
CHENNAI:
படம்: முஸ்தபா முஸ்தபா
நடிப்பு: சதீஷ், சுரேஷ் ரவி, மோனிகா சின்ன கோட்லா, மானசா சவுத்ரி, லிவிங்ஸ்டன், உமா, புகழ், சூப்பர் குட் சுப்பிரமணி,
தயாரிப்பு: பிரதீப் மகாதேவன்
இசை: எம் எஸ் ஜோனஸ் ரூபர்ட்
இயக்கம்: பிரவீன் சரவணன்
பி ஆர் ஓ : சுரேஷ் சந்திரா
(D’One), அப்துல் ஏ நாசர்.
இந்தப்படத்தில், நாயகனாக நடித்திருக்கும் நகைச்சுவை நடிகர் சதீஷ்,காதலித்துத் திருமணம் செய்து கொள்ளும் நேரத்தில் அந்தத் திருமணத்துக்குத் தடையாக ஒரு சிக்கல் வருகிறது. .சதீஷ் தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் பணியாற்றுகிறார். கதாநாயகி மோனிகா சின்னகொட்லா ஒரு டாக்டர். இருவரும் காதலிக்கிறார்கள் . இருவரது வீட்டிலும் திருமணம் செய்துக் கொள்ள சம்மதிக்கிறார்கள். ஒன்றும் பிரச்சினை இல்லை.திருமணத்திற்குச் சில தினங்களே உள்ள நிலையில், சதீஷ் வேறு ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகிறது. தனது நண்பர் மூலம் இந்த தகவல் அறிந்த சதீஷ், ஏற்கெனவே கறாரான காதலிக்கு இந்த விஷயம் தெரிந்தால் எல்லாமே முடிந்து விடும் என்று பயந்து அதை நீக்க முயற்சி செய்கிறார். அவரது முயற்சி வெற்றி பெற்றதா ?, அந்த வீடியோவின் பின்னணி மற்றும் அதை யார், எதற்காக இணையத்தில் பதிவேற்றினார்கள் ? என்பதைக் கலகலப்பாகச் சொல்வது தான் ‘முஸ்தபா முஸ்தபா’ படத்தின் மீதிக் கதை.
சதீஷ் நாயகனாக, தனது வழக்கமான நகைச்சுவை பாணியில் காமெடியையும் எமோஷனையும் சரிவிகிதத்தில் கலந்து கொடுத்துள்ளார். குறிப்பாக, சிக்கலில் மாட்டிக்கொண்டு அவர் காட்டும் பதற்றம் ரசிக்க வைக்கிறது.
சுரேஷ் ரவி கார்த்திக்கின் உயிர் நண்பனாக, கதையின் மற்றொரு நாயகனாக படம் முழுவதும் வரும் ஒரு வலுவான வாசு கதாபாத்திரத்தில் முதிர்ச்சியான நடிப்பை வழங்கியுள்ளார்.
நண்பராக நடித்திருக்கும் கருணாகரன், வழக்கம் போல் தனது அந்தந்த நேரத்து டைமிங் வசனங்கள் மூலம் சிரிக்க வைக்கிறார்.அவரது பாத்திரம் கதை திருப்பத்திற்கும் உதவுகிறது.
சுரேஷ் ரவி கார்த்திக்கு ஜோடியாக நடித்திருக்கும் மானசா செளத்ரியும் ,சதீஷுக்கு ஜோடியாக நடித்திருக்கும் மோனிகா சின்னகொட்லாவும் ஆரம்பத்தில் தலைகாட்டி, ஒரு பாடல் காட்சியில் வலம் வந்து,சில காட்சிகளோடு காணாமல் போய் கடைசியில் முகம் காட்டுகிறார்கள்.
சாம்ஸ், லிவிங்ஸ்டன், உமா, புகழ், சூப்பர் குட் சுப்பிரமணி என மற்ற துணைப் பாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்கள்.
இசையமைப்பாளர் எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட்டின் இசையில் பாடல்கள் அனைத்தும் கமர்ஷியல் அம்சங்களோடு கேட்கும் ரகமாக இருக்கிறது. பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
படம் முழுக்க வண்ணமயமாக இருக்கவேண்டும் என்கிற ஒற்றை நோக்கத்துடன் உழைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கே.எஸ்.விஷ்ணு ஸ்ரீ.
எழுதி இயக்கியிருக்கும் பிரவீன் சரவணன், பிரச்சனையில் சிக்கிக் கொள்ளும் நாயகன், தனது நண்பர்களின் உதவியோடு அந்த பிரச்சனையில் இருந்து மீள்வதற்கான போராட்டத்தை சொல்ல முயற்சி செய்தாலும் ஒரு சிக்கலான சூழலையும் அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதையும் கலகலப்பாக சொல்லியிருக்கிறார். ஒரு வீடியோவால் ஏற்படும் பதற்றத்தை நகைச்சுவையாக ரசிக்க வைத்திருக்கிறார்.
மொத்தத்தில், ‘முஸ்தபா முஸ்தபா’ காமெடி கலக்கல்.
ரேட்டிங் 3/5