
சென்னை:
படம்: லவ் ஓ லவ்
நடிப்பு: பவிஷ்,, நாக துர்கா, செல்வராகவன், கே எஸ் ரவிக்குமார், வனிதா, ஆதித்யா கதிர், சௌந்தர்யா, அஸ்வத் ரம்யா சுப்பிரமணியன்
தயாரிப்பு: தனஞ்ஜெயன்,, தினேஷ் ராஜ், பிரதீப் பார்த்திபன்
இசை: பாக்சன்
ஒளிப்பதிவு : பி ஜி முத்தையா
இயக்கம்: மகேஷ் ராஜேந்திரன்
பிஆர்ஓ : ரேகா.
ஒரு நடுத்தரக் குடும்ப இளைஞர் அப்பா அம்மாவுக்குக் கட்டுப்பட்டவர் சரியாக வேலைக்குப் போய் ஒழுங்காக சம்பளம் வாங்கி அதை அப்படியே வீட்டில் கொடுப்பவர் ஆகிய நற்குணங்களைக் கொண்ட இளைஞர் வாழ்வில் காதல் வருகிறது. காதலியால் எல்லாம் உருமாறுகிறது.இளைஞர் மட்டுமின்றி அவர் குடும்பம் மொத்தமும் அவமானப்பட வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனால் காதலே வேண்டாமென ஒதுங்கும் அவரை விடாமல் துரத்துகிறார் காதலி. காதலுக்காக கணக்கில்லாமல் செலவு செய்யும் காதலன், ஒரு கட்டத்தில் கடன் சுமையில் சிக்கிக் கொள்கிறார். காதல் முறிவைத் தொடர்ந்து இருவரின் பிரச்சினை போலீஸ் நிலையம் வரை செல்ல, அங்கு வைக்கப்படும் ஒரு வித்தியாசமான நிபந்தனை கதையை புதிய திசைக்கு அழைத்துச் செல்கிறது. அதன் பிறகு அந்த காதலன்-காதலியின் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதுதான் ’லவ் ஓ லவ்’ படத்தின் மீதிக் கதை.
நாயகன் பவிஷ் தனது கதாபாத்திரத்திற்கு தேவையான அப்பாவித்தனத்தையும் உணர்வுகளையும் இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார். நாகா துர்காவும் தனது கதாபாத்திரத்தை அளவான நடிப்பால் நம்பகமாக உருவாக்கியுள்ளார்.
கே எஸ் ரவிக்குமார் தன் கதாபாத்திரத்தில் ஒரு மிடில் கிளாஸ் அப்பாவாக எப்படி இருப்பாரோ அதை கதாபாத்திரமாகவே நம் மனதில் இடம் பிடிக்கிறார். செல்வராகவன் ஒரு காவல் அதிகாரியாக வருகிறார் படத்திற்கு அவர் ஒரு பக்க பலம் தான் வனிதா விஜயகுமார் மாதர் சங்கத் தலைவியாக படத்திற்கு முழு முயற்சியும் தந்துள்ளார்.
பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு திரைக்கதையில் இருக்கும் அழகுகளைக் காட்சிகளாக்கி இரசிக்க வைத்திருக்கிறது.
பாக்சன் இசையில் பாடல்கள் இரசிக்க வைத்திருக்கின்றன.பின்னணி இசை,காட்சிகள் வெளிப்படுத்தும் உணர்வுகளை மேலும் உயர்த்திப் பிடித்திருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன். இப்படத்தின் முதல் பாதி முழுக்க காதல், நகைச்சுவை, இளமைத் துள்ளல் என நகர்கிறது. இரண்டாம் பாதியில் கதாபாத்திரங்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களும், அவர்கள் எதிர்கொள்ளும் மனப் போராட்டங்களும் கதைக்கு கூடுதல் வலிமையை அளிக்கின்றன. நல்ல கருத்து, வலுவான மையக்கரு, அனுபவம் வாய்ந்த நடிகர்களின் நடிப்பு ஆகியவை படத்திற்கு பலமாக இருந்தாலும், திரைக்கதையில் இன்னும் கூடுதல் இறுக்கமும், கதாநாயகனின் கதாபாத்திர வடிவமைப்பில் கூடுதல் முதிர்ச்சியும் இருந்திருந்தால் படம் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.
மொத்தத்தில், ‘லவ் ஓ லவ்’ இளைஞர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.
ரேட்டிங் 3/5.