ஆல் பாஸ் -திரை விமர்சனம்

54

 

ரத்த சொந்தங்கள் கூட ஒற்றுமையாக வாழ முடியாத காலம் இது. ஆளுக்கு ஒரு சிந்தனை, வேளைக்கு ஒரு அவசர நிலைப்பாடு இப்படி இதற்கு ஆயிரம் காரணம் சொல்லலாம்.
ஆனால் உடன் பிறந்தவர்கள் அல்ல, உடன் பிறந்தவர்களுக்கு நிகரான பாசத்தை கொட்டும் மனிதர்கள் தங்கள் குடும்பத்தோடு குடியிருக்கும் இல்லத்தில் , அன்பின் அவதாரமாக நடை போடுகிறார்கள். வட சென்னை வாசிகளான ஜெயப்பிரகாஷ், சுப்பிரமணிய சிவா, பிரசன்ன பாலச்சந்திரன் ஆகியோர் அந்த குடும்பங்களின் தலைவர்கள். இவர்களைப் போல் இவர்களது குடும்பத்தாரும் ஒற்றுமையாக இருப்பதோடு, பிள்ளைகளும் குடும்பத்தில் மூத்தவரான ஜெயப்பிரகாஷை தங்களது பெரியப்பாவாக நினைத்து அவர் சொல்படி கேட்டு நடக்கிறார்கள்.
இந்த நிலையில், அப்பகுதி எம்.எல்.ஏ.சரத் லோகித்ஷவா, தனது அரசியல் பணிக்காக பழைய கிடங்கு ஒன்றில் பதுக்கி வைத்த ரூ.5 கோடியை மூன்று குடும்பத்தை சேர்ந்த பிள்ளைகள் வீட்டுக்கு கொண்டு வந்து விடுகிறார்கள்.
இதை அறிந்த ஜெயப்பிரகாஷ், அவர்களை கண்டித்து பணத்தை எடுத்த இடத்திலேயே வைக்க சொல்கிறார். ஆனால், அவர் சொல்லை இப்போது அவர் மனைவி கூட கேட்பதாக இல்லை என்னும்போது, மற்ற குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டும்
அவர் சொன்னதை எப்படி கேட்பார்கள்…
அதுவரை அந்த
மூன்று குடும்பத்தாருக்கும் பெரியவர் ஜெயப் பிரகாஷ் சொல்லே வேதமாக இருந்தது. அனைத்து விசயங்களிலும் அவரது முடிவே அவர்களின் முடிந்த முடிவாக இருக்கும்.
ஆனால் எப்போது இந்த கோடிக்கணக்கான பணம் வீடு தேடி வந்ததோ, அப்போதிலிருந்தே அவர் பேச்சு செல்லாக் காசாகி விடுகிறது. 5 கோடியையும் எப்படி செலவழிக்கலாம் என்பது மட்டுமே
குடும்பத்தில் உள்ளவர்களின் சிந்தனையாக இருக்கிறது.
மறுபக்கம் பணத்தை பறிகொடுத்த எம்.எல்.ஏ, தன் பணத்தையும், அதை எடுத்தவர்களையும் கண்டு பிடிப்பதில் தீவிரம் காட்டுகிறார். சிக்கினால் அதோ கதி தான். பணத்தை எடுத்தவர்களை ஸ்கெட்ச் போட்டு காலி பண்ண துடிக்கிறார்.
இதைத் தெரிந்து கொள்ளும் அந்த குடும்பத்தார் திட்டமிட்டபடி பணத்தை செலவு செய்ய முடியாமல் தவிக்க, இறுதியில் எம்.எல்.ஏ. பணத்தை கண்டுபிடித்தாரா? பணம்
கிடைத்தவர்களால் அதற்கான சந்தோஷத்தை அனுபவிக்க முடிந்ததா? வறுமையின் பிடியில் இருந்து செழுமைக்கு ஆல் பாஸ் ஆனார்களா என்பது படத்தின் கதை.

