ஹைக்கூ-திரை விமர்சனம்

32

 

காதலியால் கைவிடப்பட்ட நாயகன்.
 காதலனால் மன
நெருக்கடிக்கு உள்ளான நாயகி.
இந்த இருவரையும் ஒரு நேர்கோட்டு பயணத்தில் காதல்
இணைக்கிறது. இவர்கள் இடையே மலரும் காதல் என்ன ஆனது என்பதே ஹைக்கூ திரைப்படத்தின் கதைக்களம்.
கல்லூரிக் காலத்தில் உடன் படிக்கும் மாணவி காட்டும் அன்பு நாயகனுக்
குள் காதலாய் மலர்கிறது. ஆனால் காதலியின் மீதான அதீத அன்பில் அவள் மீது அதிக அக்கறை எடுத்துக் கொள்ளப் போக, ஒரு கட்டத்தில் அவர்கள் பிரிவுக்கும் அதுவே காரணமாகிறது.
காலங்கள் கடந்ததில் காயம் ஆறி தழும்பு மட்டும் அடையாளச் சின்னமாய் இருக்க…
 இப்போது நாயகன் ஒரு பிரபல நிறுவனத்தின் உயர் அதிகாரி. இந்த நிறுவனத்தில் பணிக்காக வரும் பெண்ணுக்கு அவன் காட்டும் பரிவு பிடித்துப் போகிறது.
அவளும் ஏற்கனவே இளைஞன் ஒருவனுடன் காதல் வசப்பட்டவள். அவன் இவள் மீது அதிக உரிமை எடுத்துக் கொள்வதாக எண்ணிக்கொண்டு, சின்ன சின்ன விஷயங்களிலும் கண்ட்ரோல் என்ற பெயரில் வதைக்கிறான். ஒரு கட்டத்தில் காதலியின் தேகம்
மீதே அவனுக்கு சந்தேகம் வர, இப்போது காதலி ஒரேயடியாக காதலுக்கு குட்பை சொல்லி பிரிந்து விடுகிறாள்.
இவள் காதலின் முன் கதை சுருக்கம் தெரிய வந்தும், இந்தப் பெண்ணின் அன்பு இவனை மறுபடியும் காதலுக்குள் இணைக்கிறது. தனது முதல் காதல் எதனால் முறிந்தது என்பதை மனதில் வைத்துக் கொண்டு, இந்த காதலியை அன்பால் தாங்கு தாங்கு என்று தாங்குகிறான். முதல் காதலியிடம் எதற்கெல்லாம் கோபப்பட்டானோ, அதே கோபத்தை இரண்டாம் காதலி விஷயத்தில் அப்படியே கனிவாக மாற்றுகிறான். அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு என்பது போல், அந்த அதிகபட்ச அன்பு இந்த காதலிக்கு ஒரு கட்டத்தில் மன உளைச்சலை கொண்டு வருகிறது.
இவனை முழுசாக தெரிந்து கொள்ள, திருமணம் முடிந்து புதிய வாழ்க்கையில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கும் இவனது பழைய காதலியை தேடிப் போய் சந்திக்கிறாள். அவள் விஷயத்தில் எதையெல்லாம் கோட்டை விட்டானோ, அதையெல்லாம் இப்போது தனக்கு கோட்டையாக கட்டி காதலை காத்து வருகிறான் என்பது தெரிய வர…
“என் மீது நீ காட்டும் அன்பின் ஒவ்வொரு துளியிலும் உன் பழைய காதலி தான் எனக்கு தெரிகிறாள். இன்னும் உன்னால் மறக்க முடியாத அவளை நீ என்னில் பார்க்க வேண்டாம். இது காதல் அல்ல. பழைய கடன். நாம் பிரிந்து விடலாம்” என்று இரண்டாம் காதலியும் குட் பை சொல்லி பிரிந்து விட…
அவர்கள் மீண்டும் இணைந்தார்களா? என்பது சுவாரசியமும் திருப்புமுனையும் இணைந்த
கிளைமாக்ஸ்.
