
CHENNAI:
படம்: கருப்பு
நடிப்பு: சூர்யா, திரிஷா, ஆர் ஜே பாலாஜி, நட்டி, இந்திரன், சுவாசிகா, ஷிவதா, வேல ராமமூர்த்தி
தயாரிப்பு: எஸ். ஆர். பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு
இசை: சாய் அபயங்கர்
ஒளிப்பதிவு : ஜிகே விஷ்ணு
இயக்கம்: ஆர் ஜே பாலாஜி
பிஆர்ஓ : சதீஷ் S2 மீடியா.
சென்னையில் ஏழு கிணறு பகுதியில் இருக்கும் முதன்மை நீதிமன்றத்தில் பேபி கண்ணன் என்ற ஆர்.ஜே.பாலாஜி வழக்கறிஞராக இருக்கிறார். கேரளாவிலிருந்து மகளுக்கு முக்கிய அறுவை சிகிச்சை செய்வதற்காக 60 பவுன் நகைகளுடன் இந்திரன்ஸ் என்ற பெரியவர் புறப்பட்டு சென்னை வருகிறார். அவர்களிடம் வழிப்பறி நடத்தி இரண்டு பேர் நகைகளை கொள்ளை அடித்து செல்கிறார்கள். இந்த சூழலில் என்ன செய்வதென்று புரியாமல் தவித்த இந்திரன்ஸ் தன் மகளுடன் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் செய்கிறார். இரண்டு நாட்களில் அந்த நகையை பறிமுதல் செய்து குற்றவாளிகளையும் பிடிக்கிறது போலீஸ். ஆனால், திருடு போன மொத்தம் 60 பவுன் நகையில் 45 பவுன்தான் திருடனிருந்து மீட்டதாக அந்த இன்ஸ்பெக்டர் சொல்கிறார். அந்த 45 பவுன் நகைகளை நீதிமன்றத்திற்கு வந்து வாங்கிக் கொள்ளுமாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சொல்லவே தந்தையும், மகளும் நீதிமன்றத்திற்கு வருகின்றனர்.
அங்கு பிரபலமான வழக்கறிஞராக இருக்கும் ஆர்.ஜே.பாலாஜி, லஞ்சம் கொடுத்து தன் வழக்குகளில் வெற்றி பெறுவதோடு, நீதிமன்றத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்.அவர்களிடம் நீதி கிடைக்கும் என்று சிக்கிக் கொண்ட இந்திரன்ஸ் தன் மகளுடன் இணைந்து பலவித துன்பங்களை அனுபவிக்கிறார்.அங்கு கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட அனைத்து சட்டவிரோதமான வேலைகளையும் செய்யும் ஆர்.ஜே.பாலாஜி, தன்னை மீறி நீதிமன்றத்தில் எதுவும் செய்ய முடியாது, என்ற கட்டமைப்பை உருவாக்கி வைத்து இருக்கிறார். நடைமுறை சாத்தியங்கள் அற்றுப் போகும்போது நாடும் கடைசி புகலிடம் கடவுள்.எனவே,நீதிமன்றத்தின் வாயிலில் இருக்கும் கருப்பசாமியிடம் முறையிடுகிறார் இந்திரன்ஸ். ஏழை மக்கள் படும் பாட்டை கண்டு கொதித்து எழும் கருப்புசாமியின் தெய்வ சக்தி வழக்கறிஞர் சரவணனான சூர்யாவின் மூலம் தீர்வு ஏற்படும் கதையை ஒரு சுவாரசியமான பரபரப்பான வெற்றிக்குரிய அம்சங்களைக் கொண்டு உருவாகி இருக்கும் படம்தான் “கருப்பு”
மதுரை வழக்கறிஞர் சரவணன் கதாபாத்திரத்தில் சூர்யா உணர்ச்சிகரமாக நடித்திருக்கிறார். அமைதியான மனிதராக இருந்து, “கருப்பு” ஆக மாறும் தருணங்களில் சூர்யாவின் உடல் மொழி, கண் பார்வை, சண்டைக் காட்சிகளில் இருக்கும் ஆக்ரோஷம் எல்லாமே ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக மாறுகிறது.காவல்துறையினர் வழக்கறிஞர்கள் அனைவரும் பணம் ஒன்றையே குறியாக நினைக்கும் போது நியாயத்திற்காக அவர் முன் வரும்போது பார்வையாளர்கள் சிலிர்க்கிறார்கள்.
இதுவரை ஆர்ஜே பாலாஜி தான் நடித்த படங்களில் ஹீரோவாகத்தான் நடித்திருக்கிறார் இந்த படத்தில் அவரே பிரதான வில்லனாக நடித்திருப்பது புதிய களத்தை ஏற்படுத்தி தந்திருக்கிறது.
இப்படத்தில் த்ரிஷா இருக்கிறார்.அவரும் ஒரு வழக்குரைஞராக நடித்து கவனம் ஈர்க்கிறார். நீதிபதியாக நடித்திருக்கும் நட்டி அதற்குப் பொருத்தமாக இருக்கிறார்.சுவாசிகா,ஷிவதா,அனகா மாயா ரவி,சுப்ரீத் ரெட்டி,மன்சூர் அலிகான் ஆகியோரும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் சாய் அபயங்கர் படத்திற்கு மிகப் பெரிய பலம். பின்னணி இசை பல காட்சிகளை அடுத்த கட்டத்திற்கு தூக்கிச் செல்கிறது. பின்னணி இசை பல இடங்களில் நன்றாக இருந்தாலும் சில இடங்களில் கொஞ்சம் அதிகமான சத்தம் காதை பிளக்கிறது.
முழுக்க முழுக்க நீதிமன்றம் சார்ந்த காட்சிகள் என்றாலும் சிறிதும் சலிப்பு ஏற்படாத வகையில் காட்சிகளை சிறப்பாக ஒளிப்பதிவு செய்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு.
எழுதி இயக்கியிருக்கும் ஆர்.ஜே.பாலாஜி, தமிழ் சினிமாவில் நீதிமன்றங்களுக்குள் நடக்கும் லஞ்ச ஊழலை எந்த படத்திலும் அதிகமாக சொல்லவில்லை. ஆனால், இந்தப் படம் நெத்தியடியாக வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் கை கோர்த்துக்கொண்டு அப்பாவி ஏழை மக்களை ஏமாற்றுகிறார்கள்.. சாகடிக்கிறார்கள்.. என்ற ஒரு உண்மையை இந்தப் படத்தில் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி சொல்லியிருக்கிறார். அந்த உண்மையை சொன்னதற்காக பாலாஜிக்கு நமது பாராட்டுக்கள்.
மொத்தத்தில், பக்தி, ஆக்ஷன், சென்ட்டிமென்ட் கலந்த படம் “கருப்பு’
ரேட்டிங் 3/5.