’படை தலைவன்’ திரைப்பட விமர்சனம்!

101

 

CHENNAI:

படம்: படை தலைவன்

நடிப்பு: சண்முக பாண்டியன் விஜயகாந்த், கஸ்தூரி ராஜா, யாமினி சந்தர், முனிஷ் காந்த், கருடன் ராம், ரிஷி, ஏ வெங்கடேசன், யோகி சேது, ஸ்ரீஜித் ரவி, அருள்தாஸ், லோகு என் பி கே எஸ்

தயாரிப்பு: ஜெகநாதன், பரமசிவம்

இசை: இளையராஜா

ஒளிப்பதிவு: எஸ் ஆர் சதீஷ்குமார்

இயக்கம்: யு.அன்பு.

பிஆர்ஓ: சதீஷ் (AIM) சிவா

வனப்பகுதியில் இருந்து வழித்தவறி வந்த குட்டி யானை ஒன்றை நாயகன் சண்முக பாண்டியனின் தாயார் தனது வயிற்றில் பிறக்காத பிள்ளையாக நினைத்து வளர்க்கிறார். அம்மாவின் மறைவுக்குப் பிறகு அவர் பாசமாக வளர்த்த யானையை நாயகன் சண்முக பாண்டியன் சகோதரனைப் போல் பார்த்துக் கொள்கிறார். இதற்கிடையே, சண்முக பாண்டியனின் யானைக்கு ஒரு ஆபத்து வருகிறது, அந்த ஆபத்தில் இருந்து தனது யானை அவர் எப்படி காப்பற்றுகிறார், யானைக்கு வரும் ஆபத்து என்ன? யாரால் வருகிறது ? என்பதை தமிழகத்தில் தொடங்கி ஒடிசாவில் முடியும் கதையாக சொல்வதே ‘படை தலைவன்’.

 

நாயகனாக நடித்திருக்கும் சண்முக பாண்டியன், தனது முந்தைய இரண்டு படங்களை விட, இதில் உடல் ரீதியாக மட்டும் இன்றி நடிப்பு ரீதியாகவும் வேறுபாட்டை காட்டியிருக்கிறார். ஆறடிக்கும் அதிகமான உயரம் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு கைகொடுத்தாலும், உணர்வுப்பூர்வமான காட்சிகளில் அவரது எக்ஸ்பிரஷன் மற்றும் உடல் மொழி பெரிதாக எடுபடவில்லை. உடல் எடையை குறைப்பதற்காக கடினமாக உழைத்தது போல், நடிப்பில் தேர்ச்சி பெறவும் கொஞ்சம் உழைத்தால் நல்லது.

 

சண்முக பாண்டியனின் தந்தையாக நடித்திருக்கும் இயக்குநர் கஸ்தூரி ராஜா, பழங்குடியின பெண்ணாக நடித்திருக்கும் யாமினி சந்தர், வில்லனாக நடித்திருக்கும் கருடன் ராம், ரிஷி, முனிஷ்காந்த், யோகி சேது, ஸ்ரீஜித் ரவி, அருள்தாஸ், என்.பி.கே.எஸ்.லோகு, ஏ.வெங்கடேஷ் ஆகியோர் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

 

இளையராஜா இசையமைத்திருக்கிறார் என்பது  டைடில் கார்டில் மட்டுமே தெரிகிறதே தவிர, பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் தெரியவில்லை.

 

ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.சதிஷ் குமாரின் கேமரா கிராமத்து பகுதிகளை அழகாகவும், ஆக்‌ஷன் காட்சிகளை அதிரடியாகவும் படமாக்கியிருக்கிறது.

 

திருப்பங்கள் இல்லாத திரைக்கதையில், அடுத்தது என்ன நடக்கும்? என்பதை பார்வையாளர்களின் யூகங்களுக்கு ஏற்ப தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் எஸ்.பி.அஹமத்.

 

எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் யு.அன்பு, வெளிநாட்டு படமாகவும், நம்ம உள்ளூர் படமாகவும் ஏற்கனவே நாம் பார்த்த ஒரு கதையை அவரது பாணியில் கொடுக்க முயற்சித்திருக்கிறார்.

 

தனது யானையை காப்பாற்ற போராடும் ஒரு நாயகனின் பயணத்தை, ஆக்‌ஷன் மற்றும் உணர்வுப்பூர்வமாக சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநர் யு.அன்பு, அழுத்தம் இல்லாத திரைக்கதை மற்றும் சுவாரஸ்யம் இல்லாத காட்சிகள் மூலம் சொல்லியிருப்பதால் படம் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அதே சமயம், படம் முழுவதும் யானை பயன்படுத்தப்பட்டிருப்பதும், அதற்காக படக்குழு மெனக்கெட்டிருப்பதும் திரையில் தெரிகிறது.

 

விஜயகாந்தை ஏஐ மூலம் மீண்டும் திரையில் தோன்ற வைத்திருப்பதும், அதனை திரைக்கதையோடு சரியான முறையில் பயணிக்க வைத்திருப்பதும் பாராட்டத்தக்கதாக இருக்கிறது. அதே சமயம், காணாமல் போன யானை ஒடிசாவுக்கு எப்படி போனது, உள்ளிட்ட சில விசயங்களை பார்வையாளர்களுக்கு புரியும்படி சொல்லாமல், திடீர் திடீரென்று குரங்கு போல் கதை வெவ்வேறு களங்களில் தாவுவது படத்தின் மிகப்பெரிய பலவீனம்.

ரேட்டிங்/5