
CHENNAI:
படம்: பேரன்பும் பெருங்கோபமும்
நடிப்பு: விஜித் பச்சான், ஷாலி வேகாஸ், மைம் கோபி, அருள்தாஸ், ,தீபா சங்கர், கீதா கைலாசம், சுபத்ரா ராபர்ட், என்.பி.கே. எஸ்.லோகு, சாய் வினோத், சி வலினா
தயாரிப்பு: காமாட்சி ஜெயகிருஷ்ணன்
இசை: இளையராஜா
ஒளிப்பதிவு: தினேஷ்குமார்
இயக்கம்: சிவபிரகாஷ்
பிஆர்ஓ: ஜான்சன்
தேனி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆண் தலைமை செவிலியராக பணியாற்றும் நாயகன் விஜித் பச்சான், குழந்தை கடத்தல் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு விசாரிக்கும் போது, குற்றத்தை ஒப்புக்கொள்வதோடு, போலீசாரிடம் பல அதிர்ச்சிகரமான தகவல்களை தெரிவிக்கிறார். இதையடுத்து அவரை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் போலீசார், அவர் பற்றி விசாரிக்கும் போது, சிறைக்கு செல்ல வேண்டும் என்று திட்டமிட்டே விஜித் அனைத்தையும் செய்தார், என்ற உண்மை தெரிய வருகிறது. விஜித் செய்யாத குற்றத்தை செய்ததாக கூறி சிறைக்கு சென்றது ஏன்?, போலீசாரிடம் அவர் தெரிவித்த ரகசியம் என்ன? ஆகிய கேள்விகளுக்கான விடையை பல திருப்பங்களோடு சொல்வதே ‘பேரன்பும் பெருங்கோபமும்.
நாயகனாக நடித்திருக்கும் விஜித் பச்சான், கல்லூரி மாணவர், இளைஞர், வயதான தோற்றம் என்று மூன்று விதமான கெட்டப்புகளில் கச்சிதமாக பொருந்துவதோடு, பொருத்தமான நடிப்பை நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார். எந்த இடத்திலும் ஓவராக நடிக்காமல் அளவாக நடித்து கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை ஷாலி நிவெகஸ், குடும்ப பாங்கான முகம், கண்களால் பல எக்ஸ்பிரஷன்களை வெளிப்படுத்தும் திறன் என்று கவனம் ஈர்க்கிறார்.
வில்லன்களாக நடித்திருக்கும் மைம் கோபி, அருள்தாஸ் இருவரும் பழக்கப்பட்ட கதாபாத்திரத்தில் வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் சுபத்ரா ராபர்ட் ,சாதி கெளரவத்திற்காக எடுக்கும் முடிவு நெஞ்சை பதற வைக்கிறது.
கீதா கைலாசம், தீபா, காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் சாய் வினோத், வலீனா, ஹரிதா, என்.பி.கே.எஸ்.லோகு என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் அளவாக நடித்திருக்கிறார்கள்.
இளையராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமை. பின்னணி இசை காட்சிகளில் இருக்கும் கொடூரத்தையும், அதனால் ஏற்படும் பெருங்கோபத்தையும் பார்வையாளர்களிடம் கடத்தும் வகையில் பயணித்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் ஜே.பி.தினேஷ்குமாரின் கேமரா காட்சிகளை அழகாக மட்டும் இன்றி கதாபாத்திரங்களின் மன உணர்வுகளையும், அவர்களிடத்தில் மண்டி கிடக்கும் வன்மத்தையும் திரையில் தெரிய வைத்திருக்கிறது.
ஆணவக் கொலைக்கு பழிவாங்கும் கதை என்றாலும் அதை பல திருப்பங்களோடு சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநருக்கு ஏற்ப காட்சிகளை தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ராமர்.
எழுதி இயக்கியிருக்கும் சிவபிரகாஷ், பல்வேறு காலக்கட்டங்களில் நடந்த சாதி வன்கொடுமை சம்பவங்களை திரைக்கதையில் பயணிக்க வைத்து மனதை பதற வைக்கிறார்.
சாதி ரீதியிலான ஏற்றத்தாழ்வு மற்றும் சாதி வெறி என்பது ஒருவரது பிறப்பினால் வருவதில்லை, அவரது வளர்ப்பினால் மட்டுமே வருகிறது, என்ற கருத்தை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் சிவபிரகாஷ், அதற்கான உதாரணத்தை கதையின் மையப்புள்ளியாக வைத்துக் கொண்டு, அதை திரை மொழியில் சுவாரஸ்யமாகவும் சொல்லியிருக்கிறார்.