்துகிறார்கள்.
காட்டுக்குள் சுற்றி சுழன்றாலும் பயத்தை விதையாக போட்டு விட்டு போகிறது மணிகண்டனின் கேமரா.
இந்தப்படத்தின் காட்சிகளை,அதில் வந்து போகும் திகிலை நெஞ்சில் ஆணி அடித்த விதத்தில் காட்ட வேண்டுமெனில், அதற்கு பின்னணி இசை மிகமுக்கியம். அதை உணர்ந்து இசையால் படத்துக்கு திகில் கூட்டியிருக்கிறார் இசையமைப்பாளர் சக்தி பாலாஜி.
தொடர்ந்து நடக்கும் கொலைகளுக்குக் காரணம் முன்னோரின் சாபமா? இந்நாள் மனிதர்களின் திட்டமிட்ட செயலா? என்கிற கேள்விகளையும்,படிப்பவர்களின் வாழ்க்கையைப் புட்டுப்புட்டு வைக்கும் புத்தகம் எனும் வியப்பையும் இரண்டறக் கலந்து கதை திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் பாலாஜி. கொலையாளி தொடர்பான சஸ்பென்ஸ் இறுதிவரை காப்பாற்றப் பட்டு இருப்பது தேர்ந்த மர்மக் கதையின் அடையாளம்.
பிளஸ்: கொஞ்சமும் யூகிக்க முடியாத திரைக்கதை.
பிளாஷ்: படம் பார்ப்பவர்களை தொடக்கம் முதல் முடிவு வரை
திகில் குறையாமல் வைத்திருந்த பின்னணி இசை.
ரேட்டிங்: 3.5/5.