தி பாரடைஸ் –திரை விமர்சனம்

8

 

இந்தியாவை வெள்ளையர்கள் ஆண்ட காலத்தில் இந்திய முதலாளிகளுக்கு அடிமையாக வாழ்ந்து கொண்டிருந்த சவாரி இனத்தவர், இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு தங்கள் அடிமை வாழ்வு மாறும்; தங்களுக்கென ஒரு அடையாளம் கிடைக்கும் என்று நம்புகிறார்கள்.
ஆனால், அடக்குமுறை குணம் கொண்ட முதலாளி வர்க்கம் அவர்களுக்கான அடையாளத்தை தடுத்து, அவர்களை அடிமைகளாகவே வைத்திருக்க நினைக்கிறது. மக்களும் தங்களுக்கான அடையாளத்திற்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார் கள்.
இத்தகைய சவாரி இனத்தில் பிறக்கும் நாயகன் நானி, தனது தாயைப் போல், அடக்குமுறைக்கு எதிராக போராடி அடிமையாக இருக்கும் தன் இனத்தை மீட்டு, அவர்களுக்கான அடையாளத்தை பெற்றுக் கொடுக்க முயற்சிக்கிறார். அவரது முயற்சி வெற்றி பெற்றதா? இல்லையா ?, என்பதை ரத்தக் குளியல் நடத்தி சொல்லி இருக்கிறார்கள்.

ஜடால் என்ற கதாபாத்திரத்தில் படம் முழுக்க பின்னி விடப்பட்ட இரட்டை ஜடையுடன் வலம் வரும் நானி, தனது ஆக்ரோஷமான நடிப்பின் மூலம் படத்தை தோளில் சுமக்கிறார். சண்டைக் காட்சிகளில் ஆக்சன் நானி தெறிக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் கயாடு லோஹர், தன் அழகை மேம்படுத்தும் காட்சிகளில் கவர்ச்சி வாசலை திறந்து விட்டிருக்கிறார்.
வில்லனாக நடித்திருக்கும் மோகன் பாபு நாயகனை தூக்கிப்போட்டு பந்தாடும்
அந்த வில்லத்தன நடிப்பில் மிரட்டி இருக்கிறார்.

கதையின் அடித்தளமே நானியின் அம்மாவாக நடித்திருக்கும் சோனாலி குல்கர்னி தான். சோரம் போனவள் என்று தன்னை ஒதுக்கும் மகனை படிப்படியாக நெருங்கி மகனின் அன்பை சம்பாதிக்கும் காட்சி வரை படத்தில் உயிர்த்துடிப்புடன் உலா வருகிறது இவரது கேரக்டர்.
நாயகனின்
நண்பராக நடித்திருக்கும் சம்பூர்னேஷ் பாபு, தணிகலபரணி, விஷிகா, கிருஷ்ண தேஜா, ஈஸ்வரி ராவ் கதையோடு இணைந்த கேரக்டர்களில் வந்து மனதில் நிறைகிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சி.எச்.சாய், குப்பை மற்றும் சகதி நிறைந்த பகுதியையும், அதில் வாழும் சவாரி இன மக்களையும், எதார்த்தமாக காட்சிப்படுத்தியிருக்கிறார். படம் முழுவதிலும் அந்த மாபெரும் மக்கள் கூட்டம் இவரது கேமராவில் நிறைந்து காணப்படுகிறது.

அனிருத் இசையில் பாடல்கள் சுமார் என்றாலும், பின்னணி இசை மிரட்டி விடுகிறது.

எழுதி இயக்கியிருக்கும் ஸ்ரீகாந்த் ஓடெலா , தம் மக்களின் அடிமைச் சங்கிலியை உடைக்க போராடும் நாயகன் என்ற ஒரு வரிக் கதையை வைத்துக்கொண்டு, படம் நெடுக கபடி ஆடி இருக்கிறார் நாயகன் அடிக்கிறார், பிறகு அடி வாங்குகிறார். இப்படியே படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை திரைக்கதை பயணிப்பது ஒரு கட்டத்தில் பார்வையாளர்கள் ரசனையை பதம் பார்த்து விடுவது நிஜம்.

பிளஸ்: மகனின் அன்புக்காக ஏங்கும் அந்த தாய் கேரக்டர்.

மைனஸ்: கதையின் நீளம்.

ரேட்டிங்: 5/10.