நாயகனாக நடித்திருக்கும் ஏகன், இந்த காதல் கதைக்குள் அழகாக பொருந்திப் போகிறார். ஒட்டுமொத்தக் கல்லூரியிலும் மாணவிகளே நிறைந்திருக்க, இவர் மட்டும்தான் அந்த கல்லூரியின் ஒரே மாணவர். அங்கே ஒட்டுமொத்த மாணவிகளின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி மாட்டிக்கொண்ட ஒரு
 மாணவனின் மனநிலையை நடிப்பில் இயல்பாக வெளிப்படுத்தி வரவேற்புப் பெறுகிறார்.
முதல் காதல், அடுத்த காதல் இரண்டுக் குமான வருட இடைவெளியை, அனுபவ முதிர்வை தோற்றத்தில் மட்டுமின்றி தேர்ந்த நடிப்பிலும் காட்டியிருக்கிறார்.
முதல் காதலை மறக்க முடியாமல், இரண்டாம் காதலியின் மீது அவர் காட்டும் ஒட்டு மொத்த அன்பும் வம்பாய் முடிகிற இடத்தில் அந்த இக்கட்டான தருணத்தை உடல் மொழி வரை கச்சிதமாக வெளிப்படுத்தி ஆச்சரியப்படுத்துகிறார்.
கல்லூரி மாணவியாக வரும்
ஸ்ரீதேவி அப்பல்லா வுக்கு,வெறுமனே காதலியாக மட்டும் வந்து போகாமல் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ளும் வேடம். அதை தனது நடிப்பில் அழகாக எதிர்கொண்டி ருக்கிறார்.
இன்னொரு காதலியாக வரும் ஃபெமினா காதலனின் அன்பை விபரீதமாக பார்க்க தொடங்கும் இடத்திலிருந்து தனித்துவ நடிப்பில் பிரகாசிக்கிறார்.
நாயகனின் நண்பனாக வருபவர்களில் அதிர்ச்சி அருண்
தனது நடிப்பில் உண்மை நட்பை பிரதிபலிக்கிறார். நண்பன் மட்டுமின்றி நண்பனின் காதலியும் தன் மீது காட்டும் அன்பில் அவர் உருகிப் போகும் இடம் அவருக்குள் இருக்கும் ஒரு நல்ல குணசித்திர நடிகனை வெளிக்கொண்டு வருகிறது.
 சுப்பிரமணியசேது,
அதியமான் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தத்தம் வேடங்களுக்கேற்ப கதைக்குள் கலந்து போகிறார்கள்.
சித்துகுமார் இசையில் பாடல்கள் கேட்ட மாத்திரத்தில் மனதுக்குள் இடப்பெயர்ச்சி செய்துவிட, பின்னணி இசையிலும் கவனிக்க வைத்திருக்கிறார்.
பிரியேஷ் குருசாமியின் கேமரா காட்சிகளை இளமைத் துள்ளலாய் கண் முன் நிறுத்துகிறது.
எழுதி இயக்கியிருக்கும் யுவராஜ் சின்னசாமி,ஒட்டு
மொத்தக் கல்லூரியிலும் ஒரே மாணவன்… மற்ற எல்லாரும்
மாணவிகள் என்கிற சுவையான கதைக் களத்தில் தொடங்கி, மாறுபட்ட இரு வேறு காதல் வழியாக அதை நகர்த்தி காதலுக்கு புது இலக்கணம் தந்திருக்கிறார்.
குறிப்பாக நாயகனின் இரண்டாம் காதலில் அதிகபட்ச அன்பே பிரிவுக்கு வழிவகுக்கும் இடத்தில் சபாஷ் சொல்ல வைக்கிறது, இயக்கம்.
இது மூன்று வரிகளில் முடிந்து விடும் ஹைக்கூ கவிதை மட்டுமல்ல. காதலுக்கு புதிய கோணத்தில் விளக்கம் தரும் வாழ்க்கைக் கவிதையும் கூட..
பிளஸ்: காதலிக்கு நேர்ந்த உளவியல் சிக்கலை இயக்குனர் கையாண்ட விதம்.
பிளாஷ்: நாயகனின் முதல் காதலை ஜாதி பிரிக்குமோ என்று எதிர்பார்க்க வைத்து வேறு கோணத்தில் யூடர்ன் அடித்த திரைக்கதை.
ரேட்டிங்: 3/5