’டி.என்.ஏ’ திரைப்பட விமர்சனம்!

98

 

 

CHENNAI:

படம்: டி என் ஏ

நடிப்பு: அதர்வா, நிமிஷா சஜயன், மானசா சௌத்ரி, ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், விஜி சந்திரசேகர், சேத்தன், ரித்விகா, சுப்பிரமணியம் சிவா, கருணாகரன்
:
தயாரிப்பு: ஜெயந்தி அம்பேத்குமார்

பாடல் இசை: ஸ்ரீ காந்த் ஹரிஹரன், சகி சிவா, பிரவீண் சைவி, சத்ய பிரகாஷ் அனல் ஆகாஷ்

பின்னணி இசை: ஜிப்ரான் வைபோதா

ஒளிப்பதிவு: பார்த்திபன்

இயக்கம்: நெல்சன் வெங்கடேசன்

அதர்வாவின் மனைவி நிமிஷா சஜயன் பிரசவத்திற்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அவருக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறந்த சில மணி நேரங்களில் கடத்தப்பட்டு வேறு ஒரு குழந்தை அந்த இடத்தில் வைக்கப்படுகிறது. இதை அறிந்து கொள்ளும் நிமிஷா, இது தனது குழந்தை இல்லை என்று கூறுகிறார். ஆனால், மருத்துவமனை ஆவணங்கள் அனைத்தும் அது நிமிஷா குழந்தை தான் என்பதை உறுதிப்படுத்த, நிமிஷா மட்டும் தனது குழந்தை இல்லை, என்பதில் உறுதியாக இருக்கிறார்.  மனைவி சொல்வதன் பின்னணியை கண்டுபிடிக்க களத்தில் இறங்கும் அதர்வா, தனது குழந்தையை மீட்டாரா? குழந்தை கடத்தலின் பின்னணி என்ன? என்பது தான் மீதிக்கதை.

 

காதல் தோல்வியால் போதைக்கு அடியமையான இளைஞராக அறிமுகமாகி, பிறகு பொறுப்பான கணவராக தனது கதாபாத்திரத்தை அதர்வா சிறப்பாக கையாண்டிருப்பதோடு, நடிப்பிலும் முதிர்ச்சி அடைந்திருப்பது பல காட்சிகளில் தெரிகிறது.

 

கதாநாயகியாக நடித்திருக்கும் நிமிஷா சஜயன், கண்களினாலேயே நடித்திருக்கிறார். குழந்தையை பறிகொடுத்துவிட்டு பறிதவிக்கும் காட்சிகளில் மிரட்டலாக நடித்திருக்கிறார்.

 

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் பாலாஜி சக்திவேலின் கதாபாத்திரமும், அவரது நடிப்பும் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது.

 

அதர்வாவின் அப்பாவாக நடித்திருக்கும் சேத்தன், நிமிஷா சஜயனின் அம்மாவாக நடித்திருக்கும் விஜி சந்திரசேகர், ரமேஷ் திலக், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் செல்வராஜ், சுப்பிரமணிய சிவா ஆகியோர் தங்களது பங்களிப்பை சரியாக கொடுத்திருக்கிறார்கள்.

 

இசையமைப்பாளர்கள் சத்யபிரகாஷ், ஸ்ரீகாந்த் ஹரிஹரன், பிரவின் சைவி, சஹி சிவா, அனல் ஆகாஷ் ஆகியோரது பாடல்களும், ஜிப்ரானின் பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

 

பார்த்திபனின் ஒளிப்பதிவு நேர்த்தி. இரவு நேர காட்சிகள் மற்றும் சண்டைக்காட்சிகளில் அவரது கேமரா மாயாஜாலம் செய்திருக்கிறது.

 

படத்தொகுப்பாளர் வி.ஜே.சாபு ஜோப் காட்சிகளை படத்தை வேகமாக நகர்த்திச் சென்றிருக்கிறார்.

 

குழந்தை கடத்தல் கதையை வித்தியாசமாண கோணத்தில் அணுகியிருக்கும் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன், போலீஸ் விசாரணை, குழந்தை கடத்தல் நெட்வொர்க் போன்றவற்றை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார். அதே சமயம், இரண்டாம் பாதியில் கோவில், சாமி என்று சீரியல் போல நகர்த்தி செல்கிறார்.

 

ரேட்டிங் 3.5/5