
CHENNAI:
படம்: லவ் மேரேஜ்
நடிப்பு: விக்ரம்.பிரபு, சத்யராஜ், சுஷ்மிதா பட், மீனாக்ஷி தினேஷ், ரமேஷ் திலக், கஜராஜ், அருள்தாஸ்
தயாரிப்பு:சுவேதா ஶ்ரீ, ஶ்ரீ நிதி சாகர்
இசை: சான் ரோல்டன்
ஒளிப்பதிவு: மதன் கிரிஸ்டோபர்
இயக்கம்: சண்முக பிரியன்
பி ஆர் ஒ: யுவராஜ்
பெற்றோர் பார்த்துச் செய்து வைக்கும் திருமணத்தை கதைக்களமாகக் கொண்ட படத்துக்கு லவ் மேரேஜ் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.30 வயதுக்கு மேலாகியும் திருமணமாகாத இளைஞர்களின் நிலை, அவர்களின் எண்ணவோட்டம் ஆகியனவற்றை மையமாகக் கொண்டு ஒரு குடும்பப்படம் கொடுக்க முயன்றிருக்கிறார்கள்.அதுதான் இந்தப்படம்.
தேனியில் வசிக்கும் நாயகன் விக்ரம் பிரபுவுக்கு 33 வயதாகியும் திருமணம் நடக்கவில்லை. இதனால் சுமார் ஐநூறு கிலோமீட்டர் தொலைவிலுள்ள கோபிசெட்டிபாளையத்தில் ஒரு பெண் பார்க்கிறார்கள். அந்தப் பெண்ணை நிச்சயிக்க பேருந்து வைத்துக் கொண்டு போகிறார்கள். போன் இடத்தில் நிச்சயம் முடிந்ததும் அங்கேயே தங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.அந்தப் பெண்ணுடன் பேசிப்பழகக் கிடைத்த நல்வாய்ப்பாக நாயகன் நினைக்கிறார்.ஆனால் அந்தப் பெண் திடீரென காணாமல் போகிறார். அவர் என்னவானார்? அதன்பின் என்னவெல்லாம் நடந்தது? என்பதை நகைச்சுவை இழையோடச் சொல்லியிருக்கிறது படம்.
விக்ரம்பிரபுவுக்கு இந்த வேடம் பொருத்தமா? இந்த வேடத்துக்கு விக்ரம்பிரபுவுக்குப் பொருத்தமா? எனப் பட்டிமன்றம் நடத்துமளவுக்கான கதாபாத்திரம்.அதை சரியாகச் செய்து நல்ல வரவேற்பைப் பெறுகிறார்.
நாயகியாக நடித்திருக்கும் சுஷ்மிதாபட் அழகாக இருக்கிறார்.இயல்பாக நடித்திருக்கிறார். வசனங்கள் குறைவு என்றாலும் உடல்மொழியில் இரசிக்க வைக்கிறார்.
இரண்டாவது நாயகியாக இருக்கும் மீனாட்சி தினேஷுக்கு படபடவெனப் பேசுகிற கதாபாத்திரம். அதற்கேற்ப நடித்து வரவேற்புப் பெறுகிறார்.
மாமாவாக நடித்திருக்கும் அருள்தாஸுக்கு மிகுந்த நற்பெயர் கொடுக்கிற வேடம்.அதில் நன்றாக நடித்து மேலும் நற்பெயர் பெறுகிறார்.
ரமேஷ்திலக், கஜராஜ் உள்ளிட்ட நடிகர்களும் பலமாக அமைந்திருக்கிறார்கள்.சிறப்புத் தோற்றத்தில் சத்யராஜ் வந்து போகிறார்.
ஷான்ரோல்டனின் இசையில் பாடல்கள் கேட்கலாம்.பின்னணி இசையில் தாழ்வில்லை.
மதன் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.இயற்கைக் காட்சிகள் அருமை. ஒரே வீட்டுக்குள் பெரும்பாலான காட்சிகள் இருந்தாலும் அவற்றில் முடிந்த அளவு வேறுபாடுகளைக் காட்டி சலிப்பின்றி பார்க்க வைத்திருக்கிறார்.
பரத் விக்ரமனின் படத்தொகுப்பில் கூர்மை வேண்டும்.
எழுதி இயக்கியிருக்கிறார் சண்முகப் பிரியன்.கதாபாத்திரங்களின் உளவியலை முதன்மைப்படுத்தி திரைக்கதை எழுதியிருக்கிறார்.ஓரிரு இடங்களில் படம் நகராமல் இருக்கிறதே என்கிற எண்ணத்தை ஏற்படுத்தினாலும் படம் முடியும்போது ஒரு நல்ல படத்தைப் பார்த்த மனநிறைவைக் கொடுத்திருக்கிறார்.
ரேட்டிங் 3.5/5