’எக்ஸாம்’ இணையத் தொடர் விமர்சனம்!

74

 

 

சென்னை:

வால்வாட்சர் பிலிம்ஸ் சார்பில் புஷ்கர் – காயத்ரி மற்றும் கௌதம் செல்வராஜ், எஸ் குஹப்ரியா, எஸ் நந்தகுமார் தயாரித்திருக்கும் ‘எக்ஸாம்’ படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஏ.சற்குணம். அமேசான் பிரைம் வீடியோவில்  தமிழ் வெப் தொடர் எக்ஸாம் 7 எபிசோடுகளாக வெளிவந்துள்ளது.

துஷாரா விஜயன்,அதிதி பாலன் ,அப்பாஸ்,வசுந்தரா,நரேன் மணி,ஜெயசூர்யா, கிறிஸ்டினா மேரி, ஷர்மிளா அக்ஷதா அஜித், கவின்,சரவண சக்தி, என். அருண்மொழித்தேவன் ,மீனாள்,துரை சுதாகர் மற்றும் பலர் நடித்துள்ள இணையத் தொடர்தான் ‘எக்ஸாம்’

எந்த வசதியும் இல்லாத கிராமத்தில் ஏழை பெண்ணாக பிறந்த துஷாரா விஜயன்  படித்து ஐபிஎஸ் தேர்வு எழுதி போலீஸ் அதிகாரியாக வர எண்ணுகிறார். அதற்காக தனது தாய் கஷ்டப்பட்டு தன்னை படிக்க வைப்பதை மனதில் வைத்து கவனமாக படித்து தேர்வு எழுதுகிறார். ஆனால் பணக்கார வீட்டுப் பெண் அதிதி பாலன் தேர்வு எழுதாமல் ஐபிஎஸ் ஆவதற்கான ஊழலில் ஈடுபடுகிறார். பல சிரமங்களுக்கு மத்தியில் கஷ்டப்பட்டு படித்து, அரசுப்பணிக்கான போட்டித் தேர்வு எழுதச் செல்கிறார் துஷாரா.. அங்கே தான் அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது.எவ்வளவோ சிரமப்பட்டு போராடி படித்து தேர்வு எழுத சென்றால் அங்கே குறுக்கு வழிகளில் ,நோகாமல் அந்த தேர்வுகளை எழுதி வெற்றி பெற்று அரசுப் பணிகளை அடைய ஒரு கூட்டம் முயற்சி செய்கிறது. இதனால் வேதனையடைந்த துஷாரா விஜயன்  அவளது தாயின் ஆசைப்படி  ஐபிஎஸ் தேர்வு எழுதி  வெற்றி பெற நினைத்த  இத்தனை வருட உழைப்பும், தியாகமும் ஒரே நொடியில் பறிக்கப்படுவதை தடுக்க அந்த பணக்கார வர்க்கத்தினரை தட்டி கேட்கிறார்.

எந்தத் தப்பும் செய்யாத அப்பாவி   துஷாரா விஜயன்    மீது வீண் பழி சுமத்தி, அவளைத் தவறான காரணங்களுக்காக காவல்துறை சிறையில் அடைக்கிறது. சிறிது காலத்துக்குப்பின் சிறையிலிருந்து வெளியே வந்த துஷாரா விஜயன் போட்டித் தேர்வு மோசடிகளில் சம்பந்தப்பட்டவர் என்று சந்தேகப்பட்டு போலீஸ் டிஎஸ்பி ஆன அதிதி பாலனைக் கடத்துகிறார்.அதன் பிறகு அதிதி பாலன் பெயரில் துஷாரா விஜயன், டி.எஸ்.பியாக பதவி ஏற்றுக்கொள்வதோடு, அந்த இடத்தில் நடக்க இருக்கும் அரசு தேர்வு மோசடியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். இந்த முயற்சியில் அவர் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதை பல திடுக்கிடும் திருப்பங்களுடன் சுவாரஸ்யமாக விடை அளிக்கிறது ‘எக்ஸாம்’ வெப்தொடர்.

 துஷாரா விஜயன், இந்த தொடரில் போலியான காவலதிகாரியாக நடித்திருந்தாலும், ஒரு உண்மையான காவல் அதிகாரிக்குரிய மிடுக்கு,துணிவு உள்ளிட்ட எல்லா அம்சங்களையும் நடிப்புலும் உடல்மொழியிலும் நன்றாக வெளிப்படுத்தி வரவேற்புப் பெறுகிறார். கிராமத்துப் பின்னணியில் இருந்து வந்து, அதிகார வர்க்கத்தால் பாதிக்கப்பட்டு, பின் ஒரு போலி போலீஸ் டிஎஸ்பி கதாபாத்திரத்தில் துஷாரா அசத்தியுள்ளார்.

மரமல்லி கதாபாத்திரத்தில் வரும் அதிதி பாலன், அந்த வேடத்துக்கேற்ற அம்சங்களைச் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.சண்டைக் காட்சிகளில் அவருடைய வேகம் ஆச்சரியப்பட வைக்கிறது.

சிறை அதிகாரி ஜெயச்சந்திரனாக வரும் அப்பாஸ், சரண்யாவாக வரும் வசுந்தரா, குமரேசனாக வரும் நரேன் மணி, மற்றும் ஜெயசூர்யா, கிறிஸ்டினா மேரி, ஷர்மிளா அக்ஷதா அஜித், கவின், சரவண சக்தி, என்.அருண்மொழித்தேவன், மீனாள், துரை சுதாகர் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

கதை முழுவதும் மலைப்பிரதேசத்தில் நடப்பதால்  அருண் அமரேந்திரனின் ஒளிப்பதிவில்  காட்சிகள் கண்களுக்கு விருந்து படைத்திருக்கிக்கிறது.

பின்னணி இசை காட்சிகளின் வேகத்திற்கும், விறுவிறுப்புக்கும் முக்கியத்துவம் கொடுப்பதை விட கதாபாத்திரங்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பயணித்திருக்கிறது.

எழுதி இயக்கியிருக்கும் சற்குணம், தமிழ்நாட்டில் நடைபெற்ற அரசு தேர்வு மோசடிகளையும், அதன் பின்னணியையும் உண்மைக்கு நெருக்கமாக சொல்லியிருக்கிறார்.  ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தின் மாணவ, மாணவிகளின் கனவுகளை, லட்சியங்களை கொடூரமாகக் கசக்கி எறியும் இத்தகைய அடூழியங்களை, ‘எக்ஸாம்’ என்ற ஏழு எபிசோடுகள் கொண்ட வெப்தொடரில் தோலுரித்துக் காட்டியிருக்கிறார். அண்மையில் இந்தியாவில்   முறை கேடாக வினாத்தாளை கசிய விட்டதற்காக, நடத்தப்பட்ட நீட் தேர்வையே ரத்து செய்திருக்கும் இன்றைய சமூகச் சூழலில், இந்த வெப் தொடர் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது. இயக்குனர்   சற்குணத்திற்கு பெரிய அளவில் பாராட்டுக்கள்.

மொத்தத்தில்  எக்ஸாம்- அனைவரது கவனத்தை கவரும்.

ரேட்டிங் 3.5/5.