
அடிதடி, வெட்டு குத்து, லிட்டர் கணக்கில் ரத்தம் என பார்த்து பார்த்து சலித்து போன கண்களுக்கு முற்றிலும் மாறுபட்ட இன்னொரு தளத்தில் நெஞ்சை நிறைக்கும் திரை அனுபவமாக திகட்ட திகட்ட ஒரு கதை தந்திருக்கிறார்கள்.
சிறு வயதில் பறக்கும் தட்டு, மந்திரக் கோல் மாயக்கிழவி
மூலம் அழகு தேவதைக்கு வந்த ஆபத்து இப்படியான கதைப் பின்னணியில் காமிக்ஸ் புத்தகங்கள் நம் கண்களையும் மனதையும் நிறைத்தது உண்டு. இம்மாதிரியான கதைகள் எப்போதுமே குழந்தைகளின் பேவரைட் என்றாலும், பெரியவர்களையும் குழந்தையின் மனநிலைக்கு மாற்றி ரசிக்க வைத்திருக்கும் படம் என்பது இந்த
ட்ரோன்ஸ்சின் சிறப்பு.
நண்பர்கள் கிஷோர்( டிராவிட் செல்வம் ), கருப்பட்டி ( அஞ்சலி நாயர்), தஷ் (தீபக்) மூவரும் கல்லூரி மாணவர்கள்.
சோதனையாக கல்லூரியில் இருந்து மூவரும் சஸ்பெண்ட் ஆனதால் பிளாக் ஹோல் எனப்படும் ஒரு விஞ்ஞான கூடத்தில் தங்கி இருக்கிறார்கள். அங்கிருந்து வெளியே செல்ல முடியாத நிலையில் ட்ரோன் மூலம் வெளி உலகத்தை பார்க்கிறார்கள். அப்போது தேவதைக்கு நிகரான பக்ருதியை( சித்தி இத்னானி ) கண்டு காதல் கொள்கிறான் கிஷோர்.
இந்த காதலை பக்ருதியின் பாட்டி சூனியக்காரக் கிழவி (தேவதர்ஷினி ) எதிர்க்கிறார். ஒரு கட்டத்தில் கிஷோரை மட்டுமின்றி அவரது நண்பர்களையும் மந்திர சக்தியை பயன்படுத்தி தனது மாயக் கோட்டைக்குள் அடைத்து வைக்கிறார், சூனியக் கிழவி. சிக்கிய நண்பர்களுக்கு அதுவரை அழகு தேவதையாக காட்சி தந்து தங்களை வசீகரித்த பக்ருதி தான் சூனியக் கிழவி என்று தெரிய வர…
இப்போது சூனியக் கிழவியின் ஒரே கண்டிஷன், நண்பர்களில் ஒருவர்
தன்னை மணந்து கொள்ள வேண்டும். இல்லையேல் யாரும் அங்கிருந்து உயிருடன் வெளியே போக முடியாது.
இப்போது நண்பர்கள் நிலை என்ன? அவர்கள் உயிர் தப்பினார்களா? இல்லையேல்
சூனியக் கிழவியின் சாபத்துக்கு ஆளாகி உயிரை விட்டார்களா? என்பது கொஞ்சமும் எதிர்பாராத கிளைமாக்ஸ்.
இந்தக் கதைக்குள் ஒரு
சைக்கோ கொலைகாரனையும் உலவ விட்டு கூடுதல் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
இப்படி ஒரு கதை திகில் மயமாகத் தானே இருக்கும். அதுதான் இல்லை. மாறாக சிரிப்பும் களிப்புமாய் தந்திருக்கிறார்கள்.
படத்தின் தொடக்கம் முதலே கதை வேகம் பிடித்து விடுகிறது. ட்ரோன் மூலம் நாயகி சித்தி இத்னானியை பார்த்தது முதலே இந்த காதல் கை கூடுமா என்ற எதிர்பார்ப்பு நமக்குள்ளும் வந்து விடுகிறது.
இடைவேளைக்குப் பிறகு கிளைமாக்ஸ் வரை கலகலப்பு, மாய தந்திரங்கள் என இந்த ட்ரோன்ஸ் ஜெட் வேகத்துக்கு போய் விடுகிறது.
பிளாக் ஹோல் என்ற பெயரில் ஒரு சயின்ஸ் லேப் அரங்கம், சூனியக்காரி வீடு என்ற இன்னொரு அரங்கம் அமைத்த கதை இயக்குனருக்கு ஸ்பெஷல் பாராட்டு.
