பாலன் தி பாய் – திரை விமர்சனம்

12

 

மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியை எட்டிய ஆவேஷம் பட இயக்குநர் ஜித்துமாதவன் கதை எழுத, இன்னொரு மாபெரும் வெற்றிப்படமான மஞ்ஞுமல் பாய்ஸ் பட இயக்குநர் சிதம்பரம் இயக்கியிருக்கும் படம் .
நம்பியவரால் வஞ்சிக்கப்பட்ட ஒரு பெண்ணின் ஓட்டமும் நடையுமான பயணம் தான் இந்தப் படத்தின் கதை. இதை சமூகத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கோணத்தில் தந்து இருக்கிறார்கள்.
நாயகியாக நடித்திருக்கும் ஃபர்சானா பலதிங்கல் தான் இந்த கதையின் ஒட்டுமொத்த ஜீவன். ஆரம்பக்
காட்சியிலேயே கர்ப்பிணியாக சிறையில் இருக்கும் நாயகியை காட்டுகிறார்கள்.
அங்கேயே குழந்தை பிறக்கிறது. ஐந்து வருடங்களுக்குப் பிறகு சிறையிலிருந்து தனது குட்டி

 

மகனுடன் வெளியே வரும் அவர், இனி.எவர் மீதும் நம்பிக்கை வைப்பதாக இல்லை. தனக்கும் மகனுக்குமான புதிய பெயர், புதிய அடையாளத்துடன்
 பல்வேறு இடங்களுக்குப் பயணிக்கிறார்.
ஒவ்வொரு இடத்திலும் ஓர் அடையாளம் அவசியமாகிறது.
ஒருகட்டத்தில் இனி மேலும் ஓடிக்கொண்டு இருக்க வேண்டாம் என்று எண்ணுபவர் நிரந்தரமாக வாழ முடிவு செய்கிறார்.
 அப்படி ஒரு பங்களா வீடும் கிடைக்கிறது
மகன்கள் வெளிநாட்டில் இருக்க, இங்கு தனியாக இருக்கும் வயதான பெண்மணியை பராமரிக்கும் வேலை கிடைக்கிறது. தினமும் மதியம் வெளிநாட்டில் இருந்து தொலைபேசியில் வரும் மகனுக்கு அந்த தாயாரின் அன்றைய நிலவரம் இவளால் சொல்லப்பட வேண்டும்.

 

ஆரம்பத்தில் இவளை பிடிக்காத பாட்டிக்கு போகப் போக பிடித்து விடுகிறது.
இதற்கு பிறகு தான் மகனை அந்த ஊரில் உள்ள பள்ளியில் சேர்க்கிறாள்.
இப்போது மறுபடியும் அவள் வாழ்வில் அதிர்ச்சி. எதிர்பாராத விதமாக அந்த பாட்டி செத்துப் போக…
பாட்டி இறந்தது அவரது வெளிநாட்டு மகனுக்கு தெரிந்தால் வேலை போய் விடும். மகனின் படிப்பு கெடும்.
அதனால் மறைக்கிறாள். பாட்டி மரணம் குறித்து அவள் வெளிநாட்டு மகனிடம் கூட சொல்லாமல் மறைத்து விடுகிறாள்.
ஆனால் அவள் போதாத நேரம், இரண்டோரு நாளில் பாட்டியை தேடி அவள் உறவினர் இருவர் வர…அங்கு நடந்த

 

 

களேபரத்தில் அந்த இருவரும் உயிரை விட்டுவிட…
இப்போது நாயகியின் புதிய பயணம். இந்த அவசர பயணத்தில் மகனை தொலைத்து விடுகிறாள். பள்ளிக்கு சென்ற மகன் திரும்பி வருவதற்குள் அந்த பங்களா வீட்டிலிருந்து அவள் தப்பித்தாக வேண்டிய கட்டாயம் மகனை தொலைக்க காரணம் ஆகி விடுகிறது.
ஐந்து வருடம் கழித்து தாயும் மகனும் சந்திக்கிறார்கள். இப்போது புதிய பெயர் புதிய அடையாளத்துடன் அவர்கள் பயணம் தொடர்கிறது.
தவறான அடையாளம் பெற்ற பெண் தன் மீது விழும் தப்பான பார்வையில் இருந்து தன்னை தன் மகனை காத்துக் கொள்ள தனக்குத்தானே அவள் ஒரு முகமூடியை போட்டுக்கொள்ள வேண்டியது ஆகிறது என்பதை அழகான கவிதை நடையில் சொல்லியிருக்கிறார்
இயக்குனர்.
நாயகியாக வரும் ஃபர்சானா பலதிங்கல் கேரக்டர் தான் படத்தின் அடி நாதம். அதற்கு ஏற்ப அந்த கேரக்டாகவே மாறி மொத்த படத்தையும் தன் தோளில் சுமந்து இருக்கிறார் நாயகி. யாரையும் எளிதில் நம்பாத அந்த பார்வை ஒன்றே போதும் அவருக்கு.
சோறு போட்டு வேலையும் கொடுத்த டீக்கடை பெரியவரின் அன்பு கூட அவளுக்குள் சந்தேக விதையை தான் தூவுகிறது . இந்த காட்சியிலிருந்தே அவரது நடிப்பு சாம்ராஜ்யமும் தொடங்கி விடுகிறது.
சிறுவன் பாலனாக நடித்திருக்கும் ஆதிசேஷன் கே.ஆர், இந்தவயதிலேயே இப்படி ஓர் நடிப்பா? என்று வியக்குமளவுக்கு தனது கேரக்டரை நமது மனதுக்குள் ஆழப் புதைத்து விடுகிறார்.
வளர்ந்த பாலனாக நடித்திருக்கும் ஜினன்,காவலராக நடித்திருக்கும் ஜீன் பவுல் லால்,காவல்துறை உதவி ஆய்வாளராக கிரிஷ் ஏ.டி ஆகியோர் இயல்பான அதே நேரம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
சிறப்புத் தோற்றத்தில் டொவினோ தாமசும் வந்து போகிறார்.
ஒளிப்பதிவாளர் ஷைஜு காலித்தும் நாயகியின் இந்த பயணக் கதைக்குள் பயணப்பட்டு இருக்கிறார்.
இசையமைப்பாளர் சுஷின் ஷாம், இந்த பயணத்தை தனது இசையால் அழகாகவே நிரப்பி இருக்கிறார்.
மலையாள திரை உலகில் வெற்றியின் அடையாளமாகவே மாறிப்போன ஜித்துமாதவனின் கதையை
இன்னொரு வெற்றி இயக்குனரான சிதம்பரம், உணர்வுகளின் சங்கமமாக ஓட விட்டிருக்கிறார். வாழ்க்கையில் அடிபட்டு அடிபட்டு ஒரு வலிய பாதுகாப்பு கவசம் அணிந்த பெண்ணாக மாறிப் போகும் பெண்ணின் பயணத்தின் மூலம் சமூகத்துக்கும் புதிய செய்தி சொல்லி இருக்கிறார்.
பிளஸ்: எடுத்துக்கொண்ட கதைக்களம்.
பிளாஷ்: அதை கொஞ்சமும் எதிர்பார்ப்பு குறையாமல் காட்சிப்படுத்திய இயக்கம்.
ரேட்டிங்: 3.5/ 5