வட சென்னை வாழ்வியலையும், அம்மக்களைப் பற்றியும் பேசும் கதையாக மிதமான வேகத்தில் தொடங்கும் படம், எம்.எல்.ஏ பதுக்கிய பணத்தை சிறுவர்கள் கைப்பற்றிய உடன் ஜெட் வேகத்துக்கு மாறிவிடுகிறது.

கதையின் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ஜெயப் பிரகாஷ், சுப்பிரமணிய சிவா, பிரசன்னா பாலச்சந்திரன் ஆகியோர் தங்களது மிகையற்ற
நடிப்பின் மூலம் நடுத்தர மக்களின் வாழ்வியல் அம்சங்களை இயல்பாக பிரதிபலித்திருக்கி
றார்கள். இவர்களது மனைவிகளாக நடித்திருக்கும் செந்திகுமாரி, வினோதினி, மோகனா. ஆர் ஆகியோர் பணம் வந்த பிறகு மாறும் இடம் அத்தனையிலும் நகைச்சுவையும் கூட இணைந்து கொள்கிறது.

இளம் ஜோடியாக நடித்திருக்கும் துஷ்யந்த் ஜெயபிரகாஷ்,- ஜனனி படத்தின் இளமை ஏரியாவுக்கு நல் வரவு.
எம்.எல்.ஏ. கதாபாத்திரத்தில் சரத் லோகித் ஷவா, கவுன்சிலர் கதாபாத்திரத்தில்
சத்யா, போலீஸ் இன்ஸ்பெக்டராக அருவி மதன் தங்கள் பாத்திரப் படைப்பால் காட்சிகளுக்கு சிறப்பு சேர்க்கிறார்கள்.

வட சென்னை பகுதியில் கூட்டுக்குடும்பமாக வாழும் உணர்வை கொடுத்திருக்கிறது,
ஒளிப்பதிவாளர் தில்ராஜுவின் கேமரா.
ஜேம்ஸ் வசந்தன் இசையில் பாடல்கள் அனைத்தும் சுக ராகம்.
கதையோடு இணைந்த பின்னணி இசை மனதோடு பின்னிக் கொள்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் மைதீன், அரசியல்வாதியின் கருப்பு பணம் நடுத்தர குடும்பங்களின் இல்லம் சென்று சேர்ந்த பிறகு அவர்கள் இதயங்களில் ஏற்படும் மாற்றங்களை, பேராசையை, மாட்டிக்கொண்டு விடுவோமா என்கிற பயத்தை காட்சிப்படுத்திய விதத்தில் பிற்பகுதி காட்சிகள் இறக்கை கட்டி பறக்கின்றன.
வெறிபிடித்த
வேங்கையாய் தனது பணத்தை தேடி அலையும் எம்எல்ஏ.விடம் இந்த அப்பாவி குடும்பங்கள் சிக்கி விடுமோ என்கிற
பயம் தான் பிற் பகுதி படத்தை ஆணிவேராக தாங்கி நிற்கிறது.

இழந்த பணத்தை கண்டுபிடிக்க எம்.எல்.ஏ. கையாளும் யுக்தி, அதனால் கையில் பணம் இருந்தும் செலவு பண்ண முடியாமல் தவிக்கும் குடும்பத்தார், அதோடு அந்த பணத்தால் அவர்களுக்கு இடையே ஏற்படும் பிளவு ஆகியவற்றை நம்பகத்தன்மையுடன் சொல்லி ஆல் பாஸ் ஆகி விடுகிறார், இயக்குநர்.

பிளஸ்: நடுத்தர குடும்பத்தின் ஜெயப் பிரகாஷ் உள்ளிட்ட கேரக்டர்கள்.

பிளாஷ்: பரபரப்புக்கு பக்குவ தீனி போடும் ஜேம்ஸ் வசந்தனின் பின்னணி இசை.

ரேட்டிங்: 3/5.