
பச்சைமுத்து பழனிமாணிக்கம் பிரபல தொழிலதிபர். மக்களை தங்கள் சொத்தாக பாவித்த தலைவர்களை புறக்கணித்த தமிழக மக்களைப் பழிவாங்கும் நோக்கில் அவர் ஒரு ஆபத்தான அரசியல் சதுரங்க ஆட்டம் ஆடுகிறார்.
சின்னச் சின்னப் போராட்டங்கள் மூலம் சில்லறை பார்த்து மக்களிடம் பிரபலமாகி வரும் தமிழ்க் குடிமகன் என்ற நபர், ஒரு சமயத்தில் தொழிலதிபர் பச்சைமுத்து பார்வையில் படுகிறார். அவரைப் பார்த்ததும் அரசியலில் நான் உருட்டப் போகும் பகடைக்காய் இவர் தான் என்று முடிவு செய்கிறார்.
தேர்ந்தெடுத்த நபருக்கு இன்னும் விளம்பரம் வேண்டுமே. அதற்காக தனது செல்வாக்கை பயன்படுத்தி நடிகர் ஆக்குகிறார்.
அவரது நேரம், இந்த தமிழ்க் குடிமகன் நடிகராகவும் கிளிக் ஆகி விடுகிறார்.
பணம் குவிகிறது. புகழிலும் உச்சம் பெறுகிறார்.
நடிகரின் இந்த புகழை எதிர்பார்த்து காத்திருந்த தொழில்
அதிபர், இப்போது ‘உள்ளே வெளியே’ என்ற பெயரில் ஒரு கட்சி தொடங்கி நடிகரை தேர்தலில் நிறுத்துகிறார்.
தேர்தல் நெருங்கும் வேளையில் ராதா ரவியும் அதிகாரப்பூர்வமாக அக்கட்சியில் இணைய, எதிர்பாராத திருப்பமாக தமிழ்க் குடிமகன் ஒரு மிகப்பெரிய விபத்தில் சிக்கி சுயநினைவை இழந்து மேல் சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அனுப்பப்படுகிறார். இக்கட்டான இந்தச் சூழலில், முதல்வர் வேட்பாளர் இல்லாத குறையைத் தீர்க்க தொழிலதிபர்
ஒரு அதிரடி உத்தியைக் கையாளுகிறார். “எங்கள் கட்சி வெற்றி பெற்றால், ஓட்டுப் போட்ட வாக்காளர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து முதலமைச்சராக்கு
வோம்” ,( ‘நீங்களும் ஆகலாம் சி.எம்.’) என்ற கவர்ச்சிகரமான வாக்குறுதியை முன்வைத்து தேர்தலில் வெற்றி வாகை சூடுகிறார். அவர் முதலமைச்சராக யாரை பதவியேற்க வைத்தார் என்பது கிளைமாக்ஸ்.
தமிழ்க் குடிமகனாக ரவி மரியா. முதன்முறையாக முதன்மைப் பாத்திரத்தில் நாயகனாக உருவெடுத்துள்ளார். பெரிய அரசியல் மேடைகளை நிஜ வாழ்வில் கண்டவர் என்ற முறையில் திரையிலும் அந்த நடிப்பு சரளமாக வருகிறது.
அக்சரா விஜய் ஒரு கவர்ச்சிப் பாடலுக்கு குத்தாட்டம் போட்டு விட்டு போகிறார்.
தொழிலதிபர் பச்சமுத்து பழனி மாணிக்கம் என்ற கனமான கேரக்டரில் ராதாரவி இயல்பாக வந்து போகிறார். இவர் ஆடும் அரசியல் பகடை ஆட்டம் ரசிக்க வைக்கிறது.
பழ.கருப்பையா, நாஞ்சில் சம்பத் அரசியல் வசனங்கள் மூலம் சிரிக்கவும் வைக்கிறார்கள் சிந்திக்கவும் வைக்கிறார்கள்.
நாயகனின் தோழனாக கஞ்சா கருப்பு, கதாநாயகனின் நம்பிக்கைக்குரிய நண்பனாக அக்னி எஸ். வருண், மதுபாட்டிலுக்குக் கூடுதலாகப் பத்து ரூபாய் வசூலிப்பதை ஆவேசமாக எதிர்க்கும் ஆட்டோ ஓட்டுநராக இயக்குனர் பேரரசு, இன்றைய டிஜிட்டல் காலத்து அரசியல் யூடியூபராக பயில்வான் ரங்கநாதன் மற்றும் இயக்குனர் ரங்கநாதன் நேர்த்தியான தங்கள் பாத்திரப் படைப்புகளில் கலகலப்புக்கும் உத்தரவாதம் தருகிறார்கள்.
துளசிராமன் இசையில் பாடல்கள் கேட்கலாம் ரகம்.பின்னணி இசையும் ஓகே.
ஒளிப்பதிவாளர் கார்த்திக் எஸ். நாயரின் கேமரா தேர்தல் பிரசாரக் கூட்டங்களை அழகுற கண் முன் நிறுத்துகிறது.
இயக்குனர் ராம்தேவ் தற்போதைய தமிழக அரசியலில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை அவசர கோலத்தில் அள்ளித் தெளித்து இருக்கிறார்.
அன்றைய தமிழக அரசியலை இன்றைய அரசியலோடு ஒப்பிட்டு கதை பண்ணியிருப்பவர் அதில் பாதிக் கிணறு மட்டுமே தாண்டி இருக்கிறார். முதலமைச்சர் யார் என்ற அந்த கிளைமாக்ஸ் நிஜமாகவே அதிர்ச்சி தருகிறது.
பிளஸ்: பூவுக்குள் பூகம்பமாய் ராதாரவி கேரக்டரும் அதில் அவர் நடிப்பும்.
மைனஸ்: அழுத்தம் போதாத திரைக்கதை.
ரேட்டிங்: 3/ 5.