பரிதாபங்கள் எபிசோட்களில் வரும் டிராவிட் செல்வம் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார். வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு நடனம் நடிப்பு காமெடி என ஒவ்வொன்றிலும் அழகாக ஸ்கோர் செய்கிறார்.
சூனியக் கிழவியிடம் அறைக்குள் வசமாக சிக்கிக்கொண்ட நிலையில் பரிதாபம் என்ற வார்த்தைக்கு இவர் முகமே விளக்கமாகி விடு கிறது.
பக்ருதி என்ற தேவதை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சித்தி இத் னானி, நடிப்பிலும் அழகு தேவதையாக வசீகரிக்கிறார். ஆவியின் ஆதிக்கமாய் மாறும் இடங்களில் பயமுறுத்தவும் செய்கிறார்.
சூனியக்காரி கிழவியாக வரும் தேவதர்ஷினிக்கு இந்த கேரக்டர் நிஜமாகவே ஜாக்பாட். பயமுறுத்தும் இடங்களிலும், கண்ணீர் சிந்தி தன் அவலம் சொல்லும் கிளைமாக்சிலும் அந்த கேரக்டரின் ஒட்டுமொத்த பாரத்தையும் நமக்குள் இறக்கி வைத்து விடுகிறார்.
சைக்கோ கொலைகாரனை கண்டுபிடிக்க துப்பறியும் சாம்புவாக மாறும் இன்ஸ்பெக்டர் சினிமாவாலா சதீஷ் சீரியஸுக்கும் சிரிப்புக்கும் நடிப்பில் ஒரு சேர கேரண்டி தருகிறார். தனக்கு ஒரு காதலி அமையவில்லை என்று புலம்பித்
தவிப்பவர், கிளைமாக்கில் எடுக்கும் முடிவு நிச்சயம் எதிர்பாராதது. அவர் எடுக்கும் அந்த முடிவு அந்த கேரக்டரை உயரத் தூக்கிப் பிடிக்கிறது.
படத்தில் மிக சிறப்பாக படைக்கப்பட்ட இன்னொரு கேரக்டர் அஞ்சலி நாயருக் கானது. நாயகனுக்கும் இவருக்கும் இடையிலான அந்த நட்பு கத்தி முனையில் நடப்பது போன்றது. அதில் காயம் படாமல் அழகாக நடந்து இந்த கேரக்டரை சிறப்பு செய்கிறார். தன்னை காதலிப்பதாக சொல்லும் நண்பனுக்கு அவர் கொடுக்கும் பதில், காதலுக்கான கௌரவம். நட்புக்கான மரியாதை.
குரோஷி, ஆர் ஜே.தீபக் ஏற்ற கேரக்டர்களில் நிரம்பி நிற்கிறார்கள்.
இசையமைத்த ஹரி எஸ்.ஆர். பின்னணி இசையில் தனக்கான முத்திரை பதிக்க,
ஜெயந்த் சேது மாதவ நாயரின் கேமரா காட்சிகளோடு நம்மை நெருக்கமாகி விடுகிறது.
பன் பட்டர் ஜாம் படம் மூலம் கவனம் ஈர்த்த ஆர். ராகவ் மிர்தாத் இப்படத்தை குழந்தைகளுக்கும் பெரியோர்களுக்கு
மான படமாக கொடுத்து இருக்கிறார். தன்னை நேசிப்பவனுக்காக சோனியா கிழவியின் 6 ஆயிரம் வருட காத்திருப்பு நிறைவேறும் அந்த கிளைமாக்ஸ் நிஜமாகவே உருக்கமானது. மனதுக்கு நெருக்கமானது.
அப்படியே
நிற பாகுபாடு காட்டும் மனிதர்களுக்கும் போதிய சவுக்கடி தந்து இருக்கிறார்.
அந்த வகையில் இந்த ட்ரோன்ஸ் – குடும்பமாய் கொண்டாட கிடைத்த ஒரு ஜாலி மேளா.
பிளஸ்: காதலுக்கு உன்னதம் சேர்க்கும் அந்த கிளைமாக்ஸ்.
பிளாஷ்: அந்த ரோபோ
பெண்ணை இன்னும் கூட அதிகம் பயன்படுத்தி இருக்கலாம்.
ரேட்டிங்: 3